Tuesday 20 June 2017

திருமணத்தில் பட்டுப்புடவை உடுத்துவது ஏன் ?

திருமணம் க்கான பட முடிவு

நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக்கொள்ள உதவும் உரிமை மணமகனின் சகோதரிக்கு தரப்படுகிறது. ஏனெனில் தன் சகோதரன் (மணமகன்) இல்லற சுகங்களைத் துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான்என்பதை அவ்வேளையில் உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பை அவளுக்கு சாஸ்திரம் வழங்குகிறது. இந்த முகூர்த்தப்புடவை கூறைப்புடவை என்றும் அழைக்கப்படும். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையை திருமணம் முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின் பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று சொல்லியுள்ளார்* ஆனால் இது தமிழகத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை.

பட்டுப்புடவை தேவையா?

இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார் தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த பட்டுப் புடவையை வாங்குவதால் அதை பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல் போகிறது. சரி இந்த பட்டுப் புடவை தேவையா? என்று நோக்கும்போது பட்டுத் துணிகள் உயிர்வதையால் உண்டாகிறது. மேலும் ரசாயன நூல்களாலான துணிகள் இயற்கைக்கு ஏற்றதல்ல. மேலும் புதிதாய இல்லறத்தில் இணையும் தம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல ஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே. இயற்கையான பருத்தி நூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.இப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,அதை முகூர்த்தப் புடவையாக பயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது.

புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்?

திருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,அவளது சிறப்பை கண்ணுற்றவாறு அமர்ந்திருப்பர். அதனால் அவள் மீது கண்ணேறு (திருஷ்டி) படிந்திருக்கும். பின்னர் கணவன், தன் மனைவி அந்த முகூர்த்தப்புடவையை மீண்டும் உடுத்தி இருக்கும்போது பார்த்தால்,அது அவனுக்கு குரூரமாக (கண்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக) தெரிய வாய்ப்புண்டு. அந்த குரூர புடவையை, திருமண நாளுக்குப் பிறகு, கட்டப்படாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண அலையின் காரணமாக கணவன், மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராமல் தடுக்க அப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.எனவே தான் அது தானமாக வழங்கப்படுகிறது. மேலும் குரூர புடவை என்பதே திரிந்து கூறைப்புடவை ஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.எனவே அனைவரும் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே பயன்படுத்தி, அதை  திருமணத்திற்குப் பின் தானமும் செய்து, தம்பதிகளின் வாழ்வில் மேன்மையை அடையச்செய்வோம்.

No comments:

Post a Comment