பண்பாட்டின் சான்றாய், புண்ணியவான்களின் புகலிடமாய், வேதங்களின் விளைநிலமாய், ஆன்மிகத்தின் ஆதாரமாய், அவதாரங்களின் பிறப்பிடமாய், புராண இதிகாசங்களின் நிகழ்விடமாய்த் திகழ்ந்த பாரதநாடு முழுவதும் எண்பது சதவீத மக்கள் தீண்டாமை, தோன்றாமை, காணாமை போன்ற சாதீயக் கொடுமைகளால் முடக்கப்பட்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம். பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல் ஜாதியும் வர்க்கமும் ஒன்றான கொடுங்காலம்.
இந்தக் கொடுமைகளின் உச்சமாக விளங்கியது, தென் திருவிதாங்கூர் சமஸ்தானம். அன்று, இன்றைய கன்னியாகுமரி மாவட்டமும், தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தாய் வேறு சேய் வேறாக அடிமைகளாக விற்கப்பட்டார்கள். உயர் ஜாதி என்று தம்மைத்தாமே சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சொக்கத் தங்கத்திற்கு இணையான சுவர்னர் என்ற மேட்டுக்குடியினராகவும், வசதி வாய்ப்பற்ற பதினெட்டு ஜாதி மக்கள், அவர்னர்கள் என்று தீண்டத்தகாதவர்களாகவும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டாம் தர மக்களான அவர்னர்கள் காலனி அணியவோ, ஓடுவேய்ந்த வீட்டில் வாழவோ குடை பிடிக்கவோ, பசுமாடு வளர்க்கவோ, மேட்டுக்குடியினர் ஏவும் வேலையைச் செய்துவிட்டு அதற்கான கூலி கேட்கவோ கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் ஏந்தவோ, நகை அணியவோ கூடாது. போதாக்குறைக்கு தாலிக்கு வரி, ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி, முதியோரின் ஊன்றுகோலுக்கு வரி, மண்வெட்டி, அரிவாள், ஓலைப்பெட்டி போன்ற உபகரணங்களுக்கும், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, கிளி, புறா, தாவரங்கள் அனைத்துக்கும் வரி இப்படி நூற்றுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி, தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்ற கொள்கைப்படி பள்ளிக்கூடம், நீதிமன்றம், கோவில், மேட்டுக்குடியினர் வசிக்கும் தெரு, அவர்கள் பயன்படுத்தும் குளம், கிணறு ஆகியவற்றின் அருகில் கூட செல்லக்கூடாது. யாரிடமும் ‘நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக்கூடாது. ‘தரையில் விழப்போகிறேன்’ என்றே சொல்லவேண்டும். எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்த ஒடுக்கப்பட்ட பதினெட்டுச் ஜாதியினரும் ஆன்மிக நூல்களை தொடவோ, பார்க்கவோ கூடாது. மேற்காணும் விதிமுறைகளை மீறுகின்ற ஒரு அவர்னரை எந்தச் சுவர்னர் வெட்டிக்கொன்றாலும் கேட்பாரில்லை.
இப்படியெல்லாம் மேட்டுக்குடியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்ட பதினெட்டு ஜாதி மக்களும், தமக்கு நேர்ந்துள்ள இந்த இழிநிலையை எண்ணி எண்ணி ஏங்கினர். ‘இறைவா எங்களை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறாய்?. இதைவிட எங்களை மிருகங்களாகப் பிறப்பித்திருக்கலாமே?’ என்று வாய்விட்டு அழுதனர். கண்ணீர் விட்டுக் கதறினர். அந்தக் குமுறல்கள் ஏகமும் படைத்து எங்கும் நிறைந்த இறைவனுக்கு எட்டியது.
‘எங்கே அதர்மம் ஆட்சிபுரிகிறதோ, அங்கே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்’ என்ற கீதா உபதேசத்திற்கிணங்க இறைவனின் மனம் கசிந்தது. இதுவரை நிகழ்ந்த, எந்த யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இத்தகையக் கொடுமைகளை எந்த அரக்கனும் செய்ததில்லை. இது கலியுகம் ஆகையால்தான் இத்தகைய கயமைத் தனம் அரசாட்சி செய்கிறது.
இச்செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் முன்புள்ள யுகங்களைப் போல் மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தி மட்டும் மண்ணகத்தில் அவதரித்தால் போதாது. ஆயுதங்களால் அழிக்க முடியாத இந்த மாயையாகியக் கலியை மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாகி சாதாரண மனிதனைப்போல் அவதரித்து நீதிபோதனை செய்ய வேண்டுமென இறைவன் நிச்சயித்தார்.
அதன்படி திருச்செந்தூர் கடலினுள் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி ‘வைகுண்டம்’ என்ற பெயரோடு உதித்தார். மண்ணகத்தில் வந்து மனு சொரூபம் எடுத்தார். மணவைப் பதியாம் சாமிதோப்பில் வந்து ஒரு தபோதனனைப் போல் அமர்ந்தார்.
தெய்வமும் அவராய், திருவுள்ளமும் அவராய் மக்கள் மனம் மகிழ மனிதனைப் போலும் காட்சியளித்த அந்த மாயாதி சூட்சனை நாடி, மக்கள் வெள்ளம்போல் குவிந்தனர். சாமிதோப்பு அன்றைய தினம் ஜன சமுத்திரம் போல் காட்சியளித்தது. தம் எதிரே குழுமிய மக்களைப் பார்த்து மகிழ்ந்த வைகுண்டர், ‘இன்று முதல் இகாபரா தஞ்சமென ஒன்றுபோல் எல்லாரும் ஒரு புத்தியாய் இருங்கோ, அவனவன் தேடும் முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ, எவனெவனுக்கும் பதறி இனி மலைக்க வேண்டாம்’ என்று கன்றுக்கு மாதா இரங்கி கற்பித்தது போல் கற்பித்து, அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்து மகிழ்ந்தார்.
ஜாதிக்கொரு கிணறு என்றிருந்த அந்தக் காலகட்டத்தில் சகலருக்கும் ஒரே கிணறு என்றொரு சமத்துவக் கிணற்றை உண்டாக்கினார். அந்த அரிய கிணற்று நீரை, அனைத்துச் ஜாதி மக்களும் ஒருமித்துக் கூடிநின்று குளித்தும், குடித்தும் மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் அரிய மருந்தாகத் திகழும் நீரைத் தரும் அக்கிணறு தான் சாமிதோப்பிலுள்ள ‘முத்திரிக்கிணறு’ ஆகும். இந்தக் கிணற்று நீரை பாத்திரங்களில் எடுத்துவைத்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்நீர் கெட்டுப்போகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கர்மவியாதி, செவிடு, கண்குருடு, ஊமை போன்ற அனைத்து வியாதிகளையும் முத்திரிக்கிணற்று நீரால் அய்யா வைகுண்டர் தீர்த்து வைக்கிறார் என்ற செய்தியும், ஆண்- பெண் என்ற இரண்டு ஜாதிகளைத் தவிர அய்யா வைகுண்டரின் முன் அடுத்தொரு ஜாதியில்லை என்ற செய்தியும் ஆங்காங்கே பரவியது. இதனால் வெகுண்டெழுந்த மேட்டுக்குடியினரின் தூண்டுதலால் திருவிதாங்கூர் மன்னன், வைகுண்ட சுவாமியை சிறைப்பிடித்து திருவனந்தபுரம் சிங்காரத் தோப்பில் சிறைவைத்து சுண்ணாம்புக் கால்வாய், நெருப்பு குண்டம், காய்ந்த மிளகாய்ப் புகைமூட்டம், பசித்த புலியிருக்கும் கூண்டுக்குள் அடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினான்.
எல்லா சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்று வென்று திரும்பிய வைகுண்டர், அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் ஆலய வழிபாடுகளும், ஆன்மிக நுகர்வுகளும் இல்லாமல் அடிமைத் தழும்பேறித் தவித்த பதினெட்டு ஜாதி மக்களுக்கும் ஆன்மிக அறிவை எளிமையான பயிற்சி மூலம் வழங்கவேண்டுமென முடிவெடுத்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு வடக்கில் கடற்கரையைச்சார்ந்த ஆமணக்கன் விளை என்ற ஊரில் நின்ற நான்கு வாகை மரங்களை நடுநாயகமாகக் கொண்டு தவம் செய்யும்படி ஏழுநூறு குடும்பத்தை அனுப்பிவைத்து, ஆத்மஞானம் பெறுவதற்கான துவையல் தவசு செய்ய வைத்தார்.
துவையல் தவசில் ஈடுபட்டிருந்த மக்கள் காலையிலும் மாலையிலும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக உகப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், உச்சிவேளையில் ஜெபிப்பதற்காக உச்சிப்படிப்பு என்ற மகா மந்திரத்தையும், சதாகாலமும் இறைநாமத்தை ஜெபிப்பதற்காக அகண்டநாமம் என்ற மகாமந்திரத்தையும் அந்த மக்களுக்கு தமிழில் ஞானபோதகமாக அருளினார். அந்த மந்திரங்களை முறைப்படி தமிழில் உச்சரித்து அடிமை உணர்வற்று அந்த மக்கள் ஆன்மிகத் தெளிவு பெற்றனர்.
எல்லா மக்களும் எளிமையாகச் சொல்லவும், எளிமையான முறையில் வழிபடவும் வழிவகுத்த அய்யா வைகுண்டர் இவ்வுலகத்தில் எவ்வாறு வாழ்ந்தால் கலியுகத்திலிருந்து கடைத்தேற முடியும் என்பதற்கான அறிவுரைகளை அன்று தம்மிடம் வந்த அன்பர்களுக்கு நேரடியாகவும், எதிர்கால மக்கள் அறிவதற்காக அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்ற இருபெரும் ஆகமங்களின் மூலமாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விரு நூல்கள் கூறும் உபதேசங்களையெல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் ஆறாயிரத்திற்கும் மேல் உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும் பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப் பெற்ற ஆலயம், சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்புப் பதியைப் போல் நித்த வாகன உலா இங்கும் நடைபெறுகிறது. அதே போல் எங்கும் இல்லாத வகையில் நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது. இந்த ஆண்டு 500 நபர்கள் அமர்ந்து அன்னம் அருந்த வசதியாக நவீன அன்ன மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.
அய்யா வழிபாட்டு ஆலயங்களில் முதல் ராஜகோபுரம் கண்ட மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் திருக்கொடியேற்றத்துடன் திருஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகனப் பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெறும்.
மூன்று மந்திரங்கள்
தமிழ்மொழியிலான உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அகண்டநாமம் ஆகிய மூன்று மந்திரங்களையும், பக்திப் பெருக்கோடு தினசரி படித்து வந்தால் ஊழ்வினை அகலும். வல்லமை சித்திக்கும். அருள்ஞானம் பெருகும். வைராக்கியம் உண்டாகும். ஆபத்துகள் அகலும் என்பது அனுபவ ரீதியான நம்பிக்கையாகும். இம்மூன்று மந்திரங்களிலும் சிவதோத்திரம், விஷ்ணு தோத்திரம், பிரம்ம தோத்திரம், சக்தி தோத்திரம், லட்சுமி தோத்திரம், சரஸ்வதி தோத்திரம், இந்திர தோத்திரம், சூரிய தோத்திரம், கந்த தோத்திரம், கணபதி தோத்திரம், மகாலிங்கம், சிவலிங்கம், குருலிங்கம், திருலிங்கம், ஏகலிங்கம், ஏக்காலிங்கம், அரிலிங்கம், லிங்காலிங்கம், சொக்கலிங்கம், சுகாலிங்கம், ஆதிலிங்கம், அருள்லிங்கம், அடங்காலிங்கம் ஆகிய லிங்கதோத்திரங்களும் இடம்பெற்றுள்ளதால் இம்மந்திரங்கள் காயத்திரி மந்திரத்திற்கு இணையான தமிழ் மந்திரம் என்று ஆன்மிகச் சான்றோர்கள் ஆராதிக்கிறார்கள்.
No comments:
Post a Comment