Thursday 31 May 2018

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

பொதுப்பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

- இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.

பாவங்களை போக்கும் நடராஜர் ஸ்லோகம்

பாவங்களை போக்கும் நடராஜர் ஸ்லோகம்

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் 
ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

- சிதம்பர பஞ்சாக்ஷர மந்த்ரம்

பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார்.

சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும். 

மூகாம்பிகை சிலை உருவானது எப்படி?

மூகாம்பிகை சிலை உருவானது எப்படி?

ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார். சிலை வடித்து எடுக்கும் பரம்பரையில் மிகத் தேர்ச்சிப் பெற்ற ஸ்தபதி ஒருவரை அழைத்து திருவுருவச்சிலையை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி மூகாம்பிகை சிலை பஞ்சலோகத்தில் வடிக்கப் பெற்றது. திருவுருவச்சிலை மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும் மற்றும் இதன் இருபுறமும் நின்ற நிலையில் இரு அம்மன் திருவுருவத்தையும் (லட்சுமி மற்றும் சரஸ்வதி) தன்னுடைய தியானத்தில் கண்டபடி தத்ரூபமாக வடிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட ஆதிசங்கரர் மெய் சிலிர்த்து பக்திப் பரவசமானார். இதுவும் தாய் மூகாம்பிகையின் அதி அற்புத லீலை என்று மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
லிங்கப்பெருமை

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ள கருவறை லிங்கம் சுயம்புலிங்கமாகும். இச்சுயம்பு லிங்கம் தரைக்கு மேலே சற்று நீட்டிக்கொண்டு சம அளவில் கோள அமைப்பில் சக்தி நிறையப்பெற்றதாக புனிதத் தன்மையுடன் சிறந்து விளங்குகிறது. 

இச்சுயம்பு லிங்கத்தின் உச்சி மத்தியில் ஒரு தங்க ரேகையால் இரு சமமற்ற பாகங்களாக, வலது பாகம் சிறியதாகவும். இடது பாகம் பெரியதாகவும் உள்ளவாறு பிரிக்கப்பட்டுள்ளது. வலது பாகம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரிகின்ற மும்மூர்த்திகளான சிவ, விஷ்ணு, பிரம்மா இவர்களைக் குறிப்பதாகும். அதேபோல இடதுபாகம் ஆதி சக்தியின் மூன்று வித ரூபங்களாக திகழும் மஹாகாளி, மஹாசரஸ்வதி, மஹாலட்சுமி ஆகிய இவர்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாக வேதங்களில் இடதுபாகம் பெண்களின் இடத்தைக் குறிப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இச்சுயம்பு லிங்கத்தின் இடப்பகுதி பெரியதாக இருப்பதால் கருணையே வடிவான ஸ்ரீ மூகாம்பிகை இத்தலத்தில் கொலுவிருந்து பேரருள் புரிவதாக எல்லோராலும் போற்றி வணங்கப்படுகிறாள். 

முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியரும் நிறைந்த புனிதமிக்க ''சிவசக்தி'' சொரூபமாக இச்சுயம்புலிங்கம் திகழ்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுயம்புலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும் போது கருவறை சோமுகம் வழியாக வெளியேறும் புனித நீரை பிடித்து குடிக்கவும், தலையில் தெளித்துக் கொள்ளவும் பக்தர்கள் போட்டி போடுவதை எப்போதும் பார்க்க முடிகிறது.

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத்தலம் 51 சக்தி பீடங்களில் இடம் பெறவில்லையாயினும் இந்தப்பீடமே முதன் முதல் ஆதிசங்கரரால் புனிதப்படுத்தப்பட்டு நிறுவப்பட்ட பீடம். எனவே இதனை அர்த்தநாரி பீடம் என அழைக்கிறார்கள்.

உலகிலேயே தொன்மையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் உட்பிரிவுதான் குடசாத்ரி என்ற புனிதமான மலை. ரிஷிகளும் சித்தர்களும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கும் புண்ணியத் தலம் இது. 

இங்கு உற்பத்தியாகும் நதியே சௌபர்ணிகா நதி. இதன் கரையில் கருடபகவான் தவம் செய்து தனது குலத்தில் நிலவியிருந்த பலவிதமான சாபங்களையும் தோஷங்களையும் நீக்கிக்கொண்டான். கருடனின் பெயர் சுபர்ணன் என்பதினால், இந்த ஆறு சுபர்ணிகா என்று பெயர்பெற்றது. ஒரு குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தால் இந்த சுபர்ணிகா நதிதீர்த்தத்தில் நீராடி தூய மனதுடன் மூகாம்பிகையை வழிபாடு செய்தால் பேரானந்தம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

வெற்றி மீது வெற்றி வரும்

வெற்றி மீது வெற்றி வரும்

அம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.

சில தலங்களில் துர்க்கை அம்மனின் ஆக்ரோஷத்தை காண முடியும். சில தலங்களில் லட்சுமியின் கருணை இருப்பதை உணரலாம். சில ஆலயங்களில் சரஸ்வதியின் அருளை பெற முடியும்.

இந்த மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்து தரும் அருளை ஒரே இடத்தில் பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கல்வியா, செல்வமா, வீரமா... அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கிறது என்றால்... அதற்கு எவ்வளவு அதிர்ஷ்டமும், பாக்கியமும் செய்திருக்க வேண்டும்.

இந்த சிறப்புக்குரிய இடம் - கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்த ஆலயம் கர்நாடகா மாநிலத்தில் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஒன்றான உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவளை நம்பி நீங்கள் கொல்லூர் சென்று வந்தால் நிச்சயமாக அவள் உங்களை மாமன்னராக வாழ வைப்பாள். அதற்கேற்ப உங்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் வரும்.

இத்தகைய சிறப்புமிக்க இந்த தலம் கொல்லூர் குடசாத்திரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இதன் அருகே சவுபர்ணிகை என்ற நதி ஓடுகிறது. சென்னை மற்றும் வட நாட்டிலிருந்து இத்தலம் செல்ல விரும்புபவர்கள் ரயில் மூலம் மங்களூரை அடைய வேண்டும். அங்கிருந்து கொல்லூருக்குச் செல்ல பஸ் வசதி மற்றும் கார் உண்டு. நான்கு மணிநேரப் பயணம். இத்தலம் மங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. 

மங்களூர்&குந்தாபூர் வழியாகவும் எளிதில் கொல்லூரை சென்று அடையலாம். இத்தலத்தில் குடி கொண்டிருப்பவள் அன்னை ஸ்ரீமூகாம்பிகை ஆவாள். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். பெருமையும், புகழும் மிக்கது. நம் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையைக் காண தினமும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இது மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஏழு புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். 

கோலமகரிஷி என்பவர் இங்கு பல ஆண்டுகளாக தவம் இயற்றி வந்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி அவரிடம் கூறியதாவது, ''முனிவரே உன் தவத்தால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம். தானாகத் தோன்றிய ஜோதி லிங்கத்தை நீ வழிபடுவாயாக. உனக்கு ஆதிபராசக்தி அந்த இடத்தில் காட்சி தந்தருள்வாள்'' என்றார்.

அந்த மகரிஷி தவ வலிமையால் அந்தப் பகுதி புனிதம் அடைந்தது. அந்த மகானின் பெயரால் அத்தலம் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு வந்தது. பிறகு அது கொல்லூர் என மருவிற்று. இந்தக் கொல்லூர் ஓங்கி வளர்ந்த மலைச் சிகரங்களாலும், பச்சை பசேல் ஆன மரம், செடி, கொடிகளாலும் சூழப்பட்டது. மிகவும் வனப்புமிக்க பிரதேசமாகும். ஸ்ரீசக்கர வடிவத்தில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. 

இத்தலத்தின் அமைதியும், அழகும் நிறைந்த சூழ்நிலையானது அங்கு அன்னையை நாடி வரும் பக்தர்களுக்கு மன சாந்தியையும், பக்தி நெறியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. திருப்பிச்செல்ல மனமே வராது.

இக்கோவிலின் பக்கத்தில் விருந்தினர் தங்கும் விடுதி, பணித்துறையினர் தங்கும் வசதி, அர்ச்சகர்களின் இல்லங்கள், ராம கிருஷ்ண யோகாசிரமம், ஸ்ரீசங்கர மடம் முதலியவை இருக்கின்றன. தற்போது சுமார் 1500 குடும்பங்கள் கொல்லூரில் வசித்து வருகின்றனர். 

இக்கோவிலின் மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் சவுபர்ணிகை ஆறு ஓடுகிறது. அதன் கரையில் மகிழ மரங்கள் மலரை சொரிந்து நறுமணம் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. அங்கே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. சவுபர்ணிகையில் நீராடி, விநாயகரை வணங்கிய பின்தான் அன்னையை தரிசிக்க செல்ல வேண்டும்.

800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி

800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர் இவர்.

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவது ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.

ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.

ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது.

அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.

குழந்தை வரம் தரும் கோவில்பத்து கோதண்டராமர் ஆலயம்

குழந்தை வரம் தரும் கோவில்பத்து கோதண்டராமர் ஆலயம்

அழகிய முன் முகப்புடன் கூடிய கோவில்பத்து கோதண்டராமர் ஆலயம் சாலையின் விளிம்பிலேயே உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நீண்ட பிரகாரமும் உள்ளது. இடதுபுறம் தனி சன்னிதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். ‘ஸ்ரீதருநேத்ரதசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயர்’ என்பது இவர் பெயர். ஆம்! இந்த ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் அருள்பாலிப்பது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

இவர் ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார். நேர் எதிரே ஆஞ்சநேயராகவும், இடதுபுறம் நரசிம்மராகவும், வலதுபுறம் வராக மூர்த்தியாகவும், பின்புறம் கருடாழ்வாராகவும், மேல்பகுதி ஹயக்ரீவராகவும் காட்சி தரும் இவர், நின்ற கோலத்தில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

அனுமன் ஜெயந்தி அன்று இந்த ஆஞ்சநேயர் சன்னிதி முன்பாக ‘மூல மந்திரயாகம்’ என்ற யாகம் நடத்தப்படுகிறது. பூஜை மற்றும் யாகப் பொருட்களுடன் நவதானியமும் யாகத்தில் இடப்படும். சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன் பெறும் இந்த யாகம் நடக்கும் அன்று, ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் பக்தர்களுக்கு வடை, புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் முதலியன பிரசாதமாகத் தரப்படுகிறது.

கல்வி செல்வம் வேண்டியும், திருமணத் தடை விலகவும், விரைந்து திருமணம் நடக்கவும் வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக கூறுகின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவர்கள் ஆஞ்சநேயருக்கு புத்தாடை அணிவித்து, அர்ச்சனை செய்து வெற்றிலை மாலை, கொய்யாப்பழ மாலை, வாழைப்பழ மாலை, எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னிதியை அடுத்து மகாமண்டபமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. மகா மண்டப நுழைவு வாசலின் இடது புறம் நாகர் மற்றும் வலதுபுறம் தும்பிக்கை ஆழ்வார் திருமேனிகளும் உள்ளன.

உள்ளே கருவறையில் மூலவராக வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவருக்கு முன் உற்சவர் கோதண்டராமர், சீதாப் பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். அருகே நம்மாழ்வாரின் திருமேனியும் உள்ளது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. பங்குனி மாதம் ராமநவமி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தின் தெற்கு திருச்சுற்றில் ஒரு மண்டபம் உள்ளது. ராமநவமியின் 10-ம் நாள் உற்சவமாக இந்த மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இறைவன்- இறைவிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு நடைபெறும் கண்ணாடி சேவை மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுவர். மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.

குழந்தை பேறு வேண்டுவோர் இந்த ஆலயம் வருகின்றனர். கருவறையில், கையில் தூக்கக் கூடிய வடிவில் சந்தானகிருஷ்ணன் உலோகச்சிலை ஒன்று உள்ளது. அர்ச்சகர் அந்தச் சிலையை பிரார்த்தனை செய்பவர் கரத்தில் சில நிமிடங்கள் தந்து விட்டு திரும்ப வாங்கிக்கொள்வார். அந்தப் பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் விரைந்து கிடைக்கும் என உறுதியாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஊர் மக்களின் சுப காரியங்கள் நடைபெறுகின்றன. திரு மணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற மங்கல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

வில்லேந்திய ராமபிரானையும், சீதாப்பிராட்டியாரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை இந்த ஆலயம் சென்று வரலாமே.

கிருஷ்ணர் வரம் தருவார்

கிருஷ்ணர் வரம் தருவார்

கிருஷ்ணபெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லா புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார். அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார்.

பகவான் கிருஷ்ணன் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். 

Wednesday 30 May 2018

நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள்

நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள்

ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆவணி 19 - சனி ஜெயந்தி
ஆவணி 26 - அங்காரக ஜெயந்தி
புரட்டாசி 05 - குரு ஜெயந்தி
புரட்டாசி 18 - சுக்கிர ஜெயந்தி
கார்த்திகை 06 - சந்திர ஜெயந்தி
தை 29 - சூரிய ஜெயந்தி

(ராகு - கேதுக்களுக்கு கிரக ரூபம் இல்லாமையாலும், சாயாக் கிரகங்களாவதாலும் ஜெயந்தி நாட்கள் கிடையாது).

800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி

800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர் இவர்.

பிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவது ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.


திருநாராயணபுரத்தில் உள்ள தமர் உகந்த திருமேனி

ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.

ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது.

அந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.

மனசே! மனசே! கதவைத்திற!


குருநாதரின் முன்னாள் சீடன், ஒருநாள் அவரைச் சந்திக்க வந்தான். ''குருவே...நான் உங்களின் அறிவுரைப்படி தியானம் பயில்கிறேன். அதனால், ஞாபகசக்தி, புத்திக்கூர்மையுடன் இருக்கிறேன். இருந்தாலும்....'' என சற்று இழுத்தான். ''இருந்தாலும்.... உனக்கு என்ன குழப்பம்?''

''நான் நல்லவன் தானா என்ற சந்தேகம் எழுகிறது. சில நேரத்தில் தெரிந்தே தவறு செய்கிறேன். தியானம் பயில்பவன் இப்படி இருக்கலாமா என நினைக்கும் போது குழப்பம் அதிகரிக்கிறது!”

குரு சிரித்தார். ''ஆக….. சில நேரத்தில் விழிப்பற்ற நிலையில் தவறும் செய்கிறாய், அப்படித்தானே…?'' தலை குனிந்தபடி சீடன், ''ஆமாம் குருவே. அது தவறு தானே...''

''தவறில்லை. நீ தியானம் செய், தவறு செய், தியானம் செய், தவறு செய், கொஞ்சநாளில் ஏதேனும் ஒன்று நின்று விடும்!''

சீடன் பதறினான், ''அய்யோ... ஒருவேளை தவறுக்குப் பதில் தியானம் நின்று விட்டால்?''
''அப்படி நடக்க வாய்ப்பில்லை. தவறு செய்கிறேனே என்ற எண்ணம் எழுந்ததே, தியானத்தின் மீது உனக்கு அக்கறை வந்ததை உணர்த்துகிறது. விழிப்பு நிலைக்கான கதவு உன்னுள் திறந்து விட்டது என்பதே உண்மை'' என்றார். குழப்பம் தீர்ந்த சீடனும் நன்றியுடன் புறப்பட்டான்.

ராமரின் வெற்றிக்கு வழிகாட்டிய திருப்புல்லாணி கோவில்

ராமரின் வெற்றிக்கு வழிகாட்டிய திருப்புல்லாணி கோவில்

ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதனக் கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது, ‘திருப்புல்லாணி’ திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

இந்த ஆலயத்தின் மூலவரான ஆதிஜெகன்னாதப் பெருமாள் திருமகளும், நிலமகளும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி நல்குகிறார். புனித பாரதத்தில் எத்தனை ஜெகன்னாதர் கோவில் இருப்பினும், இவர் மிகவும் பழமையானவர் என்பதால் ஆதி ஜெகன்னாதர் எனப்படுகிறார். இறைவனுக்கு ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்பது திருமங்கை ஆழ்வார் செல்லமாக வைத்த பெயர். உற்சவர் கல்யாண ஜெகன்னாதர்.

‘சக்கர தீர்த்தம்’ என்னும் தாது கலந்த தெள்ளிய திருக்குளத்தின் முன்பு, வண்ணங்கள் அள்ளித் தெளித்த ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்து நிற்கிறது. அதனைக் கடந்து உள்ளே நுழையும் போதே வேத மந்திரங்கள் காற்றில் தவழ்ந்து நம் செவிகளைப் புனிதமாக்குகிறது. பலிபீடம், கொடிமரம், பெரிய மண்டபத்தில் சேவிக்கும் கருடாழ்வார், அவர் முன்பாக கல்யாண விமானத்தின் கீழ் கடல்நிறப் பெருமாள் காட்சி தருகிறார்.

ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் விளக்குகிறது.

தென்பிரகாரச் சுற்றில் விமானத்தில் சற்று உயர்ந்த பகுதியில் லட்சுமிநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். மண்டபங்களில் சிற்பங்கள் சிந்தையைக் கவர, நாம் இரண்டாம் சுற்றினைத் தாண்டியதும் தென் பிரகாரத்தில் பத்மாசனித் தாயார் மூலவராகவும், உற்சவராகவும் புன்னகைத்தபடி தனிச் சன்னிதியில் அமர்ந்திருக்கிறார். வடமேற்குத் திசையில் கோதை நாச்சியார் கொலு விற்றிருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது காணக் கிடைக்காத திருக்காட்சி.

இந்த சன்னிதியின் இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் பகை வருக்குப் பயமூட்டும் தோற்றத்துடன் இருப்பது சிறப்பு. ராவணன் தூதர்கள் முன்னே வந்தால் ‘என்னை மானுடனாக மட்டும் எண்ணி விடாதே’ என்பது போல தோற்றத்துடன் வீர ராமன் காட்சித் தருகிறார். நாபியிலிருந்து மூன்று தண்டுகள் எழுந்து, ஒரு தண்டில் உள்ள தாமரையில் பிரம்மனும், மற்ற இரு தண்டுகளில் சூரிய - சந்திரர்களும் இருக்கிறார்கள். மேலே முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டதாக நுண்ணிய சிற்பங்கள் மின்னுகின்றன.

கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.

இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.

திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அமைவிடம்

ராமநாதபுரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ராமநாதபுர சமஸ்தான கோவில்களில் ஒன்றாகத் திகழும் திருப்புல்லாணி ஆலயம், தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தான் கடலரசன் ஆட்சி செய்யும் சேதுக்கரை நீல நிறத்தில் காட்சி தருகிறது.

வர்ணிக்க வார்த்தையில்லை


பழநியில் ஒரு முருக பக்தர் வாழ்ந்தார். அவரது மூன்று வயது குழந்தை அம்மை நோயால் வாடியது. செய்வதறியாத அவர் பழநி முருகனின் சன்னதியில் குழந்தையை கிடத்தி, ''அப்பனே! பழநியாண்டவா! குழந்தையைக் காப்பாற்று'' என்று கதறினார். இரவு வந்தது. சன்னதியிலே முருக நாமத்தை ஜபித்தபடி படுத்தார். காலையில் கண்விழித்த போது அதிசயம் நிகழ்ந்திருந்தது.

குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் அனைத்தும் மறைந்து விட்டன. ஆம்! அம்மையில் இருந்து குழந்தையை முருகன் காப்பாற்றி விட்டார். நோய் நீங்கியதால், மூன்று நாள் வேப்பிலை இட்ட நீரில் குழந்தையை நீராட்டினார். ஆனால், குழந்தையின் பார்வை பறி போனதை அறிந்த அவர் வருந்தினார். ஆனாலும், குழந்தை உயிர் பிழைத்ததே என்று ஆறுதல் அடைந்தார். 

பிற்காலத்தில் தமிழில் புலமை பெற்ற அக்குழந்தை, 'மாம்பழக் கவிச்சிங்க நாவலர்' என்னும் கவிஞராக புகழ் பெற்றார். பழநி முருகன் மீது அவர் பாடிய பாடல்கள் புகழ் மிக்கவை. ஒருநாள், சன்னதியில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்த போது பால்காவடி சுமந்தபடி பக்தர்கள் சிலர் வந்தனர். அவர்கள் எழுப்பிய, 'பழநியாண்டிக்கு அரோகரா' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. அதைக் கேட்டு நாவலர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.

அதைக் கண்ட ஒருவர், ''கண் இருப்பவருக்கே பழநியாண்டவனின் தரிசனம் கிடைப்பது சுலபம் இல்லையே! இப்படியிருக்க பார்வையில்லாத இவர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்றார் ஏளனத்துடன்.

இதைக் கேட்ட நாவலர் உருக்கமுடன், ''சகல வசையும் ஒதுக்கி என்னைக் காப்பது என்ன மலை உனக்கு! அசைவில் மனத்தர் தொழும் பழநாபுரி ஆண்டவனே'' என்று பாடினார். பழநியாண்டவனுக்கு கருவறையில் செய்யும் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் அனைத்தும் நாவலரின் மனக்கண்ணில் 'நேரலை' போலத் தெரிந்தது. 

அப்படியே சன்னதியில் நடப்பதை பார்த்தது போல சொல்லத் தொடங்கினார். இதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். வம்பு பேசிய பக்தர் வாயடைத்து நின்றார். பழநியப்பனின் பெருமையை வர்ணிக்க வார்த்தை இன்றி தவித்தார் நாவலர். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்பதை உணர்த்த, முருகன் நடத்திய திருவிளையாடல் இது. 

Tuesday 29 May 2018

தீராத பிணி தீர்த்த வாலை குருசாமி சித்தர் கோவில்

தீராத பிணி தீர்த்த வாலை குருசாமி சித்தர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் கொம்மடிக்கோட்டை. இவ்வூரில் தான் அன்னை பாலாவின் அருள்பெற்ற குருவும் சிஷ்யர்களுமான இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அத்துடன் தீராத நோயை தீர்த்து திரு அருள்புரிந்தும் வருகிறார்கள்.

கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்த காரணத்தினால் இவ்வூர் ‘கொம்மடிக் கோட்டை’ என்ற பெயர் பெற்றுள்ளது. கொம்மடிராயன் கல்வெட்டு அருகில் உள்ள சிவாலயமான ஞானாதீஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது.

பழங்காலம் தொட்டே இவ்விடம் பெரும் புண்ணிய பூமியாக திகழ்ந்துள்ளது. சுற்றிலும் தேரிக்காடாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் சுனையும், தோப்பும் துறவுமாக பசுமை நிறைந்த வனப்பாகவே கொம்மடிக்கோட்டை விளங்கியுள்ளது. இங்கு அகிலத்தினை காக்கும் பாலா தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். எனவே இவ்வூரை பாலாசேத்திரமென அழைக்கிறார்கள்.

சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை அம்மன். பாலா என்பது சமஸ்கிருத பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். அன்னை பராசக்தியான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா.

‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலை அம்மனின் பெருமைகளை விவரிக்கிறது. ‘வாலாம்பிகை வாலையடி சித்தருக்கு தெய்வம்' என்பது வழி வழியாய் வந்த மொழி.

வாலை அம்மனை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் க்லிம் ஸௌ' என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான், மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீ வித்தையில் மிகவும் எளிதானது பாலா மந்திரம்.

வாலை அம்மனின் பெருமையை பலரும் பலவிதமாக பாடுகிறார்கள். இவரின் புகழ் பாட, ‘பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே...’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால் தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா...’ என்றும் பாடப்பட்டுள்ளாள். சித்தர்கள் வாலை அம்மனை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை என்கிறார்கள்.

‘உலகம் வாலையில் அடக்கம்’ என்பது உண்மை. வாலை அம்மனை பூஜித்து வர வேண்டுமானால், அதற்கு முற்பிறவியில் நற்பலன் இருந்தால் மட்டுமே முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாலை அம்மன் பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தான் தெரியும், எத்தனை அற்புத காட்சி எல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்று. ‘வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்களெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரிதான சூட்சுமம் ஏது?’ என்கிறார் கருவூரார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி நாத தத்துவத்தையும் சுத்தமாயையும் ஓங்கார சொருபிணி என்று சித்தர் கூடம் அவளையே போற்றுகிறது.

இவரின் அருள் சாதாரணவர்களுக்கு தெரியுமா என்ன? ஆனால் சித்த பெருமக்களுக்கு ஞானாம்பிகா அன்னை இருக்குமிடம் தெரிந்துள்ளது.

சுமார் 800 வருடங்களுக்கு முன்பு...

அன்னையை வணங்க பல பல யோகிகளும், ஞானிகளும் நிறைந்த புனித மலையாம் கயிலாயத்தில் இருந்து வந்தவர்தான் வாலை குருசாமி. இவர் வாலையை தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னாள் ‘வாலை’ என சேர்த்துக்கொண்டவர். இவர் பல புண்ணிய தலத்துக்கெல்லாம் சென்று விட்டு காசி வந்தார். அங்கே.. காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா... வாலை குருசாமியின் சீடராகிவிட்டார். அவரோடு சேர்ந்து அன்னையை காண தென் திசை நோக்கி வந்தார்கள்.

வரும்வழியில் பல மக்களுக்கு அருளாசி வழங்கினர். வேண்டும் வரம் கொடுத்தனர். பல புண்ணிய தலத்தில் தங்கி யாகங்கள் பல செய்தனர். இறுதியாக கொம்மடிக்கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலசேத்திரத்தைக் கண்டனர்.

‘ஆகா.. இதுவல்லவா.. புண்ணியசேத்திரம். இங்குதானே நாம் தேடி வந்த அன்னை அருள்பாலிக்கிறார்’ என வியந்து போற்றி... அங்கேயே அமர்ந்தனர்.

ஆசிரமம் அமைத்தனர். ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் சன்னிதி அமைத்தனர். இங்கு அவர்களுடன் பல பல சித்தர்கள் வந்து யாகம் பல நடைபெற உதவினர்.

ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குருமுகமாகவே அடையவேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டை போகர் முனிவர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றார் என்றும், தான் பெற்ற உபதேசத்தை போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர் தன்னுடைய பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது. அகத்தியர் உள்பட பல சித்தர்களும் அன்னையை புகழ்ந்து போற்றியுள்ளனர். எனவே இவ்விடம் அருள் ஆசியை அள்ளி தரும் அற்புத பூமியாக திகழ்ந்தது.

பாலசேத்திரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்கு பலரும் வந்து சென்றனர். நோய் பட்டவர்கள் வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குருசாமியும், காசியானந்தாரும் திருமாத்திரை வழங்கினர். அந்த திருமாத்திரையை பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது. பல மூலிகைகளைக் கொண்டு, அந்த மாத்திரையை, அன்னையின் தலத்திலேயே சித்தர் பெருமக்கள் உருவாக்கினார்கள். தற்போதும் கூட இதே மாத்திரை இங்கு கிடைக்கிறது.

மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.

தற்போது வழங்கப்படும் இந்த மாத்திரையை, அந்த காலத்திலேயே சித்தர்கள் வழங்கியதால் பலரும் நோய் தீர்ந்து அருள் பெற்றனர். எனவே இவ்விடத்தினை ‘ஞானியர் மடம்' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அன்னையை நாள்தோறும் வணங்கி அருள் பெற்று, பக்தர்களுக்கும் அருள் தந்துக்கொண்டிருந்த சித்தர்கள் இருவரும் யோக முதிர்ச்சி பெற்றனர். சித்துக்கள் பெற்றனர். அதன் பின் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். அன்னையின் அருளால் நம்பி வருகின்ற மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கி வந்தனர்.

சித்தர் பெருமக்கள்அடங்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. ஆனால் அருள் ஆற்றல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வூர் மக்கள் என்னவென்று தெரியாமலேயே இங்கு வந்து அந்த அருளை பெற்று சென்றனர். தேன் நிறைந்த வாசமுள்ள மலர்களை ஈக்கள் வண்டுகள் மொய்ப்பது போன்று ‘ஆகா.. இது புண்ணிய தலம். இங்கே ஏதோ இருக்கிறது. இங்கு வந்து சென்றால் ஏதோ.. நடக்கிறது. நல்லது தோன்றுகிறது. இது புண்ணிய பூமி..' என்று நினைத்து சென்றவர்களுக்கு நல்ல அருளும் வாழ்வும் கிடைத்தது.

அப்போது இங்கு தொடர்ச்சியாக வழிபடும் பக்தர்களுக்கு இங்கு வாலை தெய்வமும், வாலைகுரு சித்தரும், அவர் சீடர் காசியானந்தாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.

ஆனால் எப்படி ஆலயம் கட்டுவது?. எங்கு கட்டுவது..? யாரிடம் கேட்பது?. கேட்பவருக்கு கேட்டபடி வாக்கு கொடுக்கும் அற்புத இடமல்லவா..? அங்கே ஒருவர் சொன்னார்.

‘இவ்விடத்தில் விபூதியை பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அவர்கள் அருள்பாலிக்கும் இடத்தினை கூறுவார்கள்’ என்றார்.

அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே விபூதியை எடுத்து அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறு நாள் காலை விடிந்து வந்து பார்த்த போது, சித்தர்கள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினை கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலைகுரு சாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.

சிவ அபிஷேகமும்.. பலன்களும்..

சிவ அபிஷேகமும்.. பலன்களும்..

அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.

பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.

கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.

தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.

மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.

புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.

இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள்.

ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.

அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.

அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.

திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.

மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.

மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்.

உன்னை ஒன்று கேட்பேன்


திருச்செந்துாரில் முத்தம்மை என்னும் பெண் இருந்தாள். கோயிலில் பக்தர்கள் பாடுவதை கண்ட அவளுக்கு, முருகன் மீது பக்தி உண்டாக, தினமும் பாடுவதை கடமையாக கொண்டாள். இளமை கழிந்து, முதுமை அடைந்த முத்தம்மைக்கு மனதில் ஒரு ஏக்கம் எழுந்தது. 

''முருகா! உன்னை ஒன்று கேட்பேன். எவ்வளவோ காலமாக நான் பாடுகிறேன். அதன் பயனாக, என் உயிர் பிரியும் முன் உன்னை காணும் பாக்கியம் தருவாயா'' என்று வேண்டினாள். ஒருநாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு இளைஞன் துாண் மறைவில் நிற்பது போலிருந்தது.

முத்தம்மை,''ஏன் மறைவாக நிற்கிறாயப்பா...அருகில் வரலாமே'' என்றாள். ஆனால் அந்த இளைஞன் பதிலேதும் சொல்லாமல் சென்றான். ஆனாலும் அவனைக் கண்ட முத்தம்மையின் மனம், இனம் புரியாமல் மகிழ்ந்தது. அன்றிரவு முருகனின் திருவடியை சிந்தித்தபடி துாங்கினாள். 

மறுநாள் காலையில், யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ஜன்னல் வழியாக பார்த்தாள் முத்தம்மை. துாண் மறைவில் நின்ற இளைஞன் மனைவியுடன் நின்றிருந்தான். 

''யார் நீங்கள்? இந்த காலைப்பொழுதில் எதற்காக வந்தீர்கள்? என்று எதுவும் முத்தம்மைக்கு கேட்கத் தோன்றவில்லை. காந்தம் கண்ட இரும்பு போல, அவர்களுடன் கிளம்பினாள் முத்தம்மை.

இளைஞனும், அவன் மனைவியும் முன்னே நடக்க, முத்தம்மை பின் தொடர்ந்தாள். திருச்செந்துார் கோயில் வந்ததும், அங்கு இளைஞன் முருகனாகவும், அவன் மனைவி வள்ளியாகவும் காட்சியளித்தனர். நேரில் தரிசித்த மகிழ்ச்சியில் முத்தம்மையின் உயிர், முருகனின் திருவடியில் கலந்தது.

கண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்

கண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொதுப் பொருள் :

சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான   நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.

