Tuesday, 14 August 2018

கருட பகவான் வரலாறு

கருட பகவான் வரலாறு

மரீசி எனும் மகரிஷிக்கு கச்யப மகரிஷிமகனாகப் பிறந்தார். இவர் தட்சப்பிரஜாபதியின் மகள்களான கத்ரு, விநதை என்பவர்களை மணந்து கொண்டார்.

தன் மனைவியர் இருவர் மீதும் மாறாத அன்புடன் வாழ்ந்து வந்தார் கச்யபர். பல்லாண்டுகள் ஆகியும் குழந்தைச்செல்வம் இல்லாததால் கச்யப மகரிஷி, புத்ர காமேஷ்டி யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த யாகத்தில் கலந்து கொள்ள தேவர்களும், முனிவர்களும் சமித்துக்களோடு வந்திருந்தனர். தேவர்களின் தலைவனான இந்திரனும் பொரச மரத்தின் கிளையையே யாகத்திற்காக ஒடித்துக்கொண்டு வந்திருந்தான்.

பிரம்மாவின் மனதில் தோன்றிய புத்திரர் க்ருது என்பவர்.இவர் க்ரியா என்பவரை மணந்து பத்தாயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவர்கள் சுண்டு விரலின் பாதிக்கும் குறைவான உயரத்துடன் காணப்பட்டனர். அவர்களை வாலகில்யர்கள் என்று அழைத்தனர்.

இந்த வாலகில்யர்கள் மகா தபஸ்விகளாக விளங்கினர். தினமும் சூரிய மண்டலத்தை வலம் வந்தும் ஆல மரத்திலும் மூங்கில் இலைகளிலும் தலைகீழாகத் தொங்கியும் கடுந்தவம் செய்து வந்தனர். இவர்களும் யாகத்திற்கு வரத்தொடங்கினர்.

இவர்கள் யாகத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டனர். எனவே இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிறிய சமித்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மிகவும் சிரமத்துடன் நடந்து வந்தனர்.

கச்யப மகரிஷி யாகம் செய்வதற்கு முதல்நாள் நாட்டில் நல்ல மழை பெய்திருந்தது. அதனால் வழியெங்கும் மழைநீர் தேங்கி இருந்தது. ஒரு மாட்டின் குளம்படி பட்டு பள்ளமாகி இருந்த இடத்திலும் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த இடத்தை பத்தாயிரம் வாலகில்யர்களும் கடக்கும்போது சில வாலகில்யர்கள் அதில் விழுந்து விட்டனர். இதைக் கண்ட இந்திரன் கேலி செய்து சிரிந்து விட்டான்.

மனம் நோந்த வாலகில்யர்கள், இனி நாங்களே புது இந்திரனை உண்டாக்குவோம் என்று சொல்லி மகாயாகம் செய்யத்தொடங்கி விட்டனர். இதை நாரத மகரிஷி இந்திரனிடம் தெரிவித்தார். உடனே இந்திரன் கலங்கித் தவித்தான். தான் அறியாமல் செய்த தவற்றை உணர்ந்து வருந்தினான். இதில் இருந்து விடுபட என்ன வழி என்று நாரத மகரிஷியிடம் கேட்டான். அதற்கு அவரும் கச்யப மகரிஷியை சரணடைந்து உதவி கேள் என்றார். உடனே இந்திரனும் கச்யப மகரிஷியின் திருவடியில் சரணடைந்து தன்னைக்காக்கும்படி வேண்டினான். மனம் உருகிய கச்யப மகரிஷி, வாலகில்யர்களிடம் பிரம்மதேவனால் பதவியில் அமர்த்தப்பட்ட இந்திரனை சபிக்க வேண்டாம். இவனது குற்றத்தை உடனே நிறுத்துங்கள் என்றார்.

ஆனால் வாலகில்யர்கள் யாகத்தை நிறுத்தமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அதனால் கச்யப மகரிஷி, அப்படியானால் நீங்கள் உண்டாக்கும் இந்திரன் பறவைகளின் அரசனாக வேண்டுமானால் இருக்கட்டும். மகாவிஷ்ணுவையே சுமக்கும் பாக்கியத்தைப் பெற்று, அனைவராலும் பெரிய திருவடி என்று போற்றப்படுவான் என்று வேண்டிக் கொண்டார்.

மனம் இளகிய வாலகில்யர்கள், கச்யபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வாறே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டனர். மேலும் அப்படி உருவாகும் பிள்ளைக்கு கச்யபரே தந்தையாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். கச்யபரும் ஒத்துக்கொண்டு இந்திர யாகத்தின் பலனையும் புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனை பெற்று தன் இல்லத்தை அடைந்தார்.

அங்கு தன் மனைவியர் இருவரையும் அழைத் யார் யாருக்கு எப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மூத்தவளான கத்ரு என்பவள் அனைத்து சக்திகளையும் ஒருங்கே பெற்று மகிமைகளை உடைய ஆயிரம் பிள்ளைகள் ஒரே நேரத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டினாள். இளையவள் விநதை, கத்ருவிற்கு பிறக்கப்போகும் ஆயிரம் குழந்தைகளுக்கு ஈடான இரண்டு தவப்புதல்வர்கள் வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தி யாகப் பலன்களை சமமாகப் பங்கிட்டு அவர்களுக்கு வழங்கினார் கச்யபர்.

கத்ரு ஆயிரம் முட்டைகளையும், விநதை இரண்டு முட்டைகளையும் பெற்றனர். ஐநூறு வருடங்கள் கழித்து, ஆயிரம் முட்டைகளில் இருந்தும் ஆயிரம் மகா சக்தி வாய்ந்த நாகங்கள் தோன்றின. அவற்றில் அநந்தனும், சங்கபாலனும் வெண்மை நிறத்தோடும், வாசுகியும் பத்மனும் சிவப்பு நிறத்தோடும், மஹாபத்மனும் தட்சகனும் மஞ்சள் நிறத்தோடும், கார்க்கோடகனும் குளிகனும் கறுப்பு நிறத்தோடும் பிறந்தனர்.

தன் சகோதரிக்கு ஆயிரம் குழந்தைகள் பிறந்தும், நமக்கு இரண்டு குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லையே என்ற வேதனையில் ஒரு முட்டையை உடைத்தாள் விநதை. அதில் இருந்து மேல்பாகம் நல்ல ஒளி பொருந்திய உடலோடும், கீழ்பாகம் எதுவும் வளர்ச்சி அடையாமலும் ஒரு பறவை தோன்றியது. தான் அவசரப்பட்டதை உணர்ந்த விநதை அழத்தொடங்கினாள். அப்பொழுது பாதி உடலோடு தோன்றி பறவை, தாங்கள் அவசரப்பட்டு முட்டையை உடைத்தனதால் இந்த விபரீதம் நடந்தவிட்டது. எனவே நீங்கள் யாரைக்கண்டு பொறாமைப் பட்டீர்களோ, அவருக்கு ஐநூறு ஆண்டுகள் அடிமையாகப் பணி செய்வீர்கள். 

அதன்பிறகு இரண்டாவது முட்டையில் இருந்து தோன்றும் என் தம்பியே உங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பான் என்று கூறியது.
சில காலங்கள் சென்றதும், விநதை தன்னையும் தன் மகன் கருடனையும் அடிமையிலிருந்து விடுதலை செய்யும்படி கத்ருதேவியிடம் கேட்டுக்கொண்டாள். 

அதற்கு கத்ருதேவி தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தை சன்மானமாகக் கொடுத்தால் விடுதலை செய்கிறேன் என்று சொன்னாள். உடனே கருடன் தன் தாயின் அருளாணையால் அமிர்த கலசத்தை கொண்டுவர தேவலோகம் சென்றான்.

தேவர்களுக்கும், கருடனுக்கும் நடந்த போரில் கருடன் தேவர்களை வீழ்த்திவிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் வேளையில் மகா விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளின்படி கருடனை தாக்க முனைந்தார். கருடனுடன் ஸ்ரீமந்நாராயணன் வெற்றி தோல்வி இன்றி சரிசமமாக 21 நாட்கள் போர் செய்தார் கருடனைத் தோற்கடிக்க மகாவிஷ்ணுவால் முடியவில்லை.

காசியபரிடம் கருடன் கற்ற போர் வித்தைகளினால் பெருமானை எதிர்த்து, அவருக்கு சரிசமமாக போர் செய்தான் 21 நாட்கள். இது கருடனின் அபார வலிமையை குறிக்கிறது. மேலும் கருடனின் மாத்ருபக்தியும், மாதுர்வாக்ய பரிபாலனமும் அவனுக்கு அளவற்ற ஆற்றலை அளித்தது. 21-ம் நாள் கழித்து கருடனுக்கு ஓர் சிந்தனை தோன்றியது. மகா விஷ்ணுவே நம்மை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. இந்த சிந்தனை எப்போது கருடனுக்கு தோன்றும் என்பதற்காக காத்திருந்த பெருமான் ஸ்ரீமந் நாராயணமூர்த்தி போரை நிறுத்திவிட்டு கருடனின் தாய் பக்தியை பாராட்டினார்.

மேலும் “கருடா உமக்கு என்ன வேண்டும் வரம் கேள் அளிக்கிறேன்” என்றார். அதற்கு கருடன் கர்வம் கொண்டு, “நீர் வேண்டுமானால் என்னிடம் வரம் கேள் தருகிறேன்” என்றான். உடனே பகவான் “வாக்கு தவறக்கூடாது” என்று சத்தியம் வாங்கி கொண்டு, “கருடா நீ எனக்கு வாகனமாக இருந்து சேவை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

கருடனின் கர்வம் ஒழிந்தது! ஞானம் பிறந்தது. “அமிர்த கலசத்தை தாயிடம் சேர்ப்பித்துவிட்டு பிறகு வந்து உமது வாகனமாகி சேவை புரிகிறேன் என்று விஷ்ணுவிடம் அனுமதி பெற்று தாயிடம் அமிர்தத்தை சேர்ப்பித்தான். அதை கருடனின் தாய் விநதை, கத்ருதேவியிடம் கொடுத்து அடிமையிலிருந்து விடுவித்து கொண்டாள். பிறகு கருடன் விஷ்ணு வாகனம் ஆனார்!

No comments:

Post a Comment