Sunday, 8 July 2018

கர்ப்பத்தை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

கர்ப்பத்தை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை ஆலயத்தில் சுவாமி கோவிலுக்கு வடபாகத்தில் நந்தவனம் உள்ளது. அந்த நந்தவனத்தை அடுத்து அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைதியின் உறைவிடமாக திகழ்கின்றது.

நந்தவனத்திற்கு தென்கிழக்கில் கௌதமேசுவரர் லிங்கம் அமைந்துள்ளது. இவர், கவுதம முனிவரால் பிரதிட்டை செய்து பூசிக்கப்பட்டதால் இத்திருப்பெயரோடு விளங்குகின்றார். இவரது சன்னதிக்கு எதிரில் அன்னையின் கோவில் அமைந்துள்ளது.

கருவறைக்குள் உயரிய பத்ம பீடத்தின் மீது அன்னை கர்ப்பராட்சாம்பிகை எழுந்தருளி உள்ளாள். தன்னைத் தேடி வரும் ஒவ்வொருவருக்கும் திருவருளைத் திருநயன நோக்கினால் பொழிகின்றாள். அன்னையின் திரு உருவம் வேண்டுவோர் வேண்டுவதை யெல்லாம் வழங்கும் கற்பகத் தருவினும் மேலானது. அமைதியான திருமுகம். அரும்பும் புன்னகை அமைந்த உதடுகள். காண்போரின் கல் மனதையும் கரைத்து காலடியில் வீழ வைக்கும் கருணை கண்கள். எல்லா செயல்களையும் தனது பாதங்களினாலேயே செய்தருளும் ஆற்றல் பெற்ற கமலமலர்ப் பாதங்கள். அன்னையின் எழில் உருவத் திருமேனியின் அழகே அழகு!

அன்னையின் திருக்கரங்கள் நான்கினுள் வலக்கரம் அபயமளிக்கின்றது. இடக்கரம் கருச்சிதைவைத் தடுப்பது போன்று வயிற்றின் கீழே அமைந்துள்ளது. மேல்நோக்கி உயர்த்திய மற்றொரு வலக்கரம் அக்க மாலையையும், மற்றொரு இடக்கரம் தாமரை மலரையும் பிடித்துள்ளன.

அன்னை கர்ப்பரட்சாம்பிகை தன்னை வழிபடும் பெண் கர்ப்பத்தால் உண்டாகும் தீமையும், பிற தீமைகளும் அணுகா வண்ணம் காத்தருளுகின்றாள். அவள் திருச்சன்னதியில் இன்றும் ஆமணக் கெண்ணெய் மந்திரித்து கருவுற்ற பெண்களுக்கு வழங்குன்றனர். இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையை வேண்டி வழிபடும் பெண்களுக்கு கருச்சிதைவோ, பிரசவத் தீங்கோ உண்டாவதில்லை. அன்னையின் சன்னதியில் உள்ள படிகளை நெய்யால் மெழுகித் கோலமிடும் பெண்களுக்கு திருமணம் தவறாது நடைபெற்று வருகின்றது. 

சன்னதியில் மந்திரித்து வழங்கப்படும் ஆமணக்கு நெய்யை, கருவுற்ற பெண்கள் தமது வயிற்றில் தடவினால் சுகப் பிரசவமாகும் என்பது பலருடைய அனுபவ உண்மை.

No comments:

Post a Comment