அமிர்தம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது சில பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அதில் காமதேனு என்ற பசு, உச்சை சிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர்களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார். திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார்.
இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர். அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர்.
அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தைக் காத்து அருளும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, ‘நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்’ என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.
அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள். பின்னர், ‘முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?’ என்றாள்.
அசுரர்கள் அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம் என்றனர்.
அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது. மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களைப் போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். அவனைக் கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.
அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான் சுவர்பானு. தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதினான். ஆனால் அவனைக் கவனித்த சூரியனும் சந்திரனும் அவன் ஒரு அசுரன் என்பதை மோகினிக்கு உணர்த்தினர்.
இதையறிந்த மோகினி, அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள். உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. மேலும் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன.
அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்த மோகினிக்கு, சுவர்பானு உருமாறி வந்த காரணம் கிடைத்து விட்டது. அதைச் சுட்டிக் காட்டி அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க மறுத்து விட்டாள். இதனால் சுவர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களின் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான்.
பிரம்மதேவரோ, ‘நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு ‘ராகு’ என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு ‘கேது’ என்றும் பெயர் அமையும்’ என்றார் பிரம்மதேவர்.
இதையடுத்து பிரம்மனிடம் மேலும் சில வேண்டுதலை வைத்தான் சுவர்பானு. ‘சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்’ என்றான் சுவர்பானு.
பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து ‘நவக்கிரக பரிபாலனத்தில் இணையும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்’ என்று பிரம்மன் அருள்புரிந்தார்.
அப்போது ராகு-கேதுவின் முன்பாக மகாவிஷ்ணு தோன்றினார். அவர் பிரம்மனிடம், ‘ராகுவையும், கேதுவையும் உடனடியாக நவக்கிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் அசுரன் ஒருவனை அப்படி ஈடுபடுத்துவது சரிவராது. அது அசுரர்களின் பலத்தை அதிகரிக்கும். கடைசி அசுரனான ராவணன் அழியும் வரை, கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகு மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலமாக கற்றுணர்ந்து கொள்ளட்டும். ராவணன் அழிவுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ராகு ஞானகாரகனாகவும், கேது மோட்சகாரகனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சத்தை பெற அனுக்கிரகம் செய்யட்டும்’ என்றார்.
அதன்படியே ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு.
No comments:
Post a Comment