Thursday, 11 October 2018

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள்

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள்

அதிகாலையில் எழுந்து கரைதல், உணவை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல், பிறர் காணாத வகையில் ஜோடி சேருதல், மாலையிலும் குளித்தல், ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்று கூடி கரைதல் என்பது காக்கை இனத்தில் பொதுவான குணங்கள். இவற்றுள் ஒரு காக்கை இறந்தால் அனைத்து காகங்களும் கூடி நின்று கரைதல் என்பது, அஞ்சலி செலுத்துவதற்கு சமமாகவே கருதப்படுகிறது.

உங்களின் உள்ளுணர்வால் ஏற்படுவதா? அல்லது உண்மையிலேயே பித்ருக்களின் ஆசியா? என்பது அதிசயம் தான். ஆனால் தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்களை நெருங்கவே செய்யாது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், தள்ளிப்போகும் புத்திர பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான கோரிக்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவராசி காக்கை இனம். குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். உணவை சாப்பிட்டு விட்டு காக்கைகள் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காகம் சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவதாக சொல்லப்படுகிறது. அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். எனவே காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

காகம் வீட்டின் முன்பு நின்று கரைந்தால், நல்ல செய்தி வரும் அல்லது விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும் கூறுவார்கள். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

No comments:

Post a Comment