Monday, 19 August 2019

ஓர் இடத்தில் 11 தேசம்


108 திவ்யதேசங்களில் சீர்காழி அருகே திருநாங்கூரில் மட்டும் 11 தேசங்கள் உள்ளன. அவை திருக்காவளம்பாடி, அரியமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய் கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், திருத்தேவனார் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகியவை. காவளம்பாடியில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபால கிருஷ்ணர் கோயில் கொண்டிருக்கிறார். 

காவளம் என்றால் பூஞ்சோலை. சத்யபாமாவுக்கு பூக்கள் மீது விருப்பம். அதிலும் பாரிஜாதம் மிகவும் பிடிக்கும். அதற்காகவே துவாரகாபுரி அரண்மனையில் கிருஷ்ணர் பூஞ்சோலைகளை உருவாக்கினார். தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடிகள் வரவழைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டன. ஒருமுறை ''சுவாமி! இது போல பூஞ்சோலைகள் பூமியில் வேறெங்கும் உள்ளதா?'' எனக் கேட்டாள் பாமா. 'காவளம்பாடி' என்றார் கிருஷ்ணர். அதனடிப்படையில் இங்கு கோயில் கட்டப்பட்டு, 'தென் துவாரகை' என பெயரும் பெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலகிருஷ்ணருக்கு இங்கு பூஜைகள் நடக்கும். 

இங்கு மூலவர் மன்னார்குடி ராஜகோபாலர் போல காட்சியளிக்கிறார். இங்குள்ள தாயாரின் பெயர் செங்கமல நாச்சியார். 

இக்கோயிலில் தைஅமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருடசேவையில் திருநாங்கூர் திவ்யதேசங்களான 11 கோயில் உற்ஸவர்களும் ஒரே நேரத்தில் எழுந்தருள்வர். அப்போது திருமங்கையாழ்வார் மங்களாசாசன விழா (பாடும் வைபவம்) நடக்கும். இங்குள்ள வயல்களில் 'சலசல' என காற்றில் நெற்கதிர்கள் ஆடுவதைக் காணும்போது பக்தர்கள், திருமங்கையாழ்வாரே 'சலசல' என ஆடுவதாக பக்தர்கள் நினைப்பர்.

எப்படி செல்வது? : சீர்காழி - பூம்புகார் வழியில் 18 கி.மீ.,
விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, தை அமாவாசை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 08:00 மணி
தொடர்புக்கு: 04364 - 275 478
அருகிலுள்ள கோயில்: சீர்காழி சட்டைநாதர் கோயில் (18 கி.மீ.,)

No comments:

Post a Comment