இன்று (சனிக்கிழமை) ஆடி அமாவாசை. மிகவும் புனித தினமாகும்.
இறந்து போன முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாயண காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும், விசேஷமானவை.
இந்த நாட்களில் முன்னோர்களையும் இறந்த தாய், தந்தையர்களை நினைத்து ‘திதி’ கொடுப்பது நல்லது. ‘பித்ரு’க்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது பெரிய பாவமாக கருதப்படுகிறது.
நமது முன்னோர்களான தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மரணம் அடைந்த பிறகு பித்ரு லோகம் சென்று விடுகின்றனர். பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது.
மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்த போது அவர்களை சரிவர கவனிக்காததால் அவர்கள் படும் துன்பம் பாவத்தின் வடிவில் கவனிக்க தவறியவர்களை சேருவதாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இது பித்ரு தோஷம் எனப்படுகிறது.
பித்ருதோஷம் நீங்கவும், பித்ருக்கள் ஆன்மா சாந்தியடையவும் அவர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்றிட வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்கள். உதவிகள் பல செய்து கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று தாய், தந்தையர்களை நினைத்து நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். அதன் பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணி வைத்து அகல் விளக்கேற்றி தூபதீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்டபிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்த நபர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்கள் அணிந்து கொள்ளலாம்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது. பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கிட அவர்களுக்கு முக்திப்பேறு கிட்டும்.
இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவார்கள். தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்கி, கெடுதல் துன்பத்தினை தங்கள் புனிதச் செயலால் தடுத்து நிறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, கோடியக்கரை, பவானி, திருச்சி அம்மா மண்டபம், திலதர்ப்பணபுரி ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment