மகாவிஷ்ணு உலகம் உய்ய எடுத்த அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். திருவிடந்தையில் எழுந்தருளியுள்ள இறைவன் வராகமூர்த்தி. திருமலை-திருப்பதியிலும், நாமக்கல் லிலும், மகாபலிபுரத்திலும், விஷ்ணு வராக அவதாரம் சதபத பிராமணத்தில்தான் முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் மூஷ்ணன் என்ற பன்றிவடிவம் கொண்டு பூமியினைத் தாங்கியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதகாலத்திற்குப் பிற்பட்ட மற்றொரு நூலான தைத்தரிய ஆரண்யத்தில் இறைவன் கருப்பு நிற பன்றி உருவத்துடன் 100 கரங்களுடனும் புவியினைத் தூக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலும் வராக உருவில் இறைவன் எழுந்தருளியமைப் பற்றி அறியப்படுகின்றது.
விஷ்ணு புராணம், லிங்க புராணம், கருட புராணம் ஆகிய புராணங்கள் கடலிலிருந்து பூமியினை பிரம்மா வெளிக்கொண்டு வந்ததாகவும் இவரே மகாவிஷ்ணு என்றும் குறிப்பிடுகின்றன.
பண்டைய காலத்தில் திருவிடந்தைக்கு வாமகவீபுரி எனப்பெயர் வழங்கப்பட்டது. அக்காலத்தில் மேகநாதன் என்ற அசுரன் இருந்தான். அவனது மகன் பலிச்சக்கரவர்த்தி.
இந்த பலிச்சக்கரவர்த்தி உலகினைத் தர்ம சாஸ்திரத்தின்படி, முறையாக ஆட்சிபுரிந்து வந்தான். இவனது நண்பர்களான மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூவரும் தேவர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று அடைக்கலம் புகுந்தனர். தனது நண்பர்களுக்காக பலிச்சக்கரவர்த்தி தேவர்களுக்கு எதிராக போரிட நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தினைப் போக்க பலிச்சக்கரவர்த்தி திருவிடந்தையில் தவம் புரிந்தான்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பலியின் முன்பு தோன்றி அவனுக்கு வேண்டிய வரம்களை அளித்தார். இவ்வூரின் அழகில் மயங்கிய இறைவன் திருவிடந்தையிலேயே தங்கி விட்டார். திருவிடந்தையில் மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். மன்னன் ஒருவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கவே திருவிடந்தையில் பெருமாள் எழுந்தருளினார் என்கிறது ஒரு புராணக் கதை.
மேகநாதன் என்ற மன்னனின் மகன் பலி திரேதா யுகத்தில் சிறப்பாக அரசாட்சி புரிந்து வந்தான். அவனது படைகள் எட்டுத்திக்கும் சென்று ஜெய பேரிகை கொட்டும் வல்லமை பெற்றவை. மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், தேவர்களைப் போரிட்டு வெல்ல விரும்புவதாகவும், அதற்கு உதவி புரியமாறும் அவனை வேண்டினர். பலி மறுத்துவிட்டான்.
அரக்கர்கள் தேவர்களுடன் போரிட்டுத் தோற்றுத் திரும்பினர். பின்னர் பலியிடமே மீண்டும் வந்து உதவி கேட்டனர். இம்முறை இதற்குச் சம்மதித்த பலி வெற்றிக் கனியைப் பறித்து அரக்கர்களுக்கு அளித்தான். தேவர்களுடன் போரிட்ட காரணத்தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
இத்தோஷம் நீங்கத் தற்போது உள்ள திருவிடந்தையில் தவமிருந்தான். தவத்தினை மெச்சிய விஷ்ணு, வராக ரூபத்தில் காட்சி கொடுத்தார். பலியின் தோஷம் நீங்க அவனது விருப்பத்தை அடுத்து பெருமாள் திருவிடந்தையிலேயே தங்கி விட்டார்.
இந்நிலையில் முனிவரொருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குத் திருமண வயது வந்த பின் முனிவர் நாராயணனையே அப்பெண்களை மணக்குமாறு வேண்டினார். நாராயணன் ஒரு அழகிய இளைஞன் வடிவத்தில் பூலோகம் வந்தார்.
அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியாகவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகில வல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுயரூபமாக வராக ரூபத்தைக் காட்டினார். இந்த பெண்களில் முதல் பெண்ணின் பெயர் கோமளவல்லி. இவருக்கு இத்திருத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது.
தினமும் கல்யாணம் பண்ணிக்கொண்டதால் திருவிடந்தையில் இப்பெருமாளுக்கு நித்ய கல்யாண பெருமாள் என்பது திருநாமம். 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
வராக பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியில் ஊன்றி நிற்கிறார். இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கி வராக மூர்த்தியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் திருஷ்டி தோஷம், ராகு-கேது தோஷம், சுக்ர தோஷம், திருமணத் தடை ஆகி யவை நீங்கும் என்பது ஐதீகம்.
இவ்வூர் இறைவன், அசுரனின் தலைவான, பலிச் சக்கரவர்த்திக்கும், கால்வரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், அருள்பாலித்தார் என்பது திருத்தலப்புராணமாகும்.
No comments:
Post a Comment