பஞ்சேஷ்டி சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.
அம்பிகையின் நேர்பார்வையில் நவக்கிரகங்கள், அஷ்ட திக்பாலகர்கள் அமைந்துள்ளதால் நம்முடைய அனைத்து நவக்கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும்.
இதனால் இத்தலத்தை பரிகாரத் தலம் என்றும் கூறுகின்றனர். திருமணத் தடை நீங்க துர்கா யந்திரம் அமைந்துள்ள சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லாவித திருமணத் தடைகளும் நீங்கும்.
ஒரு ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், அத்திருத்தலம் பரிகாரத் தலமாகக் கருதப்படும் என்பது ஐதீகம்.
பஞ்சேஷ்டி திருக்கோவிலின் ராஜகோபுரமும் தெற்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்ரு சம்ஹாரியாக விளங்கும் அன்னை ஆனந்தவல்லிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சேஷ்டி திருத்தலம் பரிகாரத் தலமே ஆகும்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால், சத்ரு தோஷம், திருமண தோஷம், முன்னேற்றத் தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் நீங்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறந்த பஞ்சேஷ்டி திருத்தலம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் திருக்குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்து தீபங்கள் ஏற்றி பரிகார சங்கல்பங்கள் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். அகண்ட தீபமும் ஏற்ற வேண்டும்.
No comments:
Post a Comment