நாம் கோயிலுக்குச் செல்வது இறைவனை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா? ஏன் அசைவ உணவை உண்டு விட்டு கோயிலிற்கு செல்லக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்? இப்படி பல கேள்விகள் பலர் மனதில் எழுவதுண்டு. அதற்கான அறிவியல் பூர்வமான விடையை காண்போம்.
மற்ற நாகரீகங்களில் எல்லாம் உணவு என்பது உடலில் உயிரை தக்க வைப்பதற்கும், தசைகளை பெருக்கி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு விடயமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே உண்ணும் உணவை இறைவனின் அருட்பிரசாதமாக பாவிக்கும் தன்மை காணப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இறவாவரம் தரும் இறைவனின் அருட் பிரசாதம் என்கிற பொருள் தரும் வகையில் உணவு சாப்பிடுவதற்கு அமுது உண்ணல், அமுது செய்தல் என உணவை குறிப்பிடும் சொற்றொடர்கள் அதிகம் கணக்கிடைக்கின்றன.
நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்த நிலையை ஏற்படுத்தும்.
பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகின்றார்.
பொதுவாக இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இன மக்களும் சித்தர்கள், ரிஷிகள் போன்ற ஆன்மீக பெரியவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கின்றனர். அத்தகைய சித்தர்களும், ரிஷிகளும் இறையாற்றல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறையாற்றல் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு புலால் எனப்படும் மாமிச உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய உயர்வான நிலையான ஞானம் எனப்படும் தெய்வீக நிலையை அடைவதற்கு புலால் உணவு சாப்பிடுதல் பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகள், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் யோகம், தியானம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களான சித்தர்கள், ரிஷிகள் அசைவ உணவு சாப்பிடும் நபர்களின் உடல் மற்றும் மனம் பஞ்சபூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தி கிடைக்கப்பெறாமல் போகும் நிலை உண்டாகிறது.
குறிப்பாக கோயில்களில் இந்த தெய்வீக பிராண சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதை அறவே நீக்கியவர்கள், சிறிதளவு சைவ உணவுகளை சாப்பிட்டு கோயில்களுக்கு சல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
அசைவ உணவுகள் இத்தகைய நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவையாகும். எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
நமது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ள கூடிய உயரிய இடமான கோயில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேர்வதோடு, ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்திவிடும். எனவே முடிந்த வரை கோயிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாக இருக்கும்.
ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.
No comments:
Post a Comment