கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. புத்திசாலியான பெண் குழந்தை வேண்டுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, 'வர்ணகலாபேரர்' என அழைக்கின்றனர். இவரது சந்நிதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.
கிளி செய்யும் முறை:
இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.
கீர்த்தி தரும் ஆண்டாள்:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.
No comments:
Post a Comment