முன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.
அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.
வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.
அதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.
இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.
உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.
இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.
இங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.
ஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.
கிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.
இறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.
ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.
மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்.
No comments:
Post a Comment