திருமணம் தள்ளிக்கொண்டே சென்றால் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி இளம்பெண்களும், வாலிபர்களும் மன வேதனைக்கும் குமுறல்களுக்கும் உள்ளாவார்கள். திருமணம் தாமதம் ஆவதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் இருக்கலாம். ஜோதிட ரீதியாக சில காரணங்கள் இருக்கலாம்.
எந்த காரணமாக இருந்தாலும் சரி அதற்கு தீர்வு காண்பதை பொறுத்து தான் திருமணம் யோகம் உடனே கைக்கூடி வரும். அந்த யோகத்தை தரும் அற்புதமான தலமாக திருவிடந்தை நித்திய கல்யாணப்பெருமாள் ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மூலவரின் பெயர் நித்திய கல்யாணப்பெருமாள் என்பதால் அதற்கேற்ப அவரை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களுக்கு உடனே திருமணம் கைக்கூடுகிறது. இதற்கு பரிகார பூஜை கைக்கொடுக்கிறது. இந்த பரிகார பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் இந்த ஆலயத்திற்கு வரவேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் மெயின் ரோட்டு ஓரத்திலேயே இந்த ஆலயத்திற்கான அலங்கார வளைவு உள்ளது. அந்த ஆர்ச் அருகில் கல்யாண தீர்த்தம் இருக்கிறது. அந்த தீர்த்தத்தில் திருமண தடையால் வருந்துபவர்கள் நீராட வேண்டும். புனித நீராட இயலாதவர்கள் அந்த தீர்த்தத்தை எடுத்து தலையிலாவது தெளித்துகொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய், பழம், பூ, கற்கண்டு, வெற்றிலைபாக்கு, ஊதுப்பத்தி ஆகியவை கொண்ட அர்ச்சனை தட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். இதையடுத்து இரண்டு மாலைகள் வாங்க வேண்டும். ரோஜா மாலையாக இருந்தால் நல்லது. இந்த மாலை வாங்கும்போது துலுக்கசாமந்தி மற்றும் தழைகள் இல்லாத மாலையாக பார்த்து வாங்கவேண்டும். இவற்றை எடுத்துக்கொண்டு ஆலயத்திற்குள் சென்று திருமண பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
அப்போது கோத்திரம், குலம், பெயர், நட்சத்திரம், ராசி போன்றவற்றை அர்ச்சகரிடம் தெளிவாக தெரிவிக்கவேண்டும். அர்ச்சகர் அந்த மாலைகளை தாயாருக்கு அணிவித்து பரிகாரம் செய்யப்படவேண்டியவரின் பெயரில் அர்ச்சனை செய்வார். பிறகு இரண்டு மாலைகளில் ஒரு மாலையை மட்டும் எடுத்து வந்து தருவார்.
அதை திருமணத்துக்கு உரியவர் தானே தனது கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்தை 9 முறை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது விரைவில் தனக்கு நல்ல இடத்தில் திருமணம் கைக்கூட வேண்டும் நித்திய கல்யாணப்பெருமாளிடம் மனமுருக வேண்டிகொள்ள வேண்டும்.
9 தடவை பிரகாரத்தை சுற்றி முடித்ததும், கொடிமரம் அருகில் வந்து சாஷ்டாங்மாக விழுந்து வழிபட வேண்டும். பிறகு அந்த மாலையை தானே கழற்றி எடுக்கவேண்டும். அதை ஒரு பைக்குள் பத்திரமாக வைத்து வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் அந்த மாலையை பூஜை அறை விசாலமாக இருந்தால் அங்கே வைத்துவிடலாம். அல்லது சுற்றில் அணியில் அடித்து அதில் தொங்கவிட்டுவிடலாம்.
தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமிக்கும்பிடும் போது குலதெய்வத்தை வணங்கிவிட்டு நித்தியகல்யாணப்பெருமாளையும் மனத்திற்குள் நினைத்து வழிபட வேண்டும். அந்த பெருமாளின் அருளால் நிச்சயம் விரைவில் திருமணம் கைக்கூடிவிடும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக திருமணம் நடைபெறும். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் இது நடந்து உள்ளது.
அந்த நம்பிக்கையில் தான் இன்றும் தினம்தினம் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பரிகாரத்தை செய்ய இந்த ஆலயத்திற்கு படையெடுத்து வந்தபடி உள்ளனர். மற்றொருபுறம் இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ததால் திருமணம் நடைபெற்ற தம்பதியர்களும் நன்றி செலுத்துவதற்காக வந்திருந்து வழிபடுவதை காணமுடிகிறது.
திருமணம் நடைபெற்ற பிறகு மீண்டும் இத்தலத்திற்கு வரவேண்டும். அப்போது கழுத்தில் அணிந்து 9 தடவை சுற்றிய மாலையையும் வீட்டில் இருந்து மறக்காமல் எடுத்து வரவேண்டும். அர்ச்சனை தட்டுடன் இரண்டு மாலைகளை வாங்கி செல்ல வேண்டும். அர்ச்சகர் அந்த மாலைகளை பெருமாள் காலடியில் வைத்து பூஜை செய்து தருவார்.
அதில் ஒரு மாலையை மணமகனும், மற்றொரு மாலையை மணமகளும் அணிந்து கொண்டு ஆலயத்தை ஒரு தடவை சுற்றி வந்து வழிபாடு செய்ய வேண்டும். காய்ந்துபோன பழைய மாலையை ஆலயத்தின் பின்புறம் உள்ள தலவிருட்சமான புன்னை மரத்தில் கட்டிவிட வேண்டும். அல்லது மரத்தின் கீழ் வைத்தாலே போதுமானது.
இத்துடன் பரிகாரப்பூஜை நிறைவு பெறும். மனம் முழுவதும் நித்திய கல்யாணப்பெருமாளுக்கு நன்றி கூறி ஆலயத்தில் இருந்து விடைபெற வேண்டும்.
No comments:
Post a Comment