Thursday, 25 October 2018

சனிபகவான் வழிபட்ட சிக்கல் சிவன்கோயில்

Sikkal__5_

சிக்கல் சென்றிருக்கிறீர்களா? எனக் கேட்டால் பெரும்பாலோனோர் சொல்லும் சிக்கல் திருவாரூரின் கிழக்கில் உள்ள முருகன் புகழ் சிக்கலைத்தான். ஆனால் இந்தச் சிக்கல் எனும் ஊர் இருக்குமிடம், கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையில் உள்ள பழையார் சென்று அங்கிருந்து வடக்கு நோக்கி மூன்று கி.மீ தூரம் சென்றால் சிக்கல் கிராமம்.

பழமையான சிவாலயம் கிழக்கு நோக்கியது. முகப்பு கோபுரம் ஏதும் இல்லை, ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயில் கால வேகத்தில் பின் தங்கிவிட்டதில் இன்று செல்வார் யாருமின்றி ஒரு கால பூஜையில் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.

கோயில் சிறப்புக்களுக்கு பஞ்சமில்லை, சோழர்கால கோயில், அதிட்டானம் பிரஸ்தரம் வரை கருங்கல் கட்டுமானம். கருவறை அதிட்டானமெங்கும் கல்வெட்டுக்கள் மலிந்துள்ளன. கருவறை சுவற்றில் லிங்கத்தை இரண்டு அரசர்கள் வழிபடுவது போல உள்ளது.

தென் திசை நோக்கி வந்த அகஸ்தியர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. சனிபகவான் வழிபட்ட தலங்களில் இது சிறப்பானது. பிற தலங்களில் காண இயலாத வகையில் கருவறை வடபுற கோட்டத்துச் சுவரில் வடக்கு நோக்கியபடி சனிபகவான் உள்ளார். மிகச் சில கோயில்களில் மட்டுமே இவ்வாறு காண இயலும். அதிலும் கருவறை கோட்டத்தில் அரிதினும் அரிது.

இறைவன் அகத்தியரால் வழிபடப்பெற்றவர் என்பதால் அகஸ்தீஸ்வரர். இறைவி சுந்தராம்பிகை, பெயருக்கு ஏற்றாபோல் மிகுந்த அழகுடையவர். (பின்னமான பழைய அம்பிகை கூட எவ்வளவு அழகுடன் உள்ளார் பாருங்கள்)

கருவறை வாயிலில் விநாயகரும், பாலசுப்ரமணியரும் உள்ளனர். சோழர் கால கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. பல கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்குக் கொடுத்த நிபந்தங்கள் பற்றியே உள்ளன.

No comments:

Post a Comment