சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விரிவாக விளக்குகின்றன. ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விவரித்தார். அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கிக் கூறினார்.
மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி, மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விரிவாக எடுத்துரைத்தார் சிவபெருமான். பின் அந்த அக்னிப் பிழம்பாக இரண்டு முகங்கள், ஏழு கைகள், ஏழு நாக்குகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் திகழக் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு வியந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுமாறு வேண்டிக்கொண்டாள்.
தன் செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண் பொடியை வழித்துக் கொடுத்து, ‘இதனைக் காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய்’ என்று அருளினார். அதனால் அது சிவவீர்யம் எனறு அழைக்கப்பட்டது. தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசிக்கொண்டதால் சிவ கவசம் என்றானது.
எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர, அவர் அதனை உட்கொண்டார். அதனால் அவர் அளப்பரிய சக்தியைப் பெற்றார். இது, அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை, நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்ந்து பின்னர் பூலோக பசுக்களிடமும் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு விபூதியைத் தயாரித்து வருகின்றோம்.
திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக நோய்களைத் தீர்க்கும். முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி, வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொருவகை நோய்களையும், பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்குவகை உபாதைகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்துவகை உடல்நலக் கேடுகளையும் தீர்க்கும் மகிமை கொண்டது.
இந்தப் பலன்களெல்லாம் கடையில் விற்கும் காகித சாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம, நமசிவாய என சொல்லி உபயோகித்தால் மட்டுமே கிட்டும்.
Really appreciate you for this information
ReplyDelete