1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் ஐயன் சாயிநாதனே! அத்ரி அநுசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே! வாசுகியால் கடையப்பெற்று அமுது பொங்கிய தலம் ஷீர்டியில் எழுந்தருளிய பரப்ரஹ்மமே, கற்பகத்தருவே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே, பாத வல்லபனே! நரஸிம்ஹ சரஸ்வதியே, அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தனே! பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரட்சகனே, அல்லாவின் புதல்வனே, இடர் நீக்கி, துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
2. அனுதினமும் சாயிநாமமே பிரதானமென்று எனக்கு விதித்த கடமையும் மறந்து, உன்னையே நினைந்து, உன் பாதமே பணிந்து பலவித பூஜைகள் செய்தேன். உன் திருக்கதை படித்தேன். திருநாமம் ஜபித்தேன். உன் சொற்படி அன்னதானமிட்டேன். பிறர் மனதை நோகடித்து அறியேன் இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட யாம் செய்த பிழைதாம் யாதென உரைத்திடுவாய். பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பனென்று என்னைப் புரிந்திட்டாயா? குழம்பித் தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
3. வசீகர அருளால் பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பதம் பற்றியதால், அடியேனுக்கு இரங்கிட உமக்கு நேரமில்லையா? மனமில்லையா? நொடிப் பொழுதும் உன்னைப் பிரியேன். இமைப்பொழுதும் உன்னை விலகிடேன். என் பக்தியில் நீ கண்ட பிழையறியேன் சாயி! முன்வினையோ! தீவினையோ? நானறியேன். தீவினையைத் தீக்கிரை யாக்க உன் தயவொன்று போதுமே. கருணா சாகரா! தாயிலும் மேலான தயை மனம் கொண்டவனே. சேய் அழுதால் தாங்குமோ உன் மனமே? உன் நாமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும், ஷாமாவை காலனின் பிடியிலிருந்து காத்தாயே ! சர்வேஸா! சேஷசாயி! என்னைக் காத்தருள ஏனிந்தத் தயக்கம்? கண்கள் நீர் சொறிந்து காய்ந்தும் போனதே, நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே. உன் நினைவன்றி வேறு எதையும் நினைந்திடேனே. நீயே அடைக்கலமென்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திக்கிரங்கி இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரமளித்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
5. தூய மனதில் நான் உன்மேல் கொண்ட பக்தி சத்தியமே. உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி, சாயி பித்தனாயும் ஆனேனே. உன் பதமலரில் பக்தியோடு விழுந்து கிடந்தேனே. நீ என்னைப் பாராமல் போனால் அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் நம்மைக் கேலி பேசுமே, சாயி உன்னிடம் இரங்கவில்லை, உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னைத் தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்? உலகம் உன்னையும் பழிக்குமே, உலகம் உன்னைப் பழித்தால் என் மனம் தாங்காதே. பழிச்சொல்லிலிருந்து காப்பாற்றி பக்தனையருள விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
6. ஏதுமறியோ மூடனாய், அறிவிலியாய், இறைவனை அறியாமல் திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய். எம்மதமும் சம்மதம் என்ற சர்வதத்வ போதகனே. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்காளமிடுமே. தெய்வம் பொய்யானதே என்று எள்ளி நகையாடுமே. பக்தி நம்பிக்கையை ஏசிடுமே. நீ பொய்யில்லை. நீ சத்தியமென்று நான் அறிவேனே. உண்மையாய் உலகமுழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருமையுடன் பறைசாற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
7. அக்னி ஹோத்ரியாய் துனியை எரிய விட்டு, அரும் உதியால் பக்தனின் பிணி, துயர் போக்கும் துவாரகமாயி வாழ் ஆனந்த சாயி! பஞ்சபூதமும் உந்தன் கையசைவிலே, விரல் சொடுக்கில் விதியையே மாற்றும் விஸ்வநாதனே, பிரம்ம ஸ்வரூபனே! உம்மையன்றி யாரையும் அறியாத என் வேதனையைக் போக்கிடுவாய். துன்பக்கடலில் தத்தளிக்கும் எமக்கு தோணியாய் வந்திடுவாய். என் விண்ணப்பங்களை விருப்பமாய்க் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தருவாய். ஈடில்லா செல்வமும், வெற்றியும், பிணியிலா வாழ்வும், இறையருளும், நற்கதியும் பெற்றிட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
8. யாமிருக்க பயமேன்! நம்பிக்கை, பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். பொறுமைக்கொரு எல்லை உண்டே. நான் உயர் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே. காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன் சென்று விட்டனரே. கவலையில் நெஞ்சும் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு, வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட புழுபோல் துடிதுடிக்கும் பக்தனுக்கிரங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும், சீரும் சிறப்பும், ஆரோக்கியம் ஆயுளும், புகழ் தரும் வெற்றியும், தனதானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாஸ சாயிநாதனே.
No comments:
Post a Comment