சுபஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் நாள் (4.10.2018) வியாழக்கிழமை இன்று இரவு 10 மணிக்கு விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் சஞ்சரிக் கின்றார்.
எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை. அதுமட்டுமல்லாமல் குருவிற்குரிய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் ஆகும். மேலும் விருத்தியம்சம் தருகின்ற ராசி விருச்சிக ராசி.
3 யோகங்கள்
விருச்சிக ராசிக்கு குரு பகவான் அடியெடுத்து வைத்து 9-ம் பார்வையாக சந்திரனை பார்த்து ‘குருச்சந்திர யோகம்’ உண்டாக்குகின்றார். குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் உச்சம்பெற்ற செவ்வாய், சந்திரனைப் பார்த்து ‘சந்திர மங்கள யோகம்’ உருவாகின்றது. சுக்ரன் துலாம் ராசியில் சொந்த வீட்டில் சஞ்சரித்து புதனுடன் இணைந்து ‘புத-சுக்ர யோகம்’ தருகின்றார். இந்த 3 யோகங்களும் அமைந்த நேரத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்வதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான பலன் கிடைக்கப் போகின்றது. சிக்கல்கள் தீரும், செல்வநிலை உயரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர் களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகம் தழைக்கும்.
நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் 3 ராசிகள் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளாகும். ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான் தன வரவை அதிகரிக்க வைக்கும் ராசியாக விருச்சிக ராசி விளங்குகின்றது. எனவே மேற்கண்ட 4 ராசிக் காரர்களுக்கும் தொட்டது துலங்கும், தொகை வரவு உயரும். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும்பெருகி இயல்பான வளம் கிடைக்கும்.
மற்ற ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குரு பீடங்களுக்குச் சென்று மஞ்சள் வண்ண வஸ்திரமும், முல்லைப்பூ மாலையும் அணிவித்து, வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் எல்லையில்லாத நற்பலன்கள் இல்லம் தேடிவரும்.
விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். தனுசு ராசிக்கு அதிசாரமாகவும் செல்கின்றார். 13.3.2019 முதல் 18.5.2019 வரை தனுசு ராசிக்கு மூல நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ் சரிக்கும் பொழுது, அதன் பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம், ஆகிய 3 ராசிகளும் புனிதமடைகின்றன. எனவே அந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலத்தில் ராகு-கேதுக்களும் பெயர்ச்சியாகின்றன. 13.2.2019 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் ராகு மிதுன ராசிக்குச் செல்கின்றார். மகர ராசியில் சஞ்சரிக்கும் கேது தனுசு ராசிக்குச் செல்கின்றார். இந்தப் பின்னோக்கிச் செல்லும் கிரகங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
இருப்பினும் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களை, தங்கள் சுயஜாதக அடிப்படையில் அனுகூலமான ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்தால் தனவரவில் இருக்கும் தடைகள் அகலும். எந்த நாளும் இனிய நாளாக அமையும்.
குருவின் வக்ர இயக்கம், அதிசார இயக்கம், ராகு-கேது பெயர்ச்சி, சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மேஷத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், மிதுனத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும், சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், தனுசுக்கு விரய குருவாகவும், கும்பத்திற்கு 10-ம் இடத்து குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள், தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடக்கும் திசாபுத்தி பலம் பார்த்து, பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் பலமறிந்து, அதற்கு பொருத்தமான ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லலாம். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும்.
தங்கம், வீடு, மனைகள் விலை உயரும்
குருப்பெயர்ச்சிக் கால கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை நினைக்க இயலாத அளவு உயரப்போகின்றது. அதே நேரம் வெள்ளியின் விலை குறையும்.
ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூமி விற்பனை செய்பவர்களுக்கு இது பொன்னான நேரமாகும். உச்சம் பெற்று செவ்வாய் விளங்குவதால் பூமியின் விலை பலமடங்கு உயரப்போகின்றது. கட்டிட உபயோகப் பொருட்கள் கிடைப்பது அரிதாகி பல கட்டிடங்களின் பணிகள் பாதியிலேயே நிற்கலாம்.
அரசியல் களம்
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். இனி மேலும் சில திரைப்படக் கலைஞர்கள் புதிது புதிதாக அரசியலில் நுழைவார்கள்.
ஆயினும் அவர்கள் தனித்து இயங்கி வெற்றிபெறுவது அரிது. ஏதேனும் ஒரு அரசியல் அமைப்போடு இணைந்து செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.
சனிபகவான் ‘வில்’ சின்னம் பெற்ற தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் அரசியல் களம் மிக மிகச் சூடுபிடிக்கும். தலைவர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகி கட்சிகள் உடையலாம், ஓட்டுகள் பிரியலாம்.
அரசு அதிகாரிகளுக்கு திடீர், திடீரெனச் சிக்கல்கள் உருவாகும். அவர்களுக்கு இது சோதனைக்காலம் என்ப தால் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.
மழை-வெள்ளம்
செவ்வாயோடு கேதுவும், சந்திரனோடு ராகுவும் இணைந்திருப்பதால் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளங்களால் தத்தளிப்பு போன்றவை அதிகரிக்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயரும்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகலாம். இருப்பினும் வாங்கும் திறன் மக்களுக்கு அதிகரிக்கும்.
பொதுவாக விருச்சிக குருவின் காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு உயரும் வாய்ப்பு உண்டு.
வழிபாட்டு தலங்கள்
குரு பீடமாக விளங்கும் திருச்செந்தூர், திருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தி, தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, திட்டை ராஜகுரு, பட்டமங்கலம் திசைமாறிய தட்சிணாமூர்த்தி, குருவித்துறை, திருவேங்கிவாசல், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியிலுள்ள பாடுவார் முத்தப்பர் ஆலயம், அனைத்து சிவாலயங்களிலும் உள்ள அறுபத்து மூவர் வழிபாடு, சிங்கம்புணரி முத்துவடுகநாதன் சித்தர்ஆலயம், தக்கோலம், புளியரை, சென்னை திருவாலி தாயம், திருவெற்றியூர், திருவாடானை ஆகிய இடங் களில் இருந்து அருள்வழங்கும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
உள்ளூரில் உள்ள சிவாலயத்தில் இருந்து அருள்வழங்கும் நவக்கிரகத்தில் உள்ள குருவையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். குருவருள் இருந்தால் உங்களுக்கு கூடுதல் வளர்ச்சி ஏற்படும். வரலாற்றிலும் இடம்பெற்று வாகை சூடி மகிழலாம்.
No comments:
Post a Comment