வாழ்க்கையில் முக்கிய கட்டமான திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்தின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ எங்கு சென்று வேண்டினால் காரிய சித்தியாகும்? என்று இப்பொழுது பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தட்டாத்தி மூலை வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கோயில் சின்ன கோயில் தான் எனினும் இங்குப் பிற கோயில்களில் கிடைக்கப்பெறாத நிகழ்வுகள் இங்கு கிடைக்கப்பெறும்.
இராமாயண காலத்தில் இராமபிரான் தாடகியைத் துரத்தி வந்ததாகவும் அந்த அரக்கி இவ்வூரில் ஓர் இரவு ஒளிந்துகொண்டு தங்கியதாகவும் மறுநாள் இராமபிரானால் வதம் செய்யப்பட்டார் எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே, தான் தாடக + அந்த + புரம் = தாடகாந்தபுரம் என இந்த ஊர் பெயர் வழங்கலாயிற்று. ஆனால் இப்போது இந்த ஊரின் பெயர் தட்டாத்திமூலை என்பது ஆகும்.
அம்பிகை கயிலையில் இருந்து இறைவனுடன் திருவாஞ்சியத்திற்கு மானிட ரூபம் கொண்டு மக்களோடு மக்களாக கார்த்திகை ஞாயிறு அன்று குப்தகங்கையில் புனித நீராட வந்த விசாலாட்சி கால்வலி தாங்க முடியாமல் இந்த வளப்பாற்றங்கரையில் அமர்ந்ததோடு சிவபெருமானை மேற்கு முகமாக வைத்து பூஜித்தாள். அந்த லிங்கத்தை வடகிழக்கு மண்டபத்தில் வைத்துள்ளனர். தற்போது பெரிய பாணம் மட்டும் உள்ளது. இதனால் இங்கு அம்பிகை அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றார்.
சோமவாரத்தில் வளப்பாற்றங்கரையில் நீராடி வில்வத்தால் மேற்கு நோக்கிய காசி சிவலிங்கத்தையும் விஸ்வநாதரையும் வழிபடும் பக்தர்கள் காசிக்கு சென்ற பலனை பெறலாம்.
இத்தலத்து சிவபெருமானை பூஜித்தால் நூற்றியெட்டு லிங்கங்களைப் பூஜித்த பலனோடு குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அம்பிகையின் சிறப்பு திருத்தலங்கள் பலவற்றிலும் தமிழகத்துச் சிவாலயங்கள் பெரும்பாலானவற்றில் அம்பிகை நின்ற கோலத்தில் தான் காட்சி தருகிறாள். நம் தாடகாந்தபுரத்தில் மட்டுமே அம்பிகை விசாலாட்சி என்னும் பெயருடன் அமர்ந்த நிலையில் ஒருகையில் தாமரை மலர் ஏந்தி அருள் பாலிக்கிறாள் என்பது இங்கு தனிச் சிறப்பு.
இந்த திருக்கோயிலில் இருகால பூஜை நடைபெறுகிறது. திருமணம்-புத்திரபாக்கியம் ஆகியவை நல்லவிதமாக அமைய விசாலாட்சி அம்பிகையை பிரார்த்தித்துச் செல்லலாம்.
கருவறை கோட்டத்தில் தென்முகன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சூரியன் சனி பகவான் உள்ளனர். வடகிழக்கில் ஒரு தீர்த்த கிணறும் அமைந்துள்ளது.
திருவாரூரிலிருந்து செல்வபுரம் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து குடவாசல் ஆனைக்குப்பம் வழியாகவும் நன்னிலம் செல்லும் பேருந்தில் செல்லலாம்.
No comments:
Post a Comment