வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக (கிருஷ்ணன்) அவதரித்து, கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து பால லீலைகள் பல புரிந்தவர். இக்கலியுகத்தில் வில்லிவாக்கம் எனும் சேத்திரத்தில் சவுமிய தாமோதரனாக சேவை சாதிக்கிறார்.
பக்தர்களிடம் நீங்காத அன்புள்ளவரும், தாமரை மலரின் (உட்புறம்) சிவந்த நிறமுள்ளவரும், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவரும், எல்லாவற்றுக்கும் காரணமானவரும், யசோதை தாயால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு ஏற்பட்டுள்ள வயிறுள்ளவரும், எதையும் பொறுத்துக்கொள்ளும் அடக்கக் குணத்தால் தம் தாய்க்குப் பெருமை சேர்த்தவரே தாமோதரன்!
அன்னையின் வளர்ப்பு :
அத்ரி மகரிஷியின் மகன் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் ஞானமார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். அசுர குணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு விலகி, காட்டிற்குச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, ரிஷிகளை பழிவாங்கும்படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள்.
அதன்படியே, அண்ணனும் தம்பியும் சிவ பக்தர்களைப்போல வேடம் கொண்டு, அவ்வழியே வரும் முனிவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை உணவாக சமைத்து, விருந்து உபசரிப்பார் வில்வலன். முனிவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ‘வாதாபி வெளியே வா!' என்று வில்வலன் அழைத்ததும், முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே தாவிக் குதிப்பான். உடனே முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.
இதனால் பயம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதற்கு ஈசன், அகத்திய மகரிஷி பூலோகம் வரும்பொழுது இதற்கு ஒரு முடிவு ஏற்படும்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.
சில காலம் கழித்து, பூலோகத்தில் தென்திசை வழியாக அகத்தியர் வந்தபோது, ரிஷிகளுக்கு நடந்த கொடுமைகளை தம் ஞானத்தினால் அறிந்துகொண்டார். வழக்கம்போல வில்வலனும் வாதாபியும் அகத்தியரை விருந்துக்கு அழைத்து உபசரித்தார்கள். முன்னதாகவே இந்த சூழ்ச்சியை அறிந்திருந்த அகத்தியர் விருந்துண்டதும், மந்திர சக்தியால் வாதாபியை தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார். தாம்பூலம் தந்து உபசரித்த வில்வலன், எப்போதும்போல் ‘வாதாபி வெளியே வா!' என்றான். அகத்தியர் சிரித்துக்கொண்டே வயிற்றைத் தடவினார்.
தம்பி வெளியே வரமுடியாதது கண்டு கோபங்கொண்ட வில்வலன், அகத்தியரை பலவிதமாகத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தம் இஷ்ட தெய்வம் முருகன் மற்றும் சிவன், விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். சிவனும் விஷ்ணுவும் அனுமதி தர, முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து, அருகம்புல்லை அஸ்திரமாக விடும்படி அகத்தியரிடம் கூறினார். அவ்வாறே செய்து வில்வலனை சம்ஹாரம் செய்தார். இதனால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அகத்தியரின் ஆசை
தோஷ நிவர்த்திக்காக சிவனை வேண்டினார் அகத்தியர். அவ் விடத்தில், அங்காரஹத் தீர்த்தக் குளம் ஒன்றையும், வழிபட சிறிய படிகலிங்கம் ஒன்றையும் அகத்தியரிடம் வழங்கினார் ஈசன். அதற்கு நன்றி கூறிய அகத்தியர், ‘சுவாமி! எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ ஞாபகார்த்தமாக தாங்களும் விஷ்ணுவும் இந்த வனத்திலேயே திருக்கோவில் கொண்டு பக்தர்களைக் காப்பற்ற வேண்டும்’ என்று பணிந்து நின்றார். அதன்படியே இங்கு தனித்தனியே கோவில் கொண்டனர் ஈசனும், பெருமாளும்.
புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.
இவ்வாலயம், தென்கலை வைணவத்தலங்களுள் சிறப்புமிக்கத் தலமாகவும், வைகானச ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவிலாகவும் விளங்குகிறது.
முழங்கால் அளவு
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் சவுமிய தாமோதரப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேற்கரம் இரண்டும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரம் ஆவாஹன ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது (வழிபடும் பக்தர் களைக் காப்பாற்றுவேன், கவலை வேண்டாம் என உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், உங்கள் துயரம் முழங்கால் அளவுதான் என்று உணர்த்தும் ஆவாஹன ஹஸ்தமாகவும் உள்ளது). பெருமாளின் அடிவற்றில் தழும்பு வடுக்கள் அமைந்துள்ளன.
அமிர்தவல்லித் தாயார் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேல் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள் தாங்கி, கீழ்க்கரம் இரண்டும் வரத, அபய முத்திரைகளுடன் புன்னகை தவழும் முகத்துடன் தாயார் சேவை சாதிக்கிறார்.
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமிர்தவல்லித் தாயார் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருகிறார். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி தினங்களில் (பஞ்சபர்வ உற்சவம்) தாயாரும் பெருமாளும் தோட்டத்தில் உலா வந்து, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வழிபாட்டு முறை
கை, கால் சுத்தம் செய்து கொண்டு, முதலில் பலி பீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, பூமி நமஸ்காரம் செய்து வெளிப்பிரகாரம், அஷ்டதிக் பலி பீடங் களையும் வலம் வந்து மீண்டும் கொடி மரத்தை வணங்கி தாயார், கண்ணன், ராமர் சன்னிதிகளை வணங்கி, ஆண்டாள், ஆழ்வார்களையும் வணங்கி, வலம்வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி, ‘பெரிய திருவடி' கருடனை வணங்கி, ஜய, விஜயர்கள் உத்தரவு பெற்றுக்கொண்டு கருவறையிலுள்ள பெருமாளை வணங்கி, பிறகு ‘சிறிய திருவடி' அனுமனை வழிபடவும்.
வழிபாட்டு பலன்
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழி படுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தை களுக்கு தானம் தருவது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம்இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.
அமைவிடம்
சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் - பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது.
No comments:
Post a Comment