கோயில்களில் நடத்தப்படும் உற்சவ விழாக்களில் முடிந்த வரை அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு விதமான விழாக்களை நடத்துவார்கள். தற்போது பெரும்பாலான கோயில்களில் வசந்தோற்சவம் நடந்து கொண்டிருக்கும். பல கோயில்களில் பிரம்மோற்சவம் நடக்கும். நாம் சிந்திக்க வேண்டிய விஷயமே கோயில் விழாக்களில் இருக்கின்ற சூட்சுமமான விஷயங்களைத்தான்.
முதல் விஷயம், இம்மாதிரியான உற்சவ விழாக்கள் அனைத்திலுமே சமூக ஒற்றுமை ஓங்கியிருக்கும். பெரும் மக்கள் திரளை இம்மாதிரியான விழாக்கள் ஒன்று கூட்டும். இதனால் மக்கள் தங்களின் அன்றாட அலைச்சல்களிலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி கொள்வார்கள்.
கோயில்களில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாறு பலநூறு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக இருக்கும். இப்போது அந்த விழாவில் அந்த வரலாற்று நிகழ்வை எல்லோரும் அறியும் பொருட்டு சடங்காக்கியோ அல்லது ஐதீக விழாவாகவோ மாற்றி வைத்திருப்பார்கள்.
கொஞ்சம் உற்று கவனித்தால் அந்தப் பிரதேசத்தின் வரலாற்று நிகழ்வுகள் கூட இருக்கும். இதனால் அந்த வரலாற்றை அழியவிடாது காப்பாற்றிக்கொண்டே வந்திருப்பதை அறியலாம். இரண்டாவது ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல புராணம் இருக்கும். தல புராணத்தின் இலக்கே தனி மனித ஆன்மிக விழிப்புணர்வுதான்.
தன்னை ஒருவர் சிவ பக்தராகவோ அல்லது வைணவ பக்தராகவோ நினைக்கும், அந்தந்த கோயில் தலபுராணத்தை எடுத்துப் பார்த்தால் அந்த பக்தரை அந்தத் தலபுராணக் கதையானது இன்னும் அணுக்கமாக இறையை நோக்கி நகர்த்துவது முழுவதுமாக புரியும். பெரும்பாலான தல புராணங்கள் மிக மிக சூட்சுமமானவை நிறைய குறியீட்டுச் சொற்களும் கதைகளுமானவை ஆகும்.
நேரடியான பொருளை எடுத்துக் கொண்டால் சிலசமயம் விபரீத அர்த்தங்களைக் கூட கொடுக்கும். அதனால் தலபுராணங்களை அதற்குரியவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் நல்லது. இம்மாதிரியான தலபுராணங்களை பிரம்மோற்சவம் போன்ற பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் நினைவூட்டுவதுபோல் மீண்டும் ஐதீக விழாவாக நடத்திக் காண்பிப்பார்கள்.
கோயில் உற்சவங்கள் கலையழகோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. அழகியலோடு நடத்தப்படுபவை. இசை, நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. அலங்காரங்கள் மிகுந்து மனதை கொள்ளை கொள்பவை. பெரும் தத்துவத்தை பத்து உற்சவங்களில் விழாக்களாக மாற்றி வைத்திருக்கும் ஆச்சரியம் நிரம்பியவை.
இந்த விழாக்கள் பக்தி, ஞானம் இவை இரண்டையும் நம்முடைய கர்ம மார்க்கத்தில் எளிதாக கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை கொண்டவையாகும். திருவிழாக்களும் உற்சவங்களும் புற உலகில் குதூகலத்தையும், அக உலகின் அழகையும் அமைதியையும் எளிதாக தருபவை. எனவே, உற்சவங்களை உற்று நோக்குங்கள். அது உங்களையே உங்களுக்குக் காட்டும்.
No comments:
Post a Comment