பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.
கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.
இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.
முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.
இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment