பொதிகை மலையில் விழும் மிகப் பெரிய அருவியே பாணதீர்த்தம். கோடை காலத்திலும் வற்றாத அருவி இதுவாகும். இந்த புண்ணிய அருவியில் ஆடி அமாவாசை அன்று நீராடினால் பாவங்கள் விலகும். தாமிரபரணி ஆறு, பொதிகையில் இருந்து ஓடிவரும் போது 122 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது.
இந்த அருவிக்குச் செல்ல தாமிரபரணி அணைக்குள் படகில் செல்ல வேண்டும். நீராடிவிட்டு மீண்டும் படகில் திரும்பலாம். இந்த தீர்த்தத்திற்கு ஒரு மகிமை உண்டு. இது உடலின் அழுக்கை மட்டும் போக்குவதில்லை. உயிரில் கலந்துள்ள அழுக்கையும் போக்குகிறது. இந்த அருவிக்கு திருநெல்வேலியில் இருந்து பொதிகை மலையில் உள்ள காரையார் வரை பஸ்சில் வரவேண்டும். பாபநாசத்தில் இருந்து காரையார் வரை மலைப்பாதை. காரையாரில் இருந்து கவனமாக படகில் 143 அடி கொள்ளளவு உடைய அணையைக் கடக்க வேண்டும்.
பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து அய்யனார் கோவில் இருக்கிறது. இது ஒரு அய்யப்ப தலமாகும். சபரிமலைக்கும் முந்திய தலம் என்று இதனைக் கூறுவர். இங்கு சாஸ்தா சிவலிங்க வடிவமாகவும் காட்சி தருகிறார். இவரை வணங்குவதன் நோக்கம் காலத்தே மழைபெய்ய வேண்டும் என்பதுதான். இதனால் கிராம மக்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். மழை இல்லாத காலங்களில் இந்த அய்யனுக்கு பூஜை செய்தால் மழை பொழியும் என்பது ஐதீகம். அதனால் தான் இவர் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
ஆடி அமாவாசை திரு நாளில் பாணதீர்த்தத்தில் நீராடி உங்கள் பாவத்தை போக்கு வதோடு மட்டுமல்ல. ஊருக்கெல்லாம் மழை பொழிந்து காடு, கழனி விளைந்திட வேண்டிக்கொண்டால் அய்யனின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும். ஆடி அமாவாசை திருநாள் மட்டுமல்ல. எல்லா அமாவாசை நாட்களி லும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
சிவனின் திருமணத்தின் போது உலகை சமநிலைப்படுத்த தென் பொதிகைக்கு அகத்தியர் வந்தது அனைவரும் அறிந்ததுதான். ஒரு நாள் அகத்தியர் தாமிரபரணில் கரையில் தவம் மேற்கொண்டிருந்த போது அசரிரீ ஒன்று, இப்போது வானில் ஒரு ஜோதி தோன்றும். அதை கவனி என்றது. அகத்தியரும் கண் விழித்துப் பார்த்தார்.
அப்போது சிவனுக்கும், பார்வதிக்கும், விநாயகர், முருகன், தர்மசாஸ்தா (சொரிமுத்து அய்யன்) ஆகியோர் பூஜை செய்த காட்சி தெரிந்தது. அப்படி தெரிந்த நாள் ஆடி அமாவாசை நாளாகும். மனமகிழ்ச்சி அடைந்த அகத்தியர் இந்த தலத்தில் ஆடி அமாவாசை அன்று யார் வந்து நீராடி இங்கு இருக்கும் சொரிமுத்து அய்யனை வழிபட்டால் சகல நலனும் கிடைக்கும் என்றார். அதனால் தான் ஆடி அமாவாசை இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment