Sunday, 25 August 2019

குழந்தைகளைக் காக்கும் அன்னையாய் மயிலாடுதுறை ராஜராஜேஸ்வரி அம்மன்


நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு ராஜராஜேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் ‘ராஜராஜேஸ்வரர்.’ இறைவியின் திருநாமம் ‘தேவநாயகி’ என்பதாகும். இந்த அன்னையின் அற்புத சக்தி பற்றி செவி வழி சம்பவம் ஒன்று சொல்லப்படு வருகின்றது.

வயல்வெளியில் நாற்று நட்டுவிட்டு வீடு திரும்பிய பெண், தூளியில் படுத்திருந்த தனது இரண்டு வயது பெண் குழந்தையைப் பார்த்து பதறினாள். குழந்தை முனகிக் கொண்டிருந்தது. தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அனலாக அடித்தது. அப்போது மாலை 6 மணி. ஊரில் இருக்கும் நாட்டு மருத்துவரிடம் காட்ட குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள். அங்கும் விதி விளையாடியது. மருத்துவர் ஊரில் இல்லை. அரசு மருத்துவமனை மயிலாடுதுறை என தற்போது அழைக்கப்படும் மாயவரத்தில்தான்   இருந்தது. 9 கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். ‘என்ன செய்வது?’ புரியவில்லை அந்த இளம் தாய்மைக்கு.

“காலையில் போகலாம்” என்று கணவன் கூற, அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள அன்னை தேவநாயகியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு, குழந்தையை அணைத்தபடி படுத்தாள். சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள். அதிகாலை நேரத்தில் அவளுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு பெண் சிரித்த முகத்தோடு தோன்றினாள். “நான் இருக்க பயம் எதற்கு?” என்று கேட்டபடியே, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசினாள். பின்னர் சிரித்தபடியே மறைந்து போனாள்.

திடுக்கிட்டு கண் விழித்த அந்த தாய். தன் குழந்தையை தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் வந்ததற்கான அறிகுறியே இல்லாதது போல் குழந்தை நலமோடு இருந்தது. கனவில் வந்தது அன்னை தேவநாயகிதான் என்று உணர்ந்த அந்தப் பெண், தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு ஆலயம் நோக்கிச் சென்றாள். அன்னையின் முன்பாக குழந்தையை கிடத்தியவள், கண்கள் கலங்க அன்னைக்கு நன்றி கூறியதாக அந்தச் செய்தி சொல்லப்படு வருகின்றது.

இந்த ஆலயத்தினுள் நுழைந்ததும் மகாமண்டபத்தின் கீழ்திசையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையில் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் தேவநாயகி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டி இருக்கின்றன. கீழ் இரு கரங்களை தொங்க விட்டபடி, நின்ற கோலத்தில் புன்னகை தவழ இருக்கும் அன்னையின் அழகே அழகு.

இந்த ஆலயமானது, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர், அங்குள்ள பக்தர்கள். ஆலயத்தின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமை தோறும் இந்த தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று தயிர் சாதம் பிரசாதமாக தரப்படு வருகின்றது.

பிரகாரத்தின் மேற்கு பகுதியில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், வடக்கில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். மேற்கு திசை நோக்கி சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர் பக்தர்கள். சனிப் பெயர்ச்சியின் போது விசேஷ ஹோமம் இங்கு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை.

சோழ மன்னன் ராஜராஜன் சபையில் லட்சுமண பண்டிதர் என்ற அமைச்சர் இருந்தார். அவர் இந்த ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். அவர் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முறைப்படி கற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு, ஒவ்வொரு கால பூஜையின் போதும் வேதங்களை ஓதச் செய்து இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நல்ல விதமாக நடக்க ஏற்பாடு செய்தாராம். அந்த வழக்கம் மேலும் பல தலைமுறைகள் நடைமுறையில் இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் நவராத்திரி, திருவாதிரை, மார்கழி 30 நாட்கள், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படு வருகின்றது.

தற்போது இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மற்றும் வன்னி மரம் ஆகும். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குழந்தைகளைக் காக்கும் அன்னையாய் தெய்வமாய் அன்னை தேவ நாயகி விளங்குவதாகவே பக்தர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment