Saturday 7 July 2018

கேது பகவானால் வரக்கூடிய நோய்கள்

கேது பகவானால் வரக்கூடிய நோய்கள்

நமது உடலில் தாங்கவே முடியாத வலிகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர் கேது. உடலில் கெட்ட வியர்வை, அதனால் உடல் துர்நாற்றம் வருவதும் கேதுவால் தான். எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு கேதுவின் ஆதிக்கமே காரணம். மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமல் அவதிப்படுவது, கெட்டுப் போன.. விஷத்தன்மை கொண்ட உணவுகளால் ஏற்படும் நோய்கள், காற்றில் பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கும் கேது தான் காரணம் ஆவார்.

காடுகளில் வழி தெரியாமல் சுற்றித் திரிவது, வன விலங்குகளின் தாக்குதலால் உண்டாகும் உடல் சிதைவு, பற்களை தாங்கும் ஈறுகளில் கெட்ட ரத்தம் படிவது, ஈறுகள் தேய்ந்து போய் பற்கள் ஆடிக்கொண்டு இருப்பது, கீழ்தாடைகளில் வெட்டுப்படுவது, தாடை எலும்பு முறிவு ஏற்படுவது, தியானம், யோகா, ஆன்மிக சக்திகளை தவறான முறைகளில் பயன்படுத்துவதற்கும் காரணமானவர்கள் கேதுவே.

மருத்துவமனைகளில் தவறான அறுவை சிகிச்சை ஏற்படுவதற்கும், தவறான மூலிகை மருந்து கொடுத்து அவதிப்படுவதற்கும், விஷ சாராயம், விஷ நீர் போன்ற உயிர் கொல்லி மருந்துகள் மூலம் உடலில் கண், காது, வாய், உயிர் போவதற்கும் காரணமாக இருப்பவர் கேது. சாலைகளில் சித்தபிரமையில் கத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, பல நாள்பட்ட.. அருவறுப்பான ரண காயத்திற்கு, அசைவ உணவுகள் மூலம் கெட்ட கொழுப்புகள் தரக் கூடிய நோய்களுக்கு, சாக்கடை மற்றும் மனித மலக் கழிவு தொட்டி, ரசாயன கழிவு தொட்டி இவற்றில் செய்யும் வேலையால் வரும் நோய்களுக்கு, பலநாட்கள் குளிக்காமல்.. பல் துலக்காமல் தரித்திர நிலையில் இருப்பதற்கு, கோவில் கோபுரம், கோவில் மண்டபம், கோவில் சிலைகள் ஒருவர் மீது விழுந்து அங்கம் சேதம் அடைவதற்கு, போதை வஸ்துவால் அவதிப்படும் நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனநிலைக்கு கேது தான் காரணம் ஆவார்.

கேதுவால் வரும் பாதிப்புகள்

* கேது பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், உடலில் ஏதாவது வலிகள் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரக் கூடும் அல்லது உடல் எப்போதும் சூடாகவே இருக்கும். சின்ன சின்ன சீழ் பிடிக்கும் கட்டிகள் வரக்கூடும்.

* கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், கெட்ட எண்ணம்.. கெட்ட பழக்கவழக்கத்தால் நோய்களை தேடிக் கொள்வார்கள். தோல் அரிப்புகள், கட்டிகள் வரக்கூடும். நிலையான புத்தி இல்லாமல் மன சஞ்சலத்தோடு நோய் கொண்டு வாழ்வார்கள்.

* கேதுவின் பகை கிரகங்களான சூரியன், சந்திரன் இணைந்து இருந்தால், உடலில் ஏதாவது பிணி இருந்து கொண்டே இருக்கும். வயிற்று வலி, ரத்த குறைபாடு, கண்கள் குறைபாடு இருக்கும். பரம்பரை நோய்கள் நிச்சயம் வரக்கூடும்.

* கேது பகை கிரகமான சூரியன், சந்திரன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், மனதில் மரண பயம் அவ்வப்போது வாட்டி எடுக்கும். நல்ல சுத்தமான பேச்சுகள் இல்லாமல், குளறியபடி பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருப்பார்கள்.

* கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12-ல் மறைவு ஸ்தானத்தில் நின்று இருந்தால், கேது மறைவு பெறுவது நன்மையே என்றாலும், நோயின் வீரியத்தை அதிகப் படுத்தும். நற்பலன்கள் தந்தாலும் அவற்றை நிரந்தரமாக தரமாட்டார். ஆசையை காட்டி மோசம் செய்வார். நாள் பட்ட நோய்களை தருவார். ஜாதகர் சாப்பிடும் மருந்துகள் கூட ஒரு கட்டத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

* கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, சின்ன சின்ன விபத்துகள் நடந்து, உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். வேனிற் கட்டிகள் வந்து போகும். உடலில் அரிப்பு, புண்கள் வரக்கூடும். கண்களில் கோளாறு இருக்கும்.

* கேது லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு நித்திய கண்டம் போல் இருக்கக்கூடும். விஷ பாம்புகள், விஷ வண்டுகள் மூலம் ஏதாவது தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். புது தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

* கேது கிரகத்தை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், உண்ணும் உணவு விஷமாகும். கெட்ட பழக்கத்தால் தானே நோயை தேடிக் கொள்வதும், எந்த நேரமும் ஏதாவது உடல் தொல்லைகளுடன் இருப்பதும், நோய் போக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதில் அக்கறை காட்டாமலும் இருப்பார்.

உலக பாதிப்புகள்

கேது மிக கொடிய கிரகம் என்பதால், அவரது ஆதிக்க காலத்தில் காற்றில் கண்களுக்கு தெரியாத விஷ கிருமிகள் பரவக்கூடும். உலகில் புதிய தொற்று நோய்கள் வரக்கூடும். மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரலாம். கடவுளின் புனித இடங்களில் துஷ்ட சம்பவங்கள் நடக்கக்கூடும். காடுகளில் அபூர்வமான மூலிகைகள் அழியலாம். பூமிக்கு அடியில் இருந்து வரும் விஷ வாயுக்களால் பாதிப்பு, பொது மக்கள் உணவு பஞ்சம் வந்து பசியால் வாடுவது, நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க செல்வது, போர் அச்சம் காரணமாக பொதுமக்கள் நிம்மதியின்றி வாழ்வது போன்றவை நடந்தேறும்.

No comments:

Post a Comment