Tuesday, 31 July 2018

பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா?

‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.

சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். 

நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

செல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம்

செல்வ வளம் தரும் குலசுந்தரி மந்திரம்

குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண் கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். 

திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி.

பலன்கள்: இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். 

ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கத் திருமேனி அது. இத்தல இறைவனை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம். இறைவனின் திருநாமம் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். 

அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்குமாம். 

இந்த வார விசேஷங்கள் - 31.7.2018 முதல் 6.8.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 31.7.2018 முதல் 6.8.2018 வரை

31-ந்தேதி (செவ்வாய்) :

* சங்கடஹர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* இன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்வது நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (புதன்) :

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வியாழன்) :

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் ஊர்வலம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (வெள்ளி) :

* ஆடிப் பெருக்கு.
* இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கொடியேற்று விழா.
* சகல புண்ணிய நதிக்கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சவம்.
* ராமேஸ்வரம் சேது மாதவ சன்னிதிக்கு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை விழா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (சனி) :

* மேல்மருவத்தூர், திருவானைக்காவல், காளையார்கோவில், திருப்பாப்புலியூர் ஆகிய திருத்தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சினி அம்மன், திருவாடானை சிநேகவள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் உற்சவம் தொடக்கம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் பவனி.
* இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* சமநோக்கு நாள்.

5-ந்தேதி (ஞாயிறு) :

* கார்த்திகை விரதம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* திருத்தணி முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சினியம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் உலா.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி பல்லாங்குழி ஆடி வரும் திருக்கோலம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார ரிஷப வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (திங்கள்) :

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கு, இரவு தங்க கேடயத்தில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் வீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமானம்.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி ராஜாங்க அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள். 

Monday, 30 July 2018

வேடன் உருவில் முருகன்

வேடன் உருவில் முருகன்

கொல்லிமலை அடுத்த பேளுக்குறிச்சி கிராமத்தில் இருக்கிறது கூவ மலை. இங்கு தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் இருந்து முருகன் சிலையை, பழனியாண்டவரின் நவபாஷாண சிலையை செய்வதற்கு முன்பாக, போகர் சித்தர் செய்து பிரதிஷ்டை செய்தது என்று கூறப்படுகிறது. 

கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் போர்த்தி விட்டதுபோல இருக்கும். இந்த மலையின் பின்புறப் பகுதி, கயிலாயத்தை நினைவுபடுத்தி, ‘எல்லாமே இங்கு அடக்கம்’ என்பதைச் சொல்வதாக இருக்கிறது. இங்கு முருகர் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார். 

நாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்

நாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.

நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

குருவுக்கு மரியாதை

தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார்.

Sunday, 29 July 2018

ஆனந்த வாழ்வளிக்கும் ஆடித்தபசு

ஆனந்த வாழ்வளிக்கும் ஆடித்தபசு

சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜ கோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.

மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.

சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ‘ஆடித்தபசு’ ஆகும். அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெரு மானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டு கிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

அற்புத சக்கரம்

கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்திற்கு ‘ஆக்ஞா சக்கரம்’ என்று பெயர். அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம். அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. 

நோய் தீர்க்கும் புற்றுமண்

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும், புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்ட விடாமல் குடும்பத்தை காக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக் கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும். 

திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது.

Saturday, 28 July 2018

மனதை தூய்மையாக்கும் திருநீறு

மனதை தூய்மையாக்கும் திருநீறு

ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன.

பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன.

திருநீற்றுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. விபூதியை ‘ஐஸ்வர்யம்’ என்றும் சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், அதற்கு ‘ரட்சை’ என்ற பெயரும் உண்டு. வினைகளை அழித்து பொடிபடச் செய்வதால் அதனைத் ‘திருநீறு’ என்று சொல்லுகிறோம். ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை ‘விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவய’ என்று ஓதித் தருவதால் விபூதியை ‘பஞ்சாட்சரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். சாதாரணமான விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதிக்கு உடனடி பலன் கிடைக்கும்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை.. கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பவையாகும்.

கல்பம் என்பது கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன்பாக தாமரை இலையில் பிடித்து உருண்ைடயாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது. இதனை ‘கல்பத் திருநீறு’ என்பார்கள். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று, கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது ‘அணுகல்பத் திருநீறு’ எனப்படும்.

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது ‘உபகல்பத் திருநீறு’ ஆகும்.

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்கு ‘அகல்பத் திருநீறு’ என்று பெயர்.

இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபார நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன் படுத்தப்படுகிறது. இந்த விபூதியை மந்திரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் எதிர்பார்க்க முடியாது.

விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. உண்மையான, மிகச் சிறந்த மகானால் தொட்டுக் கொடுக்கப்படும் விபூதி, எந்த ஒரு நறுமணப் பொருளும் கலக்காமலேயே மிகச் சிறப்பான வாசனையைத் தரும் என்கிறார்கள்.

திருவக்கரை வக்கிரகாளியம்மன்

திருவக்கரை வக்கிரகாளியம்மன்

நீண்ட நாட்கள் கடுந்தவம் புரிந்தான் வக்கிராசூரன். முடிவில் ஈஸ்வரன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று கேட்டார். தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈஸ்வரன் அசைவ உணவு நமக்கு ஆகாதே என்றார்.

காலையில் பூசை செய்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன் என்றான் அசுரன். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரமளித்தார். வரம் பெற்றதும் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உமையவள்தான் சாமுண்டியாக 16 கலைகளுடன் வராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, மகேஸ்வரி, வைணவி, பிராமி எனும் சப்தமாதர்களாகத் தோன்றினான். அவன் எட்டு திருக்கரங்களுடன் சூலம், வில், வாள், ஈட்டி, இருப்புலக்கை, தோமரம், பாசம், அங்குசம், பரசு ஆகிய ஆயுதங்களுடன் தோன்றி அழிக்கத்தக்கவள்.

அவன் பெண்களால் அழிய வரம் பெறவில்லை. அவன் லிங்கத்தைக் கண்டத்தில் வைத்திருக்கும்போது கொல்ல முடியாது.- அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்கவேண்டும் என்று மகாவிஷ்ணு குறிப்பிட்டார்.

அதன்படி மகாவிஷ்ணு ஈஸ்வரியை அழைத்து அசுரனை கொல்லும் வழிமுறைகளைக் கூறினார். ஈஸ்வரியும் 16 கலைகளுடன் பெரிய உருவம் எடுத்து மகாவிஷ்ணு யோசனைப்படி வக்கிர துர்முகியை அழித்து பின்னர் வக்கிராசூரனை அழித்து பதினாறு கலைகளுடன் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்ததால் வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

வக்கிரசூரன் வழிபட்டதால் இத்தலம் திருவக்கரை எனப் பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் வடக்குமுகமான காளியின் எதிரில் வக்கிரசூரன் சிலை உள்ளது. அவன் கண்டத்தில் வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும் இது. திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 

Friday, 27 July 2018

பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி

பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி.

பிறவா நிலை அருளும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில்

பிறவா நிலை அருளும் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவில்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத்தோடு தொடர்புடைய இத்தலத்தில், வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

மிகவும் பழமையான இந்த ஆலயம், ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

யாருக்கு மறுபிறவி இல்லையோ, அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்கிறார்கள். இத்தல இறைவனை தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல், உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி. அம்பாள், பக்தர்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையை வணங்கினால், கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மேலும் அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள்.

அம்பாள் சன்னிதிக்கு அருகில் இரண்டு பைரவர் திருமேனிகள் உள்ளன. ‘சாந்த பைரவர்’ என்ற பெயரில் சிறிய உருவிலும், ‘மகா பைரவர்’ என்ற பெயரில் 5 அடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சன்னிதியில் இந்த பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சன்னிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

சனி பகவானின் பார்வையில் இருந்து சிவபெருமான் கூட தப்பியதில்லை. ஈசனை சனீஸ்வரன் பிடிப்பதற்கான நேரம் நெருங்கியது. அதுபற்றி அம்பாளிடம், ‘தாயே! நான் ஈசனை நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுது வரை பிடிக்கப்போகிறேன்’ என்றார்.

அதைக் கேட்ட பார்வதிதேவி, சனி பகவான் வரும் நேரத்தில் கயிலாயத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும்படி கூறினார்.

குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானைப் பிடிக்க வந்த சனீஸ்வரன், ஈசன் அரச மரத்தின் பின்னால் நிற்பதை அறிந்துகொண்டார். அரச மரத்தைப் பார்த்தபடியே நின்றார். சரியாக ஏழேகால் நாழிகை கழிந்ததும், அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து, ‘என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்றார்.

அதற்கு சனி பகவான், இடுப்பில் இடக்கையை வைத்து சற்று ஒய்யாரமாக நின்றபடி ‘தாயே! நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல் லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்’ என்றார். அவரது பேச்சில் எடுத்த காரியத்தை முடித்துவிட்டோம், ஈசனையே பிடித்துவிட்டோம் என்ற ஆணவம் கலந்திருந்தது.

அந்த ஆணவப் பேச்சைக் கேட்டதும், அரச மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்ட ஈசன், மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான், ‘சுவாமி! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகிவிடுவார்கள். இருப்பினும் ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இத்தலத்தில் உள்ள ஆணவம் நீங்கிய சனி பகவானை வணங்கினால், சனி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, அம்பிகை நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தார். இதனால் அம்பாள் ‘வேதாந்த நாயகி’ என்று பெயர் பெற்றார்.

அப்போது அங்கு வந்த நாரதர், ‘ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒரு சேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்’ என்றார்.

உடனே ஈஸ்வரன், பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

‘பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்’ என்று நாரதர் சொன்னார்.

பன்னிரு ஜோதிர் லிங்கங்களில், ஒரு லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் இத்தலத்திலேயே தங்கிவிட்டார். அந்தச் சன்னிதி மகாமண்டபத்திற்கு தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்தியர், ஸ்ரீவிஸ்வநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால், அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.

இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ‘மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்’ என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ‘பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்’ என்று சாபமிட்டார்.

யாழி முகத்துக்கு மாறிய மகரிஷி, ‘மாமுனிவரே! இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது’ என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ‘மகரந்த ரிஷியே! நான் கொடுத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தை அடைவீர்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் வந்து விஸ்வநாத சுவாமியை பூஜித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை மலரால், ஐம்பது ஆண்டுகள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலை அறுந்து, லிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்தில் இருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, இறைவன் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.

22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து, இத்தல இறைவனுக்கு கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் மட்டும் அணிவிக்கிறார்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள்கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சன்னிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

குறைகள் தீர்க்கும் நந்தி :

இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தில் இருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலது காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். அப்போது பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி, இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலது காது மடங்கி உள்நோக்கிச் சென்றது.

இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ‘நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலது காதின் பக்கத்தில் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்’ என்றாராம்.

இத்தல நந்தியின் வலது காதுக்கான பகுதியில், பக்தர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தால் அது விரைவில் நிவர்த்தி ஆவதாக சொல்கிறார்கள். 

அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது தேப்பெருமாநல்லூர் திருத்தலம்.

Thursday, 26 July 2018

மஹா வஜ்ரேஸ்வரி உகந்த மந்திரம்

மஹா வஜ்ரேஸ்வரி உகந்த மந்திரம்

லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும், அதற்கருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளதென்றும், அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாச மகரிஷி தன் லலிதாஸ் தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். 

நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் பழம் தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சஷ்டி, கிருஷ்ண பட்ச தசமி.

பலன்: அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை.

காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம்

காசி அன்னபூரணி அட்சயப் பாத்திரம்

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது.

எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அருளை வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள். 

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்.

அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத் திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி.

ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப்பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள்.

கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். 

காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.

Wednesday, 25 July 2018

நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்

நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்

சிலரது ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களின் அமைப்பு சரி இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக எத்தனை வரன் பார்த்தாலும் திருமண யோகம் என்பதே வராது. கடுமையான நாகதோஷம் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படும். முண்டகக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு உங்கள் கைப்பட நீங்களே முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.

முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு சென்றால் கருவறை பின் பகுதியில் ஒரு பெரிய அலமரம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த ஆல மரத்துக்குள் நாக புற்று உள்ளது. அருகில் நாகர் சன்னதி உள்ளது.

அந்த சன்னதியில் மஞ்சள், குங்குமம், பன்னீர் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வசதி இருப்பவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும்.

கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும்

கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்களும் - கிடைக்கும் பலன்களும்

ஆலயங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பூ, பழம், அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்வதுண்டு. அர்ச்சனை முடிந்து மூலவருக்கு தீபாரதனை காட்டப்படும் போது மனம் உருக வேண்டிக் கொள்வார்கள். அதோடு அவர்களது வழிபாடு முடிந்து விடுகிறது. 

சில பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு நைவேத்தியம் செய்வார்கள். அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். எல்லாரும், எல்லா வகை வழிபாடுகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. 90 சதவீத பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு ஆலயத்தை எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க 6 கால பூஜைகளிலும் எத்தனையோ விதமான வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள், கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

சாமி சிலைகளுக்கு ஏன் இப்படி விதம் - விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன தத்துவம் - என்ன அறிவியல் உண்மை அடங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.

இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் சிவனை அபிஷேகப் பிரியர் என்றும், விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறியுள்ளனர். பொதுவாகவே கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். 

எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்களையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

எள் எண்ணெய் - 1 லிட்டர், பஞ்ச கவ்வியம் - 5 லிட்டர், மாவு வகைகள் ஒவ்வொன்றும் 1 கிலோ, மஞ்சள் பொடி 200 கிராம், பசும்பால் 7 லிட்டர், தயிர் 15 லிட்டர், தேன் 500 கிராம், நெய் ஒரு கிலோ, நெல்லி முள்ளிப்பொடி - 300 கிராம், கரும்புச்சாறு - 4 லிட்டர், பன்னீர் - 500 கிராம், அன்னம் - 5 கிலோ, வாசனை திரவிய தீர்த்தம் - 20 லிட்டர் என்ற முறையில் தான் அபிஷேகத்துக்குரிய திரவியங்களின் அளவு இருக்க வேண்டும்.

பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 20 வாழைப்பழம், ஒரு பெரிய பலாபழம், 15 மாம்பழம் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டும். அதுபோல பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி கோமூத்திரம், பால், தயிர், நெய்) தயாரிப்பது பற்றி கோவில் குருக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

அபிஷேகத்துக்குரிய திரவியங்களை இத்தகைய அளவுகளில் தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த அபிஷேகப் பொருட்களை சுவாமி முன்பு, எப்படி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட விதிமுறை உள்ளது. இது பற்றி சிந்தியாகமத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும். நடுவில் அபிஷேகத்துக்குரிய பால் வைக்க வேண்டும். வடக்கில் தேன், தெற்கில் நெய், மேற்கில் நாட்டுச் சர்க்கரை, கிழக்கில் தயிர் வைக்க வேண்டும்.

வாயு மூலையில் மாம்பழம், நிருதி மூலையில் பலாப்பழம், அக்னி மூலையில் வாழைப்பழம், ஈசான மூலையில் வாசனை திரவிய தீர்த்தம் வைத்தல் வேண்டும்.

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆகமப்படி திரவியங்களை வரிசைப்படி எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும். 

முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் மற்ற ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகங்களையும் பார்க்க கூடாது என்று நம் முன்னோர்கள் தடை விதித்ததற்கு காரணம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மூலவர் சிலைகளில் இருந்து வெளிப்படும ஆற்றல் பக்தர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பெயரளவுக்கு சில அபிஷேகங்களை மட்டுமே பக்தர்கள் பார்க்க செய்வார்கள். 

நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.

அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

சுகாசனத்தில் உறையூர் வெக்காளி அம்மன்

சுகாசனத்தில் உறையூர் வெக்காளி அம்மன்

திருச்சி உறையூரில் உலக மக்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. “வெக்காளி” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? வெம்+காளி=வெக்காளி

வெம்= வெம்மை, விருப்பம் மற்றும் வெயில் முதலிய மூன்று பொருள்களும் தருவதாகும். மங்கலப் பொருள் முழுவதும் தருபவள் வெக்காளியே ஆவாள்.

கடவுளுக்கு திருவாசி என்பதைப் பிரபை என்று கூறுவர். ஒளிச்சுடரே பிரபையாகும். காலத்தை காட்டும் சூரிய சந்திரரும் இதில் அடங்குவர். எனவே, திருவாசி என்பது மாறிமாறி வரும் கால சக்தியைக் குறிப்பதாகும். தீச்சுடராகவே இருந்து என்றும் புதுமைகளை உண்டாக்குகிறாள் என்பது வெக்காளியின் திருவாசியாகும்.

திருமுகம் அசுரர்களைப் பகைவரைத் தீமைகளை நோய் நொடிகளை அச்சுறுத்தி அகற்றுவதற்காக விழிகள் பிதுங்க விழித்தும் கோரப்பற்கள் தெரிய நிற்பதும் ஆகும்.

அன்பர்க்கு அவர்களின் நெஞ்சில் இவள் மிக அழகிய வடிவுடனும் புன்னகையுடனும் மலர்ந்த விழியுடனும் காட்சியளிக்கிறாள். கைகளில் வலது மேற்கையில் உடுக்கை (டமருகம்) உள்ளது. இது ஒலியின் மூல உலகத்தைப் படைத்ததைக் குறிக்கும். இடது மேற்கையில் பாசம் உயிர்களைத் தன்வயப்படுத்தவும் அவர்களுடன் உறவு கொள்ளவும் அமைந்ததாகும்.

வலது கீழ்க்கை திரிசூலம் பகைவரை அழிக்கும் கருவியாகவும் இவளே மும்மூர்த்தியையும் நியமிக்கிறவள் என்பதை குறிக்கும். திரிபுரமான அறிவையும் குறிக்கும். இடது கீழ்க்கையில் கபாலம் உள்ளது. யுகயுகாந்திரங்களாக வாழ்ந்து மறைந்த பிரம்மன் முதலியவர்களின் கபாலயங்களையும் எரியக் கண்டவள் இவள். ஆகவே இவள் அழிய மாட்டாள் என்பதைக் குறிக்கும். மங்கலமாகக் குங்குமமும் ஆயுள் வளர்ச்சியையும் அளிப்பது இக்கடவுளே என்பதைக் குறிக்கும். வலது கால் மடித்து இடது காலை ஊன்றியது சுகாசனம் ஆகும். இவள் இவ்வாறு இருப்பதால் யாவர்க்கும் சுகமே பிரசாதம் என்பதாகும்.

வெக்காளி அம்மன் போர்க்கோலம் துறந்து சுகாசனத்தில் இருந்தாலும் அசுரத்தனம் வளராமல் இவள் பாதத்திலேயே உள்ளது என்பதை அசுரன் இடது காலில் இருப்பதைக் காட்டுகிறது.

நான்கு கைகளும் நான்கு யுகங்களும் நான்கு திசைகளையும் நான்கு வேதங்களையும் குறிப்பதாகும். உடலில் பாம்பு இருப்பது பிரபஞ்சகுண்டலினி சக்தியைக் குறிக்கும். எல்லா உயிர்களிலும் உலகப் படைப்பிலும் இயக்கமாக இருப்பது குண்டலினி சக்தியாகும். அதைத்தான் கண்காணிப்பில் வைத்திருப்பதே பாம்புகள் அணிவதாகும்.

காளி என்ற சொல்லிற்கு கரிய நிறம் உடையவள் என்பது பொருளானாலும், அது இருளில் வலிமை கொண்ட அசுரனை அழிக்கும் போதுள்ள நிறமாகும். மங்கலம் தரும் அமைதி நேரத்தில் அவளே சிவந்த நிறம் உடையவள் ஆவாள். உடுக்கை, திரிசூலம், பாசம், கபாலம், இவை கொண்டு இவள் பிரம்மமாகிய பரம்பொருள் வடிவம் என்பதை உணரலாம். எனவே வெக்காளி அம்மனை வழிபட்டால் நீங்கள் கேட்டதை எல்லாம் தந்து அருள்வாள்.

