Sunday 1 July 2018

பசுக்கள் நம் தெய்வம்!


பசு வதை கூடாது என்கிறார்கள். பசுவை தெய்வமாக போற்ற வேண்டியதன் அவசியத்தை ஏன் என புரிந்து கொள்ளுங்கள். பிருகுமுனிவரின் மகன் சியவனர். பெரும் தவசீலர். 12 ஆண்டுகள் ஒரு பெரிய குளத்துக்குள் சமாதி நிலையில் இருந்தார். நீருக்குள் வாசம் செய்யும் ஜீவராசிகள் அனைத்தும் அவரிடம் நட்பு கொண்டு அவரை தெய்வமாகப் போற்றின.

ஒரு நாள் சில மீனவர்கள், சியவனர் தியான நிலையில் இருந்த குளத்தில் மீன் பிடிக்க வலை வீசினர். அந்த வலையில் சியவனர் அகப்பட்டுக் கொண்டார். வலையில் ஏதோ பெரிய மீன் சிக்கி விட்டதாக எண்ணிய மீனவர்கள் வலையை பெரும் சிரமத்துடன் மேலே இழுத்தனர். சியவனர் நீருக்குள்ளேயே 
இருந்ததால், அவர் உடல் முழுவதும் பாசிபடர்ந்து பார்க்கவே அச்சம் தரும் நிலையில் இருந்தார்.

அவரைப் பார்த்ததும், மீனவர்கள் நடுங்கினர். மன்னிப்பு கோரினர். மீன்கள் அனைத்தும் துடிதுடித்து இறந்தன. இதைக் கண்டு சியவனர் மனம் மிக வருந்தினார். தன்னுடன் அன்போடு பழகிய மீன்களைப் பிரிந்த துன்பம் தாளாமல், மனம் வெறுத்து தானும் உயிர்விடப் போவதாகக் கூறினார்.

மீனவர்கள் பதறினர். “மகா தபஸ்வியான இவர் இறந்தால், தங்கள் குலத்துக்கு ஆபத்து வரலாம், பெரிய பாவம் வந்து சேரலாம்,” எனக் கலங்கி, அவ்வூர் மன்னனிடம் முறையிட்டு, சியவனரின் மரணத்தை தடுக்க ஓடினர்.

மன்னன் தன் அமைச்சர்களுடன் குளக்கரைக்கு வந்தான். சியவனரின் பாதங்களில் பணிந்து வணங்கினான். மன்னனிடம் சியவனர், “மன்னா! இந்த குளத்திலிருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் இந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்றால், நானும் அவர்களுக்கே சொந்தம். இருப்பினும், இந்த மீன்களை நீ விலைக்கு வாங்கி விட்டால், நான் உனக்கு சொந்தமாகி விடுவேன். என்னை வாங்கிக் கொள்,” என்றார்.

மன்னனும் மறுக்காமல் அப்படியே செய்வதாகச் சொல்லி, அவருக்கு மட்டும் விலையாக ஓராயிரம் பொற்காசுகள் மீனவர்களுக்கு கொடுத்தான். “மன்னா! என் விலை ஓராயிரம் பொற்காசு தானா?” என்றார் முனிவர் வருத்தத்துடன்.
மன்னன் ஒரு லட்சம் பொற்காசுகளை அவர்களுக்கு கொடுத்தான்.

இப்போதும் திருப்தியடையாத முனிவர், “உம்...இவ்வளவு தானா என் மதிப்பு?” என்றார். “ஒரு கோடி பொற்காசு கொடுக்கட்டுமா?” என மன்னன் முனிவரிடம் கேட்க அதற்கும் அவர் சம்மதம் தரவில்லை.

மன்னனுக்கு கடும் வருத்தம். என்ன செய்வதென அறியாமல் நின்ற வேளையில், மற்றொரு தவமுனிவர் அவ்வழியே வந்தார். நடந்ததைக் கேட்டார்.

“மன்னா! இதற்கு தீர்வு மிக சுலபமானது. பொன், பொருளை மட்டுமல்ல, உன் ராஜ்யத்தையே விட்டுக் கொடுத்தாலும், ஒரு முனிவருக்கு ஈடாகாது. இவர்களுக்கு ஒரு பசுவை விலையாகக் கொடு. மந்திரங்களின் வடிவம் பசு. அது அந்தணருக்கு சமமானது. இந்த முனிவருக்கு விலையாக ஒரு பசுவை கொடுத்து விடு,” என்றார்.

மன்னனும் அவ்வாறே செய்தான்.  சியவனரும் மகிழ்ந்தார். “மன்னா! இப்போது தான் சரியான விலையை நிர்ணயம் செய்தாய்,” என்றார். பசுவின் பெருமை தனக்குத் தெரிய காரணமாக இருந்த அந்த மீனவர்களுக்கு மன்னன் பொற்காசுகளை வாரி வழங்கினான்.

No comments:

Post a Comment