நல்ல குணம் கொண்டவர்களை 'தங்கக் கம்பி' என்று புகழ்வார்கள். ஆனால் ஒருமுறை கடவுளிடம் கண்ணீர் வடித்தது தங்கம்.
“ஏன் அழுகிறாய், அனைவரும் உன்னைத் தானே உயர்ந்தவராக நினைக்கிறார்கள்,” என்றார் கடவுள்.
“ஆம் சுவாமி! மக்கள் என்னைப் போற்றுகிறார்கள். பெட்டிக்குள் வெல்வெட் துணி விரித்து பாதுகாப்பாக வைக்கிறார்கள். ஆனாலும் ஒரு வருத்தம் எனக்கு இருக்கிறது'' என்றது.
“பொற்கொல்லர் உன்னை தீயிலிட்டு உருக்குகிறாரே! அது சுடுகிறதா! சுத்தியால் தட்டும் போது வலிக்கிறதே? அதனால் சிரமப்படுகிறாயோ?” எனக் கேட்டார் கடவுள்.
''இல்லை சுவாமி! இல்லை... அதனால் தானே நான் மின்னும் ஆபரணமாக மாறி பெருமையுடன் வாழ்கிறேன். கோயிலில் கவசமாக சுவாமிக்கு சாத்துகிறார்கள். மக்கள் பக்தி பரவசத்துடன் என்னையும் சேர்த்து வழிபடுகிறார்கள். சுவாமியை விட, கவசமான என்னைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்'' என்றது.
“அப்படியானால் என்ன தான் உனக்கு குறை?” என்றார் கடவுள். “மதிப்பு மிக்க என்னை எடை போடும் போது, தராசின் மற்றொரு தட்டில் எளிய குண்டுமணியை வைக்கிறார்கள்'' என்றது.
''அட அசடே! உண்மை அறியாமல் உளறுகிறாய். மற்றவர்களின் உதவி இல்லாமல் யாராலும் வாழ முடியாது. உலகில் உயர்வு என்பதோ, தாழ்வு என்பதோ கிடையாது. எல்லாமே சமம்!'' என்றார்.
No comments:
Post a Comment