வீடு, மனை சங்கடங்கள் தீர பரிகார தலங்கள்

வீடு, மனை சங்கடங்கள் தீர பரிகார தலங்கள்

மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் இன்று வீடு, மனை சங்கடங்கள் தீர வழிபாடு செய்ய வேண்டிய பரிகார ஸ்தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

* அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

* தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

* பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

* வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல், காஞ்சீபுரம்.

மகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர் கோவில் - திருநின்றியூர்

மகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர் கோவில் - திருநின்றியூர்

சோழ மன்னனான கோச்செங்கோட்சோழன், தில்லை என்னும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க விரும்பினான். அதற்காக தனது மந்திரியுடனும், படைவீரர்களுடனும் தில்லை நோக்கிப் பயணமானான். மன்னன் பல்லக்கிலும், மந்திரியும் மற்ற வீரர்களும் நடந்தும் பயணத்தைத் தொடர்ந்தனர். பகலிலும் இரவிலும் நடந்த அவர்கள் இரவில், காடா விளக்கின் துணையோடு காட்டுப்பகுதியைக் கடந்தனர்.

திருநின்றியூர் என்ற ஊரை அடைந்த போது நன்றாக இருட்டிவிட்டது. காடா விளக்குடன் அவர்கள் நடக்க முயன்ற போது, அந்த ஊரின் எல்லையைத் தொட்டதும் அனைத்து காடா விளக்குகளும் அணைந்தன. மீண்டும் ஏற்றிய போதும் அவை மறுபடியும் அணைந்தன. விளக்கு அணைந்ததால், நல்ல கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி, ஊரின் எல்லையைக் கடந்த பின்னர், காடா விளக்கை ஏற்ற அது நன்றாக எரிந்தது.

மன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தில்லை சென்று ஆடலரசனை தரிசனம் செய்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் திரும்பினர். வரும் வழியில் திருநின்றியூரில் மறுபடியும் காடா விளக்குகள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு வந்ததும் அணைந்தன. இதற்கு என்ன காரணம் என்று அறிந்து வர மந்திரியை பணித்தார் மன்னர்.

விடிந்தது.. மந்திரி யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து சுற்றிலும் பார்வையை படரவிட்டபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

அவனை அழைத்து இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா? எனக்கேட்டார் மந்திரி. ‘உண்டு’ என்ற அந்தச் சிறுவன்.. ‘தினம் இரவில் காமதேனு வானிலிருந்து இங்கே ஓரிடத்தில் வந்து இறங்கி, அங்கே பாலை சுரக்கிறது’ என்று ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். வியந்த மன்னரும், மந்திரியும் அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தனர். சிறிது தொலைவு சென்றதும் மன்னரின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அவரால் இயலவில்லை.

மந்திரி பெரிய கல் போன்ற ஒரு இரும்பு குண்டைக் கொண்டு வந்தார். ‘மன்னா! இதை சேற்றில் ஊன்றி மேலே வாருங்கள்’ என்றார் மந்திரி.

அவர் சொன்னபடியே மன்னர் அந்த இரும்பு குண்டை வாங்கி தரையில் பலமாக ஊன்றினார். மறுகணம் தரையிலிருந்து ரத்தம் பீரிட்டது. பதறிப்போன மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்ய அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டார். அனைவருக்கும் வியப்பு. மன்னன் கண்டெடுத்த அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயமே திருநின்றியூரில் உள்ள ‘லட்சுமி புரீஸ்வரர்’ ஆலயம்.

கோவில் அமைப்பு :

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம். நடுவே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து சிறப்பு மண்டபமும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி உலகநாயகி, நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் பத்மமும், அட்சயமாலையும் அலங்கரிக்க கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அருள்புரிகின்றன. திருச்சுற்றில் பிள்ளையார், பரிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பரசுராமர், சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் என மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான இந்த ஆலயத்தில், திரிபுவன சக்கரவர்த்தி ராஜ ராஜ தேவனின் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானை நினைத்து, மகாலட்சுமி வரம் வேண்டி தவம் இருந்த தலம் இது. அவளது தவத்தைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்?’ என வினவினார்.

மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘தான் என்றும் விஷ்ணுவின் மார்பில் குடியிருக்க வேண்டும்’ என்று வேண்ட சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.

சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் அவர்களின் துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தல இறைவிக்கு சந்தனக்காப்பிட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக தினமும் பயன்படுத்தினால், மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்படி தந்தை கட்டளையிட தன் தாயைக் கொன்றார் பரசுராமர். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியது. தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை சரணடைந்து பாவவிமோசனம் பெற்றார் பரசுராமர். அவரது திருமேனி ஆலயத்தில் மேற்கு திருச் சுற்றில் தனி சன்னிதியில் உள்ளது.

ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூறு பக்தர்கள் இறைவனை தரிசித்து அன்று பலன் பெறுகின்றனர்.

இந்தக் கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீர்காழி பேருந்து தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருநின்றியூர். 

இது தான் புதையல் யோகம்

நோயில் வாடிய விவசாயி தன் மகன் முருகனை அழைத்தார்.  '' நான் சொல்றதைக் கேளப்பா! என் காலத்திற்கு அப்புறமா வயலை யாருக்கும் வித்திடாதே! அங்கே புதையல் வச்சிருக்கேன். எந்த மூலையில இருக்குதுன்னு ஞாபகமில்லே! ஒரு இடம் பாக்கி இல்லாம கலப்பையால நல்லா உழுதிடு. புதையல் யோகம் கிடைக்கும்'' என்று சொல்லி விட்டு உயிர் விட்டார். இந்த ரகசியத்தை அவன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஒருவாரம் கழிந்தது.அப்போது கோடை மழை கொட்டியது.

அந்த நேரத்தில் முருகன் கலப்பையுடன் புதையலைத் தேடி வயலுக்குப் போனான். அதைக் கண்ட முருகனின் அம்மா, ''கணவர் இறந்ததும், மகனுக்கு நல்ல புத்தி வந்திருச்சு '' என எண்ணினாள். வயலில் ஒரு மண்கட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. 

மூலை முடுக்கெல்லாம் ஆழமாக உழுதான். புதையல் கிடைத்தபாடில்லை. அப்பா மீது கோபம் எழுந்தாலும், வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்த வயல்களில் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். உழுதது வீணாகாமல் இருக்க, முருகனும் விதைத்தான். விதைகள் முளைவிட்டதைக் கண்டு மகிழ்ந்தான். ஆர்வமுடன் பயிர்களைப் பாதுகாத்து நீர் பாய்ச்சினான். 

அறுவடை நாள் நெருங்கியது. எதிர்பார்த்ததை விட இருமடங்கு விளைச்சலோடு, நிறைய பணம் வர மகிழ்ச்சியாக வாழ்ந்தான். உழைப்பின் அருமையைத் தான் 'புதையல் யோகம்' என்று அப்பா சொன்னது அவனுக்கு புரிந்தது.

Monday 28 May 2018

மூகாம்பிகையை எப்படி வர்ணித்து பாடி வழிபட வேண்டும்?

மூகாம்பிகையை எப்படி வர்ணித்து பாடி வழிபட வேண்டும்?

கொல்லூர் மூகாம்பிகையை நேரில் பார்த்து வழிபடும் அரிய வாய்ப்பு கிடைத்தால், அவளிடம் மனம் விட்டுப் பேசத் தயங்காதீர்கள். அவளிடம் உரிமையாடு உங்கள் உள்ளத்து குமுறல்களை கொட்டுங்கள். அப்படியே திரும்பி வந்து விடாதீர்கள்.

நாலு வார்த்தை நல்ல விதமாக புகழ்ந்து பேசுங்கள். மூகாம்பிகை மகிழ்ச்சி அடைவாள். அவள் மனம் குளிரும் போது நமக்கு வேண்டியதை எல்லாம், கேட்டதை எல்லாம் தருவாள்.

அம்மா... தாயே... ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம். அன்னையை வர்ணித்து படியுங்கள். நல்லதே நடக்கும்.

ஜெயந்தி, மங்களா, காளி, பத்ரகாளி, கபாலினி, துர்க்கா, சமா, சிவா, தாத்ரி, ஸ்வாகா, ஸ்வதா என்று பல்வேறு விதமான நாமதே யங்களைப் பெற்றவளே! உனக்கு என் நமஸ்காரம்.

மது என்னும் அசுரனையும், கைடபன் என்னும் அசுரனையும் நாசம் செய்தவளே! நான்முகனுக்கு அருள்புரிந்தவளே! உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல வடிவினை அளிப்பாய். வெற்றியை அளிப்பாய், புகழைக் கொடுப்பாய். என் எதிரிகளை அழிப்பாய்! அப்படிப்பட்ட வல்லமை உடைய உனக்கு என் நமஸ்காரம்.

உலகத்தில் உள்ள அனைவராலும் வணங்கப்படக் கூடிய பாத கமலங்களை உடையவளே! தேவர்களுக்கு அசுரர்களினால் ஏற்படும் பயத்தினை விரட்டியடித்து அவர்களுக்கு வெற்றி என்னும் சவுபாக்கியத்தினை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்.

மகிசாசூரன் என்னும் அசுரனைக் கொன்று பூமியைக் காப்பாற்றுபவளே! நான்முகனுக்கு நல்ல வரங்கள் பலவற்றை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்!
பக்த பீஜன் என்னும் அசுரனைக் கொன்ற தேவியே! சண்டன் என்னும் அசுரனையம், முண்டன் என்னும் அசுரனையும் வதம் செய்தவளே! எண்ண முடியாத அர்தான வடிவம் பெற்றவளே! எல்லாவிதமான எதிரிகளையும் நாசமாக்குபவளே!

பரப்ருஹ்ம ஸ்வரூபிணியாக விளங்கும் சண்டிகையே! எப்போதும் எவர் உன்னைப் பக்தியுடன் வணங்குகின்றார்களோ அவர்களுக்கும், உன்னை எப்போதும் வணங்கும் எனக்கும் அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைத் தரவேண்டும். புகழைத் தரவேண்டும் என் எதிரிகளை அழிக்க வேண்டும்.

சண்டிகை தேவியே! வியாதியினை முற்றிலும் ஒழிப்பவளே! பக்தியின் காரணமாக உன்னை வணங்குவோருக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

சண்டிகையே! யார் உன்னை எப்போதும் பக்தியுடன் அர்ச்சனை செய்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

தேவி, சகல விதமான பாக்கியங்களையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். பேரின்பமாகிய பரம சுகத்தினையும் அளிக்க வேண்டும்.

எதிரிகளுக்கு நாசத்தைக் தர வேண்டும். பிரமாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.


தேவி, மங்களமான விஷயங்களை அருள வேண்டும். பிரம்மாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.
கல்வியில் சிறந்தவனாகவும், புகழ் பெற்றவனாகவும், நிறைந்த செல்வம் உடையவனாகவும் என்னை மாற்றி அருள வேண்டும்.

மிகவும் பிரபலமான அசுரர்களுடைய கர்வத்தினை அழித்தவளே! சண்டிகையே, உன்னை நமஸ்கரிக்கும் எனக்கு நல்ல குணத்தினைத் தருவாய், மகிழ்ச்சியைக் கொடுப்பாய்.

நான்கு கைகளைப் பெற்றவளே! நான் முகனால் துதி செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!

பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவர்களும், அரக்கர்களும் தங்கள் மணி முடியில் உள்ள ரத்னங்கள் கீழே புரளும் வண்ணம் தொட்டு வணங்கத்தக்க திருப் பாத கமலங்களை உடையவளே! அம்பிகையே!

இந்திராணியின் கணவனான இந்திரனால் உள்ளன்புடன் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, கொடிய புஜ பல பராக்ரமம் மிகுந்த அசுரர்களுடைய கர்வத்தினை நாசம் செய்தவளே!

தேவி, எவ்வித உறவுகளும் அற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான மோட்ச சாம்ராஜ்யத்தை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவளே! அம்பிகையே!

மனத்திற்கு இனிமையைத் தரக் கூடியவளாகவும் 

மனத்தின் போக்கினை அறிந்து நடப்பவளாகவும் 

கடக்க முடியாத சம்சார சாகரத்தினைக் கடப்பதற்கு உதவி புரிபவளாகவும் 

நல்ல குலத்தில் உதித்தவளாயும் உள்ள மனைவியை அளிக்க வேண்டும்.

மூகாம்பிகையை வழிபடும் போது இதை படித்த பிறகே மகா ஸ்தோத்திரமான தேவி மகாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இதைப் படிப்பதன் மூலம் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.

சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்

சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்

அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப்பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.

இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. தினசிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப்பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது. முதலாம் குலோத்துங்கசோழனின் பேரரசி மதுராந்தகி. இவளுக்கு தினசிந்தாமணி என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவளின் பெயரால் சோழமன்னன் உருவாக்கிய தலமே இன்றைய சிந்தாமணி

ஆலயஅமைப்பு :

ஊரின் கடைக்கோடியில் வயல்வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப்படுகின்றன. அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சிதருகிறார். அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது. அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள். சன்னிதியின் எதிரில் அம்பிகையின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரியநந்திதேவர் இறைவனை நோக்குகிறது. மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சிதருகின்றார். குலோத்துங்கச் சோழீஸ்வரமுடையமகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ் வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திருநாமத்தைப் பெற்றுள்ளார். இந்தத் திருமேனியும், கோட்டத்தில் அமைந்துள்ள திருமேனிகளும், சுவாமி சன்னிதியும் மட்டுமே பழமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தின் சிறப்பு, இங்கு வடிக்கப்பட்டுள்ள சிலா வடிவங்கள அனைத்தும் கலைநயத்தினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்துவதாகும். நர்த்தன விநாயகர், ஊர்த்துவத் தாண்டவம், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அடிமுடிதேடும் காட்சி, பிரம்மன், அம்மையப்பன், துர்க்கை, காலபைரவர் போன்ற சிலா வடிவங்கள் வெகுசிறப்புடன் அமைந்துள்ளன. இவை சோழ மன்னர்களின் காலத்தை உறுதி செய்கின்றன.

இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சன் னிதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்கிறார்கள். சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக்கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

சித்தர் பீடம் :

ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரின் மீது பஞ்சபூதேஸ்வரர் திருமேனியும், ஞானவிநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன. இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள். 

அமைவிடம்:

விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது.

பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்

பூலித்தேவனுக்கு அருள் செய்த வேலப்ப தேசிகர்

ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை. இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.

வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.

இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.

ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.

காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.

பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.

இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.

வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.

1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.

அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.

எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.

பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.

உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.

‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.

சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.

குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.

வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.

ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.

பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.

சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.

ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது. 

நோய் தீர்க்கும் ஸ்ரீசக்கரம்

ஆதிசங்கரர் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தவர். அவரை பின்பற்றியே வேலப்ப தேசிகர், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்றைப் பதித்து அருளினார். எனவே இவரை ஆதிசங்கரரின் மறு அவதாரம் என பக்தர்கள் போற்றுகிறார்கள். ஸ்ரீ சக்கரம் முன்பு அமர்ந்து வழிபடுவோர் பில்லி, சூனியம், சித்தப்பிரமை போன்றவை நீங்கப் பெறுகிறார்கள்.

பொதுவாக ஸ்ரீ சக்கரம் கோவிலில் மூல ஸ்தானத்துக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் சங்கரன்கோவிலில் மட்டும் மூலஸ்தானத்தில் வெளியே தரைப்பகுதியில் ஸ்ரீசக்கரத்தினை, வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், தன் உடலில் உள்ள எதிர்மறை சக்தி அனைத்தையும் நம்முடைய மூலாதர சக்கரம் வழியாக ஸ்ரீசக்கரம் பெற்றுக்கொள்ளும். சங்கரன்கோவிலில் உள்ள பல பெருமைகளில், வேலப்ப தேசிகர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரமும் ஒன்று. எனவே இந்த சக்கரத்தினை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். 

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

காரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதா?எவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா? அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான்! இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள்மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு பெருமாள் குடதிசை (வடக்கு) பாதம் வைத்து குணதிசை (தெற்கு) சிரம் (தலை) வைத்து பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார். துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு மலைபாதையில் பயணித்தால் பெருமாள் மலையின் உச்சியை அடையலாம். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமீது நடந்து சென்றால் 1500 படிக்கட்டுகளையும். 

திருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து கோவிலை அடையலாம். திருப்பதியில் உள்ளது போன்று அலமேலுமங்கை கோயிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. அதுமட்டுமல்ல திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்ற கிராமம் இருப்பது போன்று இந்த கோவிலுக்கு அருகிலும் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. எனவே இந்த கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கோவில் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற் சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி வெங்க டாஜலபதி பெருமாளை சேவித்து இறைவனடி சேருவதற்காக தனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட இந்த மலையில் இருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார். 

திருப்பதி பெருமாள் அவரது தவ வலிமையை கண்டு இந்த மன்னனின் வேண்டுகோளின் படி இந்த மலையில் அவன் முன்பு சங்ராயுத பாணியாக திருமண கோலத்தில் பிரசன்னமானார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருநாமத்தோடு திருமணகோலத்தில் பிரசன்னமானதால் கல்யாண பிரசன்ன வெங்கடாஜலபதி என்றும் ஸ்ரீனிவாசன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

பிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து 9 சனிக்கிழமைகளில் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாளைய திருமணத் தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் அதோடு வேலை வாய்ப்புகளுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அரசாங்கம் அரசியலில் நிலைத்து இருக்க மேன்மை பெறலாம். செங்கோலுடன் இருக்கும் பெருமாளை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த கோவிலை எழுப்பிய மன்னர் பெருமாளுக்கு வலது புறமும் ஸ்ரீ அலமேலுமங்கை தாயாருக்கு இடது புறமும் பாலகனாக வீற்றிருக்கிறார்.

தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு, சொல் உன்னுடையதாகவும். செயல் என்னுடையதாகவும் இருக்க அந்த மன்னருக்கு பெருமாள் அருள் புரிந்ததால் மன்னரே இந்த ஸ்தலநாயகனாக தற்போது ஷேத்திர பாலகன் கருப்பண்ணார். வீர்பசுவாமி இலந்தடியான் போன்ற திருநாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஸ்தல நாயகருக்கு திருப்பதி பெருமாள் பிரசன்னமானதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு வரும் பக்கதர்கள் செலுத்துகிறார்கள்.

புரட்டாசி வழிபாடு :- ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் விசேஷ அலங்காரத்துடன் இத்தலத்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவோணத்தன்று சிரவண உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள். கிரிவலம் வருவதால் எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெறு வதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை

விரதமிருந்து வைகாசி விசாகம் வழிபடும் முறை

இன்று (திங்கட்கிழமை) வைகாசி விசாக திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். 

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். 

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் 

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.

முருகனின் முதல் கற்கோயில்



புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகில் கண்ணனுாரில் முருகனின் முதல் கற்கோயிலான பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. 

தலவரலாறு: 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. முருகனின் வாகனமான மயிலுக்கு பதில் யானை இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாகும். சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது. 

மூலவர் பாலசுப்பிரமணியர் கிழக்கு நோக்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேல் கையில் திரிசூலம் உள்ளது. வலதுகை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல்கை ஆயுதம் ஏந்தியும், இடதுகை இடுப்பில் ஊன்றியும் உள்ளது. இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்சமாலை, கால்களில் தண்டையும் உள்ளன. 

வாசல் முதல