Wednesday, 4 July 2018

திருவிடந்தை மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகள்

திருவிடந்தை மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகள்

மூலவர் பெருமாள் - ஆதிவராகம் பெருமாள் (6.5 அடி உயரம்)
மூலவர் தாயார் - அகிலவல்லி நாச்சியார் (பூமிதேவி அம்சம்)
கோலம் - நின்றகோலம், கிழக்கே திருமுகமண்டலம், தேவியை இடக்கரத்தில் கொண்டு ஒரு திருவடியை பூமியிலும், மறு திருவடியை ஆதிசேஷன் தம்பதியர் முடியிலும் வைத்துக் கொண்டு தேவியை மூலமாக உலகோர்க்கு சரம சுலோகத்தை உபதேசிக்கின்ற திருக்கோலம்.
உற்சவர்- நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
தனிக்கோவில் தாயார் - கோமளவல்லித் தாயார்
விமானம் - கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம், ரங்கநாத தீர்த்தம்

தல புஷ்பம் - கஸ்தூரி
தல விருட்சம் - புன்னை மரம்
பிரத்தியட்சம் - பலி என்கிற அசுர மன்னன், 
 மார்க்கண்டேயர், காலவ மகரிஷி
மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார் (10 பாடல்கள்)
ஆகமம் - வைகானஸம்
விசேஷ பிரசாதம் - தயிர்சாதம்

தீர்த்தங்கள் சிறப்பு

திருவிடந்தை தலத்தில் தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர தீர்த்தத் தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு. 

இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமவளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

கோவில்களில் திருவிழாக்களும், வழிபாடுகளும் வழி வழியாக நடைபெற்று வருகின்றன. தற்காலம் போல பொழுது போக்கு வசதிகள் இல்லாத நிலையில் கோவில்களில் மாதந்தோறும் ஒவ்வொரு திருநட்சத்திர நாளன்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டிற்கு நித்திய பூஜைகள் என்று பெயர். திருவிழாக்கள் போன்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடு நைமீதிகம் எனப்படும். இக்கோவிலில் வைகானச ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.

நித்திய பூஜைகள்

அலங்காரப் பிரியனான மகாவிஷ்ணுவிற்கு பொதுவாக நித்திய பூஜைகள் மிகவும் விரிவாக நடத்தப்படுகின்றன. திருவிடந்தை இறைவனும் அதற்கு விதிவிலக்கல்ல. திருவிடந்தை திருத்தலத்தில் திருமஞ்சன அபிஷேகம் காலை 7 மணி அளவில் நடைபெறும். பின்னர் பூஜையும், திருஆராதனையும் செய்யப்படும். உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெற்ற பின்னர் கோவில் மூடப்படும். சாயரட்சை அல்லது மாலை பூஜை 6 மணியளவில் நடைபெறும். அர்த்தஜாமம் பூஜை இரவு 8 மணியளவில் நடத்தப்பட்டு அன்ன நைவேதியம் செய்யப்படும். இவ்வாறு நாள்தோறும் நான்கு கால பூஜை இங்கு நடைபெறுகின்றது.

சிறப்பு வழிபாடுகள்

திருவிடந்தையில் மாதந்தோறும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் தொடங்கி இறுதியான பங்குனி மாதம் முடிய 12 மாதமும் விழாக்கள் நடைபெறுகின்றன. 

சித்திரை மாதம் 

சித்திரை மாதம் நடத்தப்படும் பெரும் விழா பிரம்மோச்சவம் எனப்படும். இது சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படும். இத்திருநாள் அன்று சுற்றியுள்ள இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் தொடக்கமாக முதல்நாள் இரவு மண்ணெடுத்து பாலிகை தெளித்து விழா தொடங்கும். திருவிழாவின் முதல் நாள் அன்று இதனை எடுத்து வந்து கொடி மரத்தின் அருகில் வைத்து கொடியேற்றம் செய்யப்படும். கொடியேற்றம் செய்யப்பட்ட உடன் பத்து நாட்களுக்கு காலை, மாலை இருநேரமும் இறைவன் திருவீதி உலாவும் நடைபெறும். 

No comments:

Post a Comment