தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத்தலம், திருப்புகழ் பாடல்பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம்.
புராண வரலாறு :
இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு, இத்தலம் குறித்து கிடைத்துள்ள புராணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் உள்ளிட்டவை சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரமும், மேற்கு கரையில் உள்ள திருக்கேதீஸ்வரமும் ஆகும். இதில் திருகோணேஸ்வரத்தின் காலத்தை கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனுநீதி கண்ட சோழனே இத்திருக்கோவிலைக் கட்டினான் எனக் கூறப்படுகிறது. இவனது மகன் குளக்கோட்டு மகாராஜன் தன் தந்தை விட்டுச் சென்ற கோவிலின் திருப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளான்.
சிவபெருமானின் பூர்வீகத் தலமாகிய கயிலாச மலையின் தென்பகுதியில் சற்றும் பிசகாத நேர்க்கோட்டிலே திருக்கோணேஸ்வரம் அமைந்திருப்பதால், தட்சண கயிலாயம் (தென்கயிலாயம்) என பெயர் பெற்று விளங்குகின்றது. ஆதியில் இத்திருக்கோவில் திருவீதிகள், மண்டபங்கள் நிறைந்து காணப்பட்டது.
திருக்கோணமலை திருக்கோவிலின் அமைப்பினால் கவரப்பட்ட இலங்கை மன்னன் கஜபாகு, சிவன் கோவிலை அகற்றி பவுத்த ஆலயம் அமைக்க முடிவு செய்தான். இதற்காக திருக்கோணமலை அருகே முகாமிட்டிருந்தான். அன்று இரவு அவனின் கண் பார்வை பறிபோனது. பயந்துபோன அவனுக்கு மறுநாள் ஆலய அர்ச்சகர்கள் திருநீறு இட்டனர். மறுநொடியே மன்னனின் பார்வை திரும்பியது. இறைவனின் பெருமையை உணர்ந்த மன்னன், கோவிலை இடிப்பதற்கு மாறாக, கூடுதல் திருப்பணி செய்து நன்றி தெரிவித்தான். அவன் நீராடிய தீர்த்தம் ‘கண்தழை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
போர்ச்சுக்கீசியரின் அராஜகம் :
இந்நிலையில் 1624-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆட்சியின் போது, தளபதி கொன்ஸ்தந்தைன்டீசா ஆலய செல்வங்களை கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட அடியார்கள், மூலவர் சிலைகள், உற்சவ சிலைகளை ஆலய அடிவாரத்தில் உள்ள தம்பலகாமத்தில் மறைத்து வைத்து அங்கேயே வழிபட்டுக் கொண்டிருந்தனர். இது இன்றும் ஆதி திருக்கோணேஸ்வரமாகப் போற்றப்படுகிறது.
திட்டமிட்டபடி போர்ச்சுக்கீசிய தளபதி டீசா, திருக்கோணேஸ்வரம் அமைந்திருந்த மலை, மலை நடுப்பகுதியில் இருந்த மாதுமை அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் இருந்த விஷ்ணு கோவில் என மூன்று கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தான். இடித்த கற்களைக்கொண்டு இம்மலையில் ஓர் கோட்டையை அமைத்தான் என்பது வரலாறு. அதுவே இப்போது ‘பிரட்றிக் கோட்டை’ என அழைக்கப்படுகிறது.
1950-ல் திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தால் நகர எல்லையில் ஓரிடத்தில் கிணறு தோண்டும் போது, நான்கடி ஆழத்தில் சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சோழர் காலத்து தெய்வ வடிவங்கள் கிடைத்தன. இதன்பின் கி.பி. 1963-ம் ஆண்டில் புதிய சிவாலயம் எழுப்பப்பட்டது.
கொணா- மாடு, கணா -காது. காதுகளுடைய மாடு என்பது காளையைக் குறிக்கும் சிங்களச் சொல்லாகும். ‘கொணாகணா’ என்பதே கோகண்ணம் என்றாகி, மருவி கோகர்ணமானது.
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட மோதலில், வாயு பகவான் தன் காற்றின் பலத்தால், மூன்று சிகரங்களைப் பிடுங்கினார். அதில் ஒன்று திருக்கோணேஸ்வரமாக மாறியதாக, ‘தட்சிணகயிலாய மான்மியம்’ கூறுகிறது.
ஆலய அமைப்பு :
மூன்றுபுறம் இந்து மகாசமுத்திரம் சூழ்ந்திருக்க, உயரமான மலை உச்சியில், திருக்கோணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையேறவும், வாகனங்கள் சென்றுவரவும் நல்ல சாலை வசதி உள்ளது. ஆலயத்தில் வலதுபுறம் பிரமாண்ட சுதை வடிவ சிவபெருமான் நம்மை வரவேற்க, கிழக்குநோக்கிய சிறிய ராஜகோபுரம் கடலை நோக்கி காட்சி தருகின்றது. உள்ளே மகாமண்டபம், கருவறை முன்மண்டபத்தை அடுத்து மூலவர் கோணேஸ்வரர் அருள்காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் தெற்குமுகமாய் மாதுமைநாயகி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.
