நம் வீட்டில் நடைபெறும் முக்கிய விசேஷங்களில் கிரகப்பிரவேசமும் ஒன்றாகும். வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். பலருக்கு சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது ஒரு மாபெரும் கனவாகக் கூட இருக்கும்.
குருவி சேர்ப்பது போன்று சிறுக சிறுக சேமித்தும், நகை வீற்றும், கடன் வாங்கியும் ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டிற்குச் செல்ல நல்ல நாள் பார்ப்பது அவசியமல்லவா.. ஆம்! கிரகப்பிரவேசம் செய்வதென்றால் நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம், உகந்த லக்னம் என அனைத்தும் பார்க்க வேண்டியது அவசியமாகும். இந்த கிரகப்பிரவேச சடங்கை முறையாகச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் :
கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனை புகுவிழாவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் செய்யலாம் என்கிறனர் ஜோதிடர்கள். இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்தால் குடும்பம் தழைக்கும், சந்ததிகள் கடந்தும், வீடும் வாசலும் நிலைக்கும் என்பது ஐதீகம்.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை :
பொதுவாக கிரகப்பிரவேச ஹோமத்தை அதிகாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள்ளும், லக்ன முகூர்த்தங்களான 6.00 முதல் 7.00 ஆகிய நேரங்களில் செய்வதே நல்லது. 9 மணிக்கு மேல் நல்ல நேரமாக இருந்தாலும் கிரகப்பிரவேசம் செய்யாமல் தவிர்ப்பதே நல்லது.
கிரகப்பிரவேச மனையில் அமரும் கணவன் - மனைவி ஆடம்பரமான உடைகளை அணியாமல் பாரம்பரிய வேட்டி, சேலை அணியலாம்.
கிரகப்பிரவேசம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரகபிரவேச சடங்குகளை பதற்றப்படாமல் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும். கிரகப்பிரவேச பூஜை செய்ய வரும் அர்ச்சகருக்குப் பூஜைக்கு வாங்கிவைத்த பொருட்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். அவர் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை என வரிசையாக ஹோமம் செய்து கலச தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பார்.
வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழங்க அழைத்து வர வேண்டும்.
கோ பூஜை செய்யும் போது கணவன் மனைவி இருவரும் பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து அதன் கன்றிருக்கும் பொருட்டு வைத்து துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்தி கீரையை அந்த பசுமாடுக்கு உண்ணுபதற்குக் கொடுக்க வேண்டும்.
"ஓம் சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசி நீ
பாவநீ சுரபி ஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே"!
என்று வணங்கி கூற வேண்டும்.
ஏ! கோ மாதாவே சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும் உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ - தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.
அதன்பின் சுபமுகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, மஞ்சள், குங்குமம் வைத்து பசும்பால் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். பால் நன்றாக பொங்கவிட வேண்டும். அதை டம்ளரில் ஊற்றி சாமிக்கு வைத்து நிவேதனம் செய்து ஆர்த்தி காட்ட வேண்டும். மறக்காமல் வீட்டில் உள்ள கதவுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாவிலை, தோரணம் கட்ட வேண்டும்.
கிரகப்பிரவேசம் செய்யக்கூடாத மாதங்கள் :
ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டைப் புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என எதையும் செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
No comments:
Post a Comment