Wednesday, 4 July 2018

திருடு போன பொருட்களை மீட்க உதவும் பைரவர்

திருடு போன பொருட்களை மீட்க உதவும் பைரவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். 

முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். 

இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும். 

No comments:

Post a Comment