Tuesday, 24 July 2018

இந்த வார விசேஷங்கள் - 24-7-2018 முதல் 30-7-2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 24-7-2018 முதல் 30-7-2018 வரை

24-ந் தேதி (செவ்வாய்):

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் அம்பாள் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலிங்க நர்த்தனம், இரவு மோகன அவதாரக் காட்சி.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் ஆலயத்தில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.

மதுரை மீனாட்சியம்மன் கனக தண்டியலில் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

சமநோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்):

பிரதோஷம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலில் ரத உற்சவம்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம், புஷ்பக விமானத்தில் சுவாமி பவனி வருதல்.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்):

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் பவித்ரோற்சவம்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுவாமிக்கு வெண்ணெய் தாழி சேவை.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்ச சேவை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி):

பவுர்ணமி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடிப்தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா.

மதுரை கள்ளழகர் ஆலயத்தில் தேரோட்டம், இரவு 18-ம் படி கருப்பண்ண சுவாமி சந்தனம் சாத்துப்படி.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் ஆலயத்தில் 98-வது ஆடிப் பெருந்திருவிழா.

மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (சனி):

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் சப்தாவரணம்.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு):

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கோவில் வசந்த உற்சவம், முத்துப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு.

இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.

மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்):

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் திருமூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள். 

தேவதைகள் நீராடிய நீர்வீழ்ச்சி

தேவதைகள் நீராடிய நீர்வீழ்ச்சி


உத்தரகன்னடா மாவட்டம் முருடேஸ்வரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி. மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது தடாகத்தில் தவழ்ந்து செல்லும் காட்சியை கண் இமைக்காமல் ரசித்து கொண்டே இருக்கலாம். 

இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்குள்ள மலைகளில் பெரிய, சிறிய பாண்டவர் குகைகள் காணப்படுகிறது. இந்த குகைகளில் தான் பாண்டவர்கள் பதுங்கி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள உக்கிர நரசிம்ம கோவில், உயபா கணபதி கோவில், பசவேஸ்வர துர்கா மற்றும் ராமசந்திரபுரா மடம் போன்ற கோவில்களையும், காசர்கோடு கடற்கரையையும் கண்டு மகிழலாம். இந்த இடங்களை கண்டு ரசிக்க செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சிறந்தது.

Monday, 23 July 2018

பெண்களும்... ஆடி மாதமும்...

பெண்களும்... ஆடி மாதமும்...

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும். 

ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்று சொல்வார்கள். சிலர் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்று சொல்வார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் ஆடி மாதத்து அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற பின்னிப் பிணைந்துள்ளது.

அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள்.உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

“ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமிபட்டர்.

லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் நாளை மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள். அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.

அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். பெரும்பாலான கோவில்களில் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்து படைத்து பிறகு அதை பக்தர்களுக்கு தானமாக விநியோகம் செய்வார்கள். இந்த சடங்குக்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது.

கேட்டதை எல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமத்கனி முனிவர் வளர்த்து வந்தார். அவரிடமிருந்து அதை அபகரிக்க கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் திட்டமிட்டனர். அவர்கள் ஜமத்கனி முனிவரிடம் சென்று காமதேனு பசுவை தங்களிடம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதனால் ஜமத்கனி முனிவரை கொன்று விட்டு காமதேனு பசுவை கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் கடத்தி சென்றனர். ஜமத்கனி முனிவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினார். அம்பிகையின் மறுஉருவமான ரேணுகாதேவி தீயின் நடுவில் குதித்ததை கண்ட வருணபகவான் மழை பொழிந்து ரேணுகாதேவியை காப்பாற்றினார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ரேணுகாதேவி உயிர் தப்பினார்.

உடலில் ஏற்பட்ட தீ கொப்புளங்களை மறைக்க உடல் முழுவதும் வேப்ப இலையை சுற்றிக் கொண்டார். இந்த நிலையில் ஒரு ஊருக்குள் சென்ற அவர் பசியை போக்க உணவு கேட்டார். அந்த கிராமத்து மக்கள் ரேணுகாதேவிக்கு பச்சரிசி, வெல்லம், காய்கறி, இளநீர் கொடுத்தனர். அதை வைத்து ரேணுகாதேவி கூழ் காய்ச்சி குடித்து பசி ஆறினார்.

