Thursday, 19 July 2018

பக்தரின் பஞ்சம் போக்கிய படிக்காசுநாதர் கோவில்

பக்தரின் பஞ்சம் போக்கிய படிக்காசுநாதர் கோவில்

தென்னை தாலாட்டித் தென்றல் தவழும் சோலைகளுக்கிடையே உள்ள ராஜகோபுரம் ‘வாருங்கள்’ என்று நம்மை வரவேற்கிறது.

சோழநாட்டிற்குச் சொந்தமான காவிரியின் வளத்தால் செழிக்கும் பச்சை வயல்களுக்கு இடையே கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம்தான் அரிசில் கரைப்புத்தூர். அரிசலாற்றின் தென்கரையில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. நாச்சியார்கோவில் என்னும் சைவ- வைணவத் தலத்தில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகாபுத்தூர் என்னும் அரிசில் கரைப்புத்தூர். பெயருக்கேற்ப நகர நாகரிகம் இன்னும் தொற்றிக் கொள்ளாத அழகிய சிற்றூர்.

மேற்கு நோக்கி நிற்கும் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், பலிபீடம், கொடி மரம், நந்தி தேவர் அவரின் உத்தரவைப் பெற்று சென்றால், மிகப் பெரிய மண்டபத்தில் மூலவர் முக்கண்ணன் சுயம்பு லிங்கமாகத் தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து எழுந்தருளியுள்ளார். அதிலும் தாமரை போன்ற ஆவுடையாரில் லிங்கம் தோன்றுவது கண்ணுக்கு விருந்தாகும்.

இத்தல இறைவனான சொர்ணபுரீஸ்வரர், பொன்னை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார். இந்தப் பெருமானுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அதென்ன படிக்காசு நாதர்...

திருவீழிமிழலை என்ற சிவத்தலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு வழங்கியதும் ‘வாசி தீரவே காசு நல்குவீர்’ என்று ஆளுடைப்பிள்ளை பதிகம் பாடியதும் நாமறிந்த கதை தான்.

வைத்தீஸ்வரன் கோவிலிலும் ஒரு ஏழைப் புலவனுக்கு படிக்காசு தந்ததாக வரலாறு உண்டு. அதனால் அவர் படிக்காசுத் தம்பிரான் என்றே அழைக்கப்பட்டார்.

ஆனால், அரிசில் கரைப்புத்தூரில், ஆதி சைவர் குலத்தில் எழுந்த அடியவர் ஒருவர், தினமும் ஆகம முறைப்படி சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்தார்.

அக்காலத்தில் பஞ்சம் வந்து மக்கள் பசி நோயால் மிகவும் துயரமுற்றனர். அப்படி இருக்க, இந்த ஏழை பக்தர் மட்டும் செல்வத்தில் செழிப்பாரா என்ன?

அடியாரும் பசியும், பட்டினியும் ஆட்கொள்ள மிகவும் மெலிவுற்றார். இருந்தும் ஈசன் பணியை இடையறாது செய்து வந்தார்.

நீர் கொண்டுவந்து சிவனை அபிஷேகம் செய்து மணமிக்க மலர்களால் அர்ச்சித்து, நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினார். தான் உணவின்றி உடல் தளர்ந்த போதும், உள்ளம் தளராமல் சிவத் தொண்டு புரிந்து வந்தார்.

பசியால் அவரால் நடக்கவே முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து சிவலிங்கம் மீது முழுக்காட்டும் போது, கைகளில் வலு இல்லாமையால் குடத்தை சிவ சிரசின் மீது போட்டு விட்டு மயக்கமடைந்து விட்டார்.

பிறகு உணர்வு வந்து மெல்லக் கண் விழித்தபோது சிவன் தலையில் குடத்தைப் போட்டு விட்டதை எண்ணிக் கலங்கினார்.

கருணை கடலான பரமன், ‘அன்பனே! விரைவில் மழை பொழிந்து நாடு செழிப்புறும், அதுவரை உமது பஞ்சம் தீர, நாள் தோறும் இங்கே ஒரு காசு வைப்போம். அதைக் கொண்டு ஜீவனம் செய்து கொள்’ என்றார்.

சொன்னது போலவே இறைவனது பீடத்தின் கீழ் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு, அதனால் தானும் பசிதீர்த்து, மற்றவர்களுக்கும் உதவி செய்து வந்தார். சிவதொண்டையும் விடாமல் செய்து வந்தார்.

பல ஆண்டுகள் வாழ்ந்து பூஜைகள் செய்து அங்கேயே முக்தி அடைந்தார்.

அந்த அடியவர் வேறு யாருமல்ல.. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ‘புகழ்த்துணை நாயனார்.’

இவரைப்பற்றி பெரியபுராணம் கீழ்க்கண்ட பாடலால் விளக்குகிறது.

‘அகத் தடிமைசெய்யும் அந்தணன்தான்
அரிசில்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தணர் வெய்திக் குடந்தையும் நும்
முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற் படியும்
வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து தந்தீர்
பொழியார் திருப்புத்தூர்ப் புனிதரே’ என்கிறது அந்தப் பாடல்.

சிவலிங்கத்தின் உச்சியில் குடம் விழுந்த தழும்பு காணப்படுகிறது.

இத்திருக் கோவிலின் மண்டபத்தில் இறைவன் சன்னிதி அருகே, புகழ்த்துணை நாயனார் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவில் இருந்து பக்தியைப் பறைசாற்றுகின்றார்.

இதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் இறைவி ‘அழகிய நாயகி’ என்ற நாமம் தாங்கி அருள்கிறார். இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, பைரவர், நால்வர், நவக்கிரகங்கள் சிலைகளாக அருள்பாலிக்கின்றனர்.

வில்வ மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இந்த புனிதப்பதிக்கு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் எழுந்தருளி தரிசித்து ஒவ்வொருவரும் ஒரு பதிகம் பாடியுள்ளதால் மூவரின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகப் பெருமை பெருகிறது.

சங்கு சக்கர முருகன்

பொதுவாக சில திருக்கோவில்களில் முருகனை வேல் தாங்கிய வராகவும், தண்டாயுதம் தரிந்தவராகவும், சில கோவில்களில் வில் ஏந்தியவராகவும் தரிசித்திருக்கிறோம். ஆனால் இத்திருக் கோவிலின் வெளிச்சுற்றில் வடமேற்கில் தனிக்கோவிலில் ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தில் ஆறு முகங்களுடன், முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். 

அவர் கையில் மாமன் திருமாலைப் போல சங்கு சக்கரம் ஏந்தி தோன்றுவது எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். அங்கே வள்ளி- தெய்வானை இருபுறமும் இருக் கின்றனர். திருமணம் வரம் கேட்பவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் சங்கு சக்கர ஆறுமுகப்பெருமானை வழிபட்டால் காரியம் கைகூடும் என்பது அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment