கங்கையில் நீராடினால் பாவம் தீருமா என்ற சந்தேகம் பார்வதிக்கு எழுந்தது. இல்லை என சிவன் மறுக்க, பார்வதி குழம்பினாள். இதை உணர்த்த ரிஷி வடிவில் சிவன் பூலோகம் வந்தார். ரிஷிபத்தினியாக பார்வதியும் தொடர்ந்தாள்.
கங்கை நதிக்கரையில் சிவன், இறந்தவர் போல கீழே கிடக்க, இறுதிச் சடங்கு செய்ய யாராவது உதவ வருமாறு ரிஷிபத்தினி வேண்டினாள். இரக்கப்பட்ட சிலர் முன் வர, ''என் கணவர் ரிஷியானதால், கொள்ளி வைப்பவர் பாவம் செய்யாதவராக இருப்பது அவசியம்'' என்றாள் ரிஷிபத்தினி.
''இல்லாவிட்டால் என்னாகும்?'' என அவர்கள் கேட்க, '' பாவம் செய்திருந்தால் தலை சுக்குநூறாக வெடிக்கும்'' என்றாள். இளைஞன் ஒருவன் துணிவுடன் சம்மதிக்க, மற்றவர் விலகினர்.
''கங்கை தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளருளால் என் பாவம் தீரும்'' என்று சொல்லி ஆற்றில் குதித்தான். மூன்று முறை மூழ்கி அவன் எழுந்தபோது ரிஷியும், ரிஷிபத்தினியும் சிவபார்வதியாக காட்சியளித்தனர். நம்பிக்கையுடன் நீராடுவோருக்கு மட்டுமே பாவம் தீரும் என்பதை அனைவரும் அறிந்தனர்.
No comments:
Post a Comment