இந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்தான் தற்போது அம்மன் ஆலயங்களில் கூழ்வார்த்தல் நடத்தப்படுகிறது. தற்போது இந்த கஞ்சியை யாரும் முறையாக வைப்பதில்லை. ஆடி காற்றில் தூசு பறக்கும் என்பதால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் கஞ்சி வைப்பார்கள்.

அம்பிகைக்கு முருங்கை கீரை, தண்டு கீரை ஆகியவையும் மிகவும் பிடிக்கும் என்பார்கள். எனவே ஆடி மாதத்து அம்மன் படையலில் இந்த 2 கீரைகளையும் தவறாமல் இடம் பெற செய்வார்கள். சில ஊர்களில் கூழ் தயார் செய்த பிறகு கருவாட்டு குழம்பையும் அதனுடன் வைத்து படைப்பார்கள். இவை அனைத்தையும் செய்வது பெண்கள்தான் என்பதால் ஆடி மாதத்து கூழ்வார்த்தல் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.

ஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள்

ஆடிப்பூரம் அன்று வளையல் பெறத் தவறாதீர்கள்

ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காகப் பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு ‘ஆடி வீதி’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளை காப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.

வேண்டும் வரம் தரும் குஞ்சு காளியம்மன் கோவில்

வேண்டும் வரம் தரும் குஞ்சு காளியம்மன் கோவில்

சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.

திருமணி முத்தாறு கரையில் சலவைத் தொழிலாளர்கள் சலவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சலவைத் தொழிலாளியின் மகள், கரையில் இருந்த குடையை எடுக்க முடியாமல் திணறினார். குடையை தூக்க முடியாததன் காரணத்தை எண்ணி அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் தான் அம்மன் வந்திருக்கிறேன். எனக்குக் குஞ்சன் காட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டு’ என்றது அந்தக் குரல். சலவைத் தொழிலாளியின் மகள் கொஞ்சம் திகைத்தாளும், அம்மனின் கூற்றை ஏற்று குஞ்சன்காடு வந்து சேர்ந்தாள்.

இதற்கிடையில் மகளைக் காணாது சலவைத் தொழிலாளி ஊர் மக்களுடன் தேடி அலைந்தார். அப்போது அடர்ந்த காட்டில் ஓரிடத்தில் கழுகுகள் கூட்டமாக வட்டமிட்டிருந்ததைக் கண்டனர். அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சலவைத் தொழிலாளியின் மகள், தன்னிலை மறந்து நின்றிருந்தாள். அவளை ஊர் மக்கள் சகஜ நிலைக்கு கொண்டு வந்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டனர்.

உடனே அவள் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் கூறினாள். அதே நேரத்தில் அங்கு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கு எழுந்தருளியுள்ளேன். இங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்’ என்றது அந்தக் குரல்.

அந்தப் பகுதியில் பெரியவரான ஒருவர் ‘இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய். நகர்புறத்தில் உனக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறேன்’ என்றார்.

ஆனால் அம்மனோ, ‘நான் இங்குதான் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள். மேலும் சலவைத் தொழிலாளியின் மகளது கணவரே தனக்கு பூஜை செய்யட்டும்’ என்றும் கூறினாள்.

அம்மனின் ஆசைப்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அம்மன் ‘குஞ்சுக் காளியம்மன்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

சேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயக் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றார். சிரசில் அக்னி சூலை ஏந்தி அருள்பாலிக்கிறார். குஞ்சுக் காளியம்மன், குஞ்சு மாரியம்மன் இருவரும் ஒரே சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பது இவ்வாலய சிறப்பு அம்சமாகும்.

ஒரு தோட்டக்காரர் கனவில் வந்து, தோட்டத்தில் உள்ள தன்னை குஞ்சுக் காளியம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதன் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.

இவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு- கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.

விநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திருமணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.

இத்தலத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் 108 கிலோ மஞ்சள்பொடி உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன.

இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோவில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.