ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.
மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.
குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.
நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.
பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.
No comments:
Post a Comment