கருடனின் பராக்கிரமம்
கருடன் தன் தாயின் ஆணைப்படி தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் போது தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகிய தேவர்கள், தெய்வம் ஆகியோர்களைப் போரிட்டு வென்று வெற்றி பெற்று அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். மேலும் ஒரு நிகழ்வில் பலாசுரன் என்ற அசுரனையும் விழுங்கிக் கொன்று துப்பினார். எனவே கருடன் தெய்வம் தேவர், அசுரர், நரர், மிருகாதிபட்சிகள் போன்ற அனைத்தையும் வென்று வீழ்த்தும் பலம், பராக்கிரமம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவேதான் “கருட தரிசனம் சத்ரு விநாசம்” என்று கருதப்படுகிறது. எப்பேர்பட்ட சத்ரு தொல்லைகளையும் கருட தரிசனம் நாசம் செய்துவிடும் என்பதற்கு கருடனின் மேற்கண்ட தேவ, அசுர, தெய்வப் போரிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அபூர்வ சக்திகள்
பத்ம புராணப்படி கருடனுக்கு கீழ்க்கண்ட அபூர்வ சக்திகள் உண்டு.
1. பிறரை வசியம் செய்வது, 2. பகைவர்களை அடக்குவது, 3. உணர்வை வற்ற வைப்பது, 4. மயங்க வைத்தல், 5. வானத்தில் உலாவுவது, 6. காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றிபுகுவது, 7. இந்திரஜாலம் காட்டுவது, 8. படிப்பில் தேர்ச்சி, நல்ல ஞாபகசக்தி, 9. வாதத்திலும், போரிலும் வெற்றி பெறுதல்.
தசா புத்தியில் கருட வழிபாடு
ஒவ்வொருவருக்கும் எந்த தசா புத்தி நடப்பில் இருக்கிறதோ அந்த திசைக்குரிய அல்லது அந்த புத்திக்குரிய கிழமைகளில் ஸ்ரீ கருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அமுத கலசம் என்னும் இனிப்பை படைத்து வழிபட்டு வந்தால் தசா புத்தியால் ஏற்படும் இன்னல்கள் உடனே நீங்கும்.
கருடா சவுக்கியமா?
பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் “திருச்சிறு புலியூர்” என்ற தலமாகும். இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது. இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.
“கருடா சவுக்கியமா” என்று பாம்பு கேட்டதற்கு “அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே” என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.
கருட பத்து
கருடன் மீது அன்புடனே ஏறி வந்து அருள் செய்யும் ஸ்ரீமந்நாராயணனை துதி செய்யும் “கருட பத்து” என்று பத்து துதி பாடல்கள் உள்ளன. இதனை பாராயணம் செய்வதால் ஸ்ரீமந் நாராயணனின் அருளும், கருட தரிசனமும் கிடைக்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.
தர்ப்பை ரகசியம்
கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு வரும் போது கலசத்தில் ஒட்டிக் கொண்டு வந்த “அமிர்த வீரியம்“ என்பதுதான் தர்ப்பை ஆகும். இது ஒரு தேவலோகப் புல்லாகும். பூலோகத்தில் தர்ப்பை எனப்படுகிறது.
கருட பகவானின் அங்க லட்சணங்கள்
இரண்டு கரங்கள் - நான்கு கரங்களும் உண்டு. அருள் ததும்பும் முகம், கவலைக்குறியே இல்லாதவர், தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர், சிறகுகளை விட உடல் பருத்திருக்கும், குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர், வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீகருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன.
கருடனின் நித்திய வாசஸ்தலம் திருப்பாற் கடலாகும். அவர் சூரிய மண்டலத்திலும், ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில் திருமாலைப் போன்றவர். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை நாடுபவர்களுக்கு ஸ்ரீகருடன் அவற்றைத் தந்து அருள் புரிகிறார்.
கருடன் வட்டமிடுதல்
பறவைகளுக்கு ராஜாவான பட்சிராஜன், கருடன் எப்போதும் பறக்கும் போது இறக்கை அசைக்காமல் பறக்கும். ஆகாயத்தில் அழகாய் கருடன் வட்டமிடும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். நாம் ஒரு காரியம் உத்தேசித்து, போகும் போது கருடன் வட்டமிடும் தரிசனம் கிடைத்தால் வெற்றி கிட்டும், கருடன் வட்டமிடு வதைவிட ஒரு உயர்ந்த சுப சகுணம் வேறெதுவும் இல்லை அரசயோகமே கிட்டுவதற்கு ஈடான பலனைத் தரும்.
கோவில் கொடியேற்றத்தில் கருடன்
நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும். அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம். இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.
கருட மனையில் வீடுகட்டுங்கள்
மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன. இதில் கருடமனை அமைப்பில் வீடு கட்டினால் அந்த வீட்டிற்கு விஷஜந்துக்கள், சத்துருக்களால் எப்போதும் பாதிப்பு ஏற்படாது. கருடனின் அருட்கடாட்சம் எப்போதும் இருக்கும். வீடுகட்ட தொடங்கும்போது கருடன் தரிசனம் கொடுப்பதும், கருடன் வட்டமிடுவதுமான சகுணம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாகக்கட்டி முடித்து, கிரக பிரவேசம் செய்யப்படும். மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.
No comments:
Post a Comment