தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார்.
ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள்.
இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.
மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், சுகந்த கும்பளாம்பிகையுடன் இருக்கிறார். தட்சனின் யாகத்தை அழிக்கப் புறப்பட்ட வீரபத்திரர் அவதாரம் செய்தது இங்கு தான். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர்.
சித்திரை அமாவாசையன்று சூரிய தீர்த்த நீரை தலையில் தெளித்தால் பாவம் தீரும். தியானத்திற்கு ஏற்ற திருத்தலம் இதுவாகும். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.
விசஷே நாட்கள் : சித்திரை அமாவாசை, வைகாசி விசாகம், நவராத்திரி, மகாசிவராத்திரி
நேரம் : காலை 7:00 - 11.30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
எப்படி செல்வது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ.,
No comments:
Post a Comment