ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள். ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அவற்றின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?
இந்திர ஏகாதசி
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.
பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.
தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.
No comments:
Post a Comment