திருச்சி உறையூரில் உலக மக்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளி அம்மன் ஆலயம் உள்ளது. “வெக்காளி” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? வெம்+காளி=வெக்காளி
வெம்= வெம்மை, விருப்பம் மற்றும் வெயில் முதலிய மூன்று பொருள்களும் தருவதாகும். மங்கலப் பொருள் முழுவதும் தருபவள் வெக்காளியே ஆவாள்.
கடவுளுக்கு திருவாசி என்பதைப் பிரபை என்று கூறுவர். ஒளிச்சுடரே பிரபையாகும். காலத்தை காட்டும் சூரிய சந்திரரும் இதில் அடங்குவர். எனவே, திருவாசி என்பது மாறிமாறி வரும் கால சக்தியைக் குறிப்பதாகும். தீச்சுடராகவே இருந்து என்றும் புதுமைகளை உண்டாக்குகிறாள் என்பது வெக்காளியின் திருவாசியாகும்.
திருமுகம் அசுரர்களைப் பகைவரைத் தீமைகளை நோய் நொடிகளை அச்சுறுத்தி அகற்றுவதற்காக விழிகள் பிதுங்க விழித்தும் கோரப்பற்கள் தெரிய நிற்பதும் ஆகும்.
அன்பர்க்கு அவர்களின் நெஞ்சில் இவள் மிக அழகிய வடிவுடனும் புன்னகையுடனும் மலர்ந்த விழியுடனும் காட்சியளிக்கிறாள். கைகளில் வலது மேற்கையில் உடுக்கை (டமருகம்) உள்ளது. இது ஒலியின் மூல உலகத்தைப் படைத்ததைக் குறிக்கும். இடது மேற்கையில் பாசம் உயிர்களைத் தன்வயப்படுத்தவும் அவர்களுடன் உறவு கொள்ளவும் அமைந்ததாகும்.
வலது கீழ்க்கை திரிசூலம் பகைவரை அழிக்கும் கருவியாகவும் இவளே மும்மூர்த்தியையும் நியமிக்கிறவள் என்பதை குறிக்கும். திரிபுரமான அறிவையும் குறிக்கும். இடது கீழ்க்கையில் கபாலம் உள்ளது. யுகயுகாந்திரங்களாக வாழ்ந்து மறைந்த பிரம்மன் முதலியவர்களின் கபாலயங்களையும் எரியக் கண்டவள் இவள். ஆகவே இவள் அழிய மாட்டாள் என்பதைக் குறிக்கும். மங்கலமாகக் குங்குமமும் ஆயுள் வளர்ச்சியையும் அளிப்பது இக்கடவுளே என்பதைக் குறிக்கும். வலது கால் மடித்து இடது காலை ஊன்றியது சுகாசனம் ஆகும். இவள் இவ்வாறு இருப்பதால் யாவர்க்கும் சுகமே பிரசாதம் என்பதாகும்.
வெக்காளி அம்மன் போர்க்கோலம் துறந்து சுகாசனத்தில் இருந்தாலும் அசுரத்தனம் வளராமல் இவள் பாதத்திலேயே உள்ளது என்பதை அசுரன் இடது காலில் இருப்பதைக் காட்டுகிறது.
நான்கு கைகளும் நான்கு யுகங்களும் நான்கு திசைகளையும் நான்கு வேதங்களையும் குறிப்பதாகும். உடலில் பாம்பு இருப்பது பிரபஞ்சகுண்டலினி சக்தியைக் குறிக்கும். எல்லா உயிர்களிலும் உலகப் படைப்பிலும் இயக்கமாக இருப்பது குண்டலினி சக்தியாகும். அதைத்தான் கண்காணிப்பில் வைத்திருப்பதே பாம்புகள் அணிவதாகும்.
காளி என்ற சொல்லிற்கு கரிய நிறம் உடையவள் என்பது பொருளானாலும், அது இருளில் வலிமை கொண்ட அசுரனை அழிக்கும் போதுள்ள நிறமாகும். மங்கலம் தரும் அமைதி நேரத்தில் அவளே சிவந்த நிறம் உடையவள் ஆவாள். உடுக்கை, திரிசூலம், பாசம், கபாலம், இவை கொண்டு இவள் பிரம்மமாகிய பரம்பொருள் வடிவம் என்பதை உணரலாம். எனவே வெக்காளி அம்மனை வழிபட்டால் நீங்கள் கேட்டதை எல்லாம் தந்து அருள்வாள்.
No comments:
Post a Comment