Monday 2 July 2018

கண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியன் கோவில் - கேரளா

கண் நோய் தீர்க்கும் ஆதித்யபுரம் சூரியன் கோவில் - கேரளா

கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களை தீர்க்கும் ஆலயமாக, கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஆதித்யபுரம் சூரியன் கோவில் திகழ்கிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘காப்பிக்காடு மரங்காட்டு மனா’ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சூரியக்கடவுளை நினைத்துத் தியானம் மற்றும் பாவசங்கீர்த்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பலனாக ஒருநாள், அவருக்குக் காட்சியளித்த சூரியக்கடவுள், நல்லாசி களையும், நன்மைப் பேற்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், அங்கு சூரிய தேவன் சிலையை நிறுவிச் சூரியக்கடவுளுக்காகத் தனிக்கோவில் ஒன்றை அமைத்தார்.

பின்னர் அவர், அக்கோவிலுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக் கியதுடன், அவருக்குப் பின்னால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மரபு வழியினர், மேற்காணும் வழிமுறை களைப் பின்பற்றிக் கோவிலை நிர்வகித்துச் சிறப்பாகப் பராமரித்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இக்கோவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா குடும்பத்தினரது மரபு வழியினரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கோவில் வரலாறு சொல்கிறது.

கோவில் அமைப்பு

கேரளாவில் சூரியக் கடவுளுக்கென்று அமைந்த ஒரே கோவில் இதுவாகும். இக்கோவிலில் சூரிய தேவன், நான்கு கரங்களுடன் பத்மாசன நிலையில் மேற்கு நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு உள்ளன. கீழேயுள்ள இரண்டு கரங்களும் தபோ முத்திரையில் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் துர்க்கை, சாஸ்தா, யட்சி ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கோவிலில் சூரியதேவனுக்கு உதயபூஜை, எண்ணெய் அபிஷேகம் போன்றவை செய்யப்படுகின்றன. அதே போல் ஆலய வளாகத்தில் துர்க்காதேவி பூஜை, நவக்கிரக பூஜை போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. கருவறையில் இருக்கு மூலவரான சூரியதேவன் சிலைக்கு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், அடுத்து நீர் கொண்டும் அபிஷேகம் செய்கிறார்கள். அப்படி நீர் கொண்டு அபிஷேகத்த பின்னர், அந்த சிலையில் எண்ணெய் படிந்ததற்கான சுவடே இருக்காது என்பது இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

இத்தல இறைவனான சூரியதேவனுக்கு அடை நைவேத்தியம், ரக்தசந்தன சமர்ப்பணம் செய்து வழிபடுபவர்களுக்குக் கண் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும் என்கின்றனர். இதே போல் நவக்கிரக பாதிப்பு இருப்பவர்கள், இங்கு நவக்கிரக பூஜை செய்து சூரியதேவனையும், துர்க்கையையும் வழிபட்டு நற்பலன்களைப் பெறமுடியும்.

விழா நாட்கள்

இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி மேடம் (சித்திரை) மாதம் மற்றும் விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்கள் சிறப்பு விழா நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாவில் காப்பிக்காடு மரங்காட்டு மனா மரபு வழியினர் ஒருவர், ரக்தசந்தனக் காவடி எடுத்து வந்து சூரியதேவனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது. இவ்விழா நாட்களில், இக்கோவிலுக்கு வந்து சூரியதேவனை வழிபட்டுச் செல்பவர்களுக்கு ஜோதிடத்தின் அடிப்படையில் பல்வேறு சிறப்புகள் வந்தடையும் என்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் வட்டத்தில் உள்ளது கடுந்துருத்தி என்ற ஊர். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியபகவான் ஆலயம் இருக்கிறது. இக்கோவில் அமைந்திருக்கும் பகுதியை ஆதித்யபுரம் என்று சொல்கின்றனர். இந்த ஆலயத்திற்குச் செல்ல எட்டுமானூர் மற்றும் வைக்கம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment