சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. சிவராத்திரி விரதம் மிகவும் எளிமையானது. அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும். வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் சிக்கும் வரை காட்டிலேயே இருக்க முடிவெடுத்தான் வேடன். அதனால், ஒரு மரத்தின் மீதேறி, விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்தான். அவனது குடுவையில் சிறிது தண்ணீர் இருந்தது. அவனது அசைவில், அவ்வப்போது சிறிது கீழே கொட்டியது. அவன் அமர்ந்திருந்த மரத்தின் இலைகளும் உதிர்ந்து விழுந்தன. விடிந்து விட்டது. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம்.
அதன் மேல், குடுவையில் இருந்து கொட்டிய நீர் வழிந்திருந்தது. அவன் அமர்ந்திருந்த வில்வமரத்தின் இலைகள், லிங்கத்தின் முன் விழுந்து கிடந்தது. கருணை மிக்க சிவபெருமான், இந்த தற்செயல் நிகழ்வைக் கூட, தனக்கு நடந்த அபிஷேகமாகவும், பூஜையாகவும் எடுத்துக் கொண்டார். அந்த வேடன் மரத்தில் அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி. எனவே, அவன் மறுபிறவியில், குகன் என்னும், வேடுவ குலமன்னனாக பிறந்து புகழ் பெற்றான்.இதனால் தான், சிவராத்திரியன்று கண்விழித்து, வில்வ இலை தூவி, அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டால், சகல பாக்கியங்களையும் அடையலாம் என்கின்றனர். அன்று, சிவன் கோவில்களில், நான்கு ஜாமகால பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரி அன்று, அதிகாலையில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று. 'நமசிவாய' அல்லது 'சிவாயநம' என, பஞ்சாட்சர மந்திரங்களை ஓத வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. நோயாளிகள், முடியாதவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மாலையில், சிவாலயத்திற்கு வில்வ இலை கொண்டு செல்வதுடன், இரவு மற்றும் கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். மறுநாள் காலையில், அன்னதானம் செய்த பின், சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சிவனுக்கு பல வடிவங்கள் உண்டு. நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள், மனஅமைதியும், ஞானமும் பெறுவர்.
No comments:
Post a Comment