வெள்ளாற்றின் சப்தத்துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட பூமி, திட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில், சோழன், பாண்டியன், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த ஆலயம், வில்வ மரத்தைத் தல மரமாகக் கொண்ட பெருமாள் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.
தல வரலாறு :
இத்தலத்தில் வசிஷ்ட மகரிஷி தவம் இயற்றினார். இவருக்கும் அருந்ததிக்கும் இவ்வூரில் தான் திரு மணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் குறிக்கும் விதமாக, இவ்வூர் வைத்தியநாதன் சிவாலயத்திலும், நானூற்றி ஒருவர் திருக்கோவிலும் வசிஷ்டர்-அருந்ததிக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீமந் நாராயணன் பூவுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, மூன்றுவிதக் கோலமாக திட்டக்குடியில் அமர்ந்த கோலத்திலும், கிழக்கில் வசிஷ்டபுரத்தில் சயன கோலத்திலும், மேற்கில் கூத்தப்பன்குடிக் காட்டில் நின்ற கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
சோழநாட்டில் வட எல்லையாகப் பாய்வது வெள்ளாறு. இந்நதி ஸ்வேதநதி, நீவாநதி, பருவாறு, உத்தம சோழப் பேராறு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இதன் வடகரையில் அமைந்த தலமே திட்டக்குடி. சைவ - வைணவ சமயங் களின் பெருமைகளைப் பறைசாற்றும் திருக்கோவில்கள்அமைந்த ஊர் இது.
‘திட்டை’ என்றால் ‘ஆற்றோரம் இருக்கும் மேடான மணல் நிறைந்த நிலப்பகுதி’ என்று பொருள்படும். ‘குடி’ என்பது மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும். எனவே திட்டை + குடி = திட்டக்குடியானது. வசிஷ்டர் பெயரால் வசிஷ்டகுடி என்பது வதிட்டகுடியாகி, பின்னர் திட்டக்குடியானதாகவும் சொல்வார்கள். வெள்ளாற்றங்கரையில் அமைந்த ஏழு ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாக திட்டக்குடி அமைந்துள்ளது.
நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் கி.பி.13, 14-ம் நூற்றாண் டிலேயே கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது, இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகப் போற்றப்படுகின்றது.
ஆலய அமைப்பு :
ஆலயத்தில் எளிய நுழைவுவாயில் மட்டுமே இருக்கிறது. ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் காட்சிதர, அதனையடுத்து சுகாசனப்பெருமாள் சன்னிதி நம்மை வரவேற்கிறது. கருவறையின் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகாசனப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார். வலதுபுறம் வேதாந்தவல்லித் தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது தவிர, தும்பிக்கையாழ்வார், ராமர் பாதம், ராமர் பட்டாபிஷேகக் கோலம், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆண்டாள் உள்ளிட்ட சன்னிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமியிலும் 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதுதவிர நவராத்திரி ஒன்பது நாள் உற்சவம், கிருஷ்ணஜெயந்தி மற்றும் வைணவ விழாக்கள் அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.
மூலவர் சுகாசனப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். இவருக்கு தைலக்காப்பு, வண்ணப்பூச்சும், சுதை வேலைகளும், திருச்சுற்று மாளிகை கூரை வேலைகளும் உடையார்பாளையம் ஜமீன்தாரர்களால் அழகுற செய்யப்பட்டுள்ளன. மூலவர் திருமேனிகளை, நாள் முழுவதும் அலுப்பு தட்டாமல் பார்த்து ரசித்தபடியே இருக்கலாம். இறைவன் திருமேனி அவ்வளவு அழகு. நேரில் அனுபவித்தால் மட்டுமே அதை உணரமுடியும்.
இவ்வாலயம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் உடையார்பாளையம் ஜமீனின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் வேதாந்தவல்லித் தாயார், சுவாமி சன்னிதியின் வலதுபுறம் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் வடிவம் எளிய வடிவம் என்றாலும், அருளை வாரி வழங்கும் அன்னையாக உயர்ந்து விளங்குகின்றாள்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் இங்கு உள்ளன. ஆலயத்தின் தல மரம் பழமையான வில்வ மரம் ஆகும். பொதுவாக சிவன் ஆலயத்தில் இருக்கும் வில்வமரம், வைணவ திருத்தலத்தில் இருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆலய தீர்த்தம் சுவேத நதி என்ற வெள்ளாறு ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தொன்மைச் சிறப்பு:
இத்தலத்தின் வரலாற்றினை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகிய மன்னர் களின் விவரங்களையும் இந்த கல்வெட்டு கூறுகிறது.
இவ்வூர் நரசிங்கசதுர்வேதிமங்கலம், திருச்சிற்றம்பல சதுர்வேதிமங்கலம், வித்தியாரண்யபுரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகள் மூலமாக இக்கோவிலுக்குச் சோழர், பாண்டியர் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்ததையும், ஆலயத்தைப் போற்றி வளர்த்ததையும் உணர முடிகிறது. மேலும், இப்பகுதியைச் சார்ந்த சித்திரமேழிப் பெரியநாட்டார்கள் மற்றும் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் இணைந்து, இவ்வாலயத்தை எழுப்பியதாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றன.
அமைவிடம் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வைத்தியநாதன் ஆலயத்தின் மேல் புறம் அமைந்த பெருமாள் கோவில் தெருவில் சுகாசனப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. கடலூரில் இருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் திட்டக்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொழுதூர். இங்கிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் சென்றாலும் இந்த ஆலயத்தை அடையலாம்.
No comments:
Post a Comment