பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான தலம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான திருத்தலம், பராந்தகச் சோழன் திருப்பணி செய்த திருக்கோவில், கர்ப்பதோஷம், களப்பிர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் தீர்க்கும் தலம், புன்னகை பூத்த பெருமாள் வாழும் கோவில், மகாபாரதம், ராமாயணம், பாகவதக் காட்சிகள் கொண்ட சிற்பங்கள் நிறைந்த கோவில், திராவிட கட்டிடக்கலை கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.
திருக்கோவிலூர், ஆதிதிருவரங்கம், திருவல்லிக்கேணி, திருவந்திபுரம், திருபுவனை ஆகிய பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றாக திகழ்வது திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம். இத்தலம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-950) கட்டப்பட்டதை வரலாறு எடுத்துரைக்கிறது. ‘வீரநாராயண விண்ணகரம்’ என்பது இக்கோவிலின் ஆதி பெயராகும். பராந்தகனின் விருதுப்பெயரே வீரநாராயணன். இதேபோல, மன்னனின் முதல் மனைவியின் பெயரால் ‘திருபுவனை மகாதேவிச் சதுர்வேதிமங்கலம்’ எனவும் இத்தலம் அழைக்கப்பட்டது.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய எளிய திருக்கோவில் இது. நுழைவுவாசல், ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. பலிபீடத்தை அடுத்து கருடன், பெருமாளை வணங்கியபடி காட்சி தருகிறார். அவரையொட்டிக் கருங்கல்லில் ஆன மகாமண்டபம், கருவறை முன் மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
சுவாமி கருவறை, முன்மண்டபத்தின் கோட்டங்களில் சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது. நடுப் பகுதியில் நேர்த்தியான சிற்பங்கள் அணிவகுக்கின்றன. அதில், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் காவியக் காட்சிகள், புடைப்புச் சிற்பங்களாக காட்சிதருகின்றன. மற்றொரு புறம், நரசிம்மரின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கலைநயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெருமாளின் கருவறை விமானம் ‘விரானூர் பூமீஸ்வரர்’ மற்றும் ‘காஞ்சீபுரம் கவுகீஷ்வரர்’ திருக்கோவிலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மண்டபம் ஏறும் படிகள் ஒருபுறம் சிங்கங்கள், மறுபுறம் யானைகளின் அணிவகுப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கருவறை முன்மண்டபத்தில் இருபுறமும் குபேரன் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன் துவாரபாலகர்கள் காவல்புரிகின்றனர். பின்புறம் தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள மூலவர் தோத்தாத்திரி பெருமாள் ஆவார். இவரே தமிழில் ‘தெய்வநாயகப்பெருமாள்’ என்று வழங்கப்படுகிறார். சுகாசன கோலத்தில் ஒரு காலை மடக்கி, மறுகாலைத் தொங்கவிட்டு, மந்தகாசப் புன்னகை பூத்து எழிலாகக் காட்சியளிக்கின்றார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். பெருமாளின் திருமுகம், அதில் உள்ள அவயங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன. உற்று நோக்குவோரே இதை உணர முடியும். உற்சவத்திருமேனிக்கு ‘வரதராஜப்பெருமாள்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
சுவாமி சன்னிதியின் தென்மேற்கில் பெருந்தேவி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. தாயாரும் சுகாசனத்தில் அருள்காட்சி வழங்குகின்றாள். வடகிழக்கில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இரு சன்னிதிகளிலும், மூலவருக்கு அருகில் உற்சவத் திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன.
கருவறைச் சுற்றில் மகாபாரதம், பாகவதக் காட்சிகள், கருடாழ்வார் அருகே மூன்று பெண்கள், நான்கு கால்களில் மூவராக அமைந்துள்ள சிற்பம் வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கின்றன.
ந்த ஆலயத்தில் தைமாதம் முதல்நாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரி, சன்னியாசி குப்பத்தில் மாப்பிள்ளை சாமியாக சென்று, அங்கே வரவேற்பை பெறுதல், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
பழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்திய தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் நடை திறந்து வைக்கப்படும்.
குரு, சுக்ரன் ஐக்கிய தலம் :
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி, 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.
கருவறை பிரகாரம் :
கருவறையில் மூலவர் வீற்றிருப்பதும், அவருக்கு எதிரில் பக்தர்கள் வணங்கும் விதமாக கட்டமைப்பு அமைந்திருப்பதும் ஆலயங்களில் நாம் காணும் பொதுவான அமைப்பு. ஆனால் திருபுவனையில் கருவறையை ஒட்டி சுற்றி வரும் விதமாக, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது, இத்தலத்தின் தனிச்சிறப்பு. வேண்டுதலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நெய் தீபங்கள் ஏற்றியபின், 48 சுற்றுகள் இந்த பிரகாரத்தில் தான் சுற்றி வரவேண்டும்.
பரிகாரத் தலம் :
இத்தலம், தோஷங்கள் தீர்க்கும் கண்கண்ட தலமாக விளங்குகின்றது. குறிப்பாக களப்பிரதோஷம், கர்ப்பதோஷம் மற்றும் சகோதர ஒற்றுமை, கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது. குறிப்பாக, கர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், தங்கள் வயதிற்கு ஏற்றபடி எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வசதி இல்லாதவர்கள் ஐந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 முறை சுற்றி வரவேண்டும். இதற்கான பலன் தரும் நேரமாக, புதன் ஓரையில் வியாழன் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைவிடம் :
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனை திருத்தலம். புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு- விழுப்புரம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும் திருபுவனை உள்ளது. திருபுவனையில் இருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் தோத்தாத்திரி பெருமாள் ஆலயம் இருக்கிறது.
No comments:
Post a Comment