Tuesday 3 September 2019

ஈஸ்வரனுக்கும் பூக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன ?


தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள கண்டியூருக்கு மேற்கே 4 கி.மீ.  தொலைவில் உள்ள பூந்துருத்தி தலத்தில் புஷ்பவனநாதராக ஈசன் அருள்கிறார். தும்பைப் பூவை விரும்பிச் சூடிடும் பரமனை தும்பைசூடி என திருமுறைகள் போற்றுகின்றன. காஞ்சிபுரம் பங்குனி உத்திர ஏகாம்பரேஸ்வரர் ஏலவார்குழலி  திருமணத்தின் போது தும்பை மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. 

மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பூவனத்தில் ஈசன் பூவண்ணன், பூவணத்தவன், பூவணன் எனும் பெயர்களால் வணங்கப்படுகிறார். ஈசனின் திருக்கோலங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி பொற்றாமரை மலரில் அமர்ந்து கைகளில் செந்தாமரையையும் நீலோத்பலத்தையும் ஏந்தியருள்வதால் தாமரைச்  சென்னியன், தாமரைச் சேவடியான், தாமரை மலர்கரத்தான், தண்தாமரைச் சைவன், தாமரையான் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தேவாரம், சிந்துபூந்துறைச் செல்வர் என போற்றுகிறது. கம்பராமாயணத்தில் எருக்குமதி படைத்த சடை இறைவன் என எருக்கம்பூவைச் சூடிய ஈசன் புகழப்படுகிறார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறையில் புஷ்பவனேஸ்வரர் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட ஈசனை தரிசிக்கலாம். மன்னார்குடிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பூவனூரில் புஷ்பவனநாதராக ஈசன் வழிபடப்படுகிறார். 

சென்னை-செங்குன்றத்தை அடுத்த ஞாயிறு திருத்தலத்தில் புஷ்பரதேஸ்வரர் எனும் திருப்பெயரில் மகேசனை தரிசிக்கலாம். பஞ்சபாஸ்கர தலங்களுள் இத்தலமும் ஒன்று. தேவாரத்திலும் திருமுறை நூல்களிலும் சிவபெருமான் கொன்றை வேணியன், கொன்றைச் சடையான், பொன்னங்கடுக்கைப் புரிசடையோன் என குறிப்பிடப்பட்டுள்ளார். செவ்வந்தீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் அருளும் தலம், காஞ்சிபுரத்தில் உள்ளது. பெரியபாளையத்திற்கு அருகில் ஆரணியாற்றங்கரையில் செண்பகபிச்சாலீஸ்வரர் எனும் பெயரில் சிவ பெருமான் திருவருள்பாலிக்கிறார். 

திருநெல்வேலியில் உள்ள திருப்புடைமருதூரில் நாறும்பூநாதராக பரமேஸ்வரனை தரிசிக்கலாம். தேவாரம் கொன்றை மலரை திருமலர் என போற்றுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள ஆலஞ்சேரியில் திருமலர் உடையார் எனும் பெயரில் ஈசனை வணங்கி மகிழலாம். கரவீரம் எனும் மஞ்சள் அலரி பூவின் பெயரை தன் பெயரோடு சேர்த்து கரவீரநாதராக  பரமன் அருளும் திருத்தலம் திருவாரூருக்கு அருகே உள்ள கரையாபுரம். திருமலைராயன் பட்டினத்தில் உள்ள தியாகராஜப் பெருமான் செண்பகத்தியாகர் என வணங்கப்படுகிறார். திருவாரூர் தியாகராஜரை செவ்வந்தித் தோடழகர், தண்தாமரையான் என பக்தர்கள் அழைத்து வணங்குகின்றனர். 

திருக்கருகாவூரில் முல்லைக்கொடி படர தன் திருமேனியை அளித்த முல்லைவனநாதரை தரிசிக்கலாம். குரங்கணில் முட்டத்தில் ஈசன் பாரிஜாத மரத்தடியில் வீற்றருள் புரிவதால் கொய்யாமலர் சூடியோன் என அழைக்கப்படுகிறார். மன்னார்குடியிலிருந்து 21. கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும்  வழியில் உள்ள திருக்களர் ஈசன் பாரிஜாதவனேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார். 

No comments:

Post a Comment