கருவறை வெளிப் பிரகாரத்தில், விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தலமரம், உற்சவர் சபை உள்ளது. கருவறை விமானத்தில் பத்து தலை ராவணன் எழிலாக காட்சி தருகிறார். ஆலயச் சுவர்களில் தலம் தொடர்பான பதிகங்கள், திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள் நிறைந்துள்ளன. ஆலயத்தின் வெளியே, கோபுரத்திற்கு எதிரே, ராவணன் சிலை கோவிலை வணங்கியபடி நிற்கிறது. அங்கிருந்து கடல் காட்சி நம் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
இறைவன் திருக்கோணேஸ்வரர், கிழக்கு முகமாய், மலையின் உச்சியில் அமைந்த கோவில் கருவறையில் எழிலான காட்சி தருகின்றார். துன்பங்களுக்கே துன்பம் தந்து, அடியார்களின் துயர் தீர்ப்பவர் இவர். மாதுமை அம்மாள், தென்முகமாக எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள். மாதுமை அம்பாளை சங்கரிதேவி எனவும், திருக்கோணேஸ்வரத்தை 18 மகா சக்தி பீடங்களில் ஒன்று எனவும் கொண்டு, மாதந்தோறும் இந்தியாவிலிருந்து அடியார்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஆலயத்தின் தல விருட்சம் கல்லால மரம். தலத்தீர்த்தம் ‘பாபநாசம் தீர்த்தம்’ ஆகும்.
இவ்வாலயத்தில் பங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் செய்து 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது. சிவராத்திரியில் திருக்கோணேஸ்வரர், திருக்கோணமலை நகரில் 5 நாட்கள் வீதியுலா வருவது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசையில் சுவாமி கடலில் நீராடும் போது, திருக்கோணமலை நகரில் உள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் தீர்த்தமாட வருவது மற்றுமொரு சிறப்பு.
வெந்நீர் ஊற்றுகள்
விஷ்ணு உருவாக்கிய வெந்நீர் ஊற்று :
திருக்கோணமலைக்கு அருகில் ‘கன்னியாய்’ என்ற இடம் உள்ளது. இங்கு வெந்நீர் ஊற்றுகள், ஏழு சிறுசிறு கிணறுகளாக அமைந்துள்ளன. இவற்றின் தொன்மைக்காக, இதனைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு புராணம் உண்டு.
திருக்கோணநாதரிடம் இருந்து லிங்கத்தைப் பெற்ற ராவணனைத் தடுக்க நினைத்த விஷ்ணு, அடியவர் வேடத்தில் அங்கு வந்தார். பின்னர் ராவணனின் தாய் இறந்து விட்டதாகவும், அவருக்கு இத்தலத்தில் கிரியை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து ராவணன் விஷ்ணுவுடன் கன்னியாய் பகுதிக்கு வந்தான். அங்கு விஷ்ணு ஏழு இடங்களில் தன்னிடம் இருந்த தண்டினால் நீரூற்றுகளை ஏற்படுத்தினார். அவையே வெந்நீரூற்றுகளாய் இருப்பதாக நம்பப்படுகிறது.
இலங்கைவாழ் மக்களின் புனிதத் தலமாகவே கன்னியாய் பகுதியில் இருக்கும் நீரூற்றுகள் போற்றப்படுகின்றன.
ராவணன் வெட்டு :
ராவணின் தாய், தன் தலைநகரான இலங்காபுரியில் இருந்து நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அன்னையின் பக்தியை உணர்ந்த ராவணன், தன் தாயின் சிரமத்தைப் போக்க திருக்கோணேஸ்வர மலையையே வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டான். ஆனால் அது இயலவில்லை என்று தலபுராணம் சொல்கிறது.
ராவணன் சிவலிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக, திருக்கோேணஸ்வரம் வந்து இறைவனை வணங்கி நின்றான். ஆனால் இறைவன் உடனடியாக ராவணனுக்கு காட்சி தரவில்லை. இதனால் கோபம் கொண்ட ராவணன், திருக்கோணேஸ்வர மலையை தன் வாளால் ஓங்கி வெட்டினான். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானான். இதைஅடுத்து தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து, தசை நார்களால் வீணை செய்து சாம கானம் இசைத்தான். இதனால் மகிழ்ந்த இறைவன், ராவணனுக்கு சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்தார் என்றும் மற்றொரு வரலாறு சொல்கிறது.
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட முக்கிய நகரம் திருக்கோணமலை. கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இலங்கையின் பெரிய நதியான மகாவலி கங்கை இங்கு தான் கடலுடன் கலக்கிறது. இம்மலை இலங்கையின் சுவாமிமலையாக போற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து வடகிழக்கே 303 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்கே 232 கி.மீ. தொலைவில் திருக்கோணமலை இருக்கிறது.
No comments:
Post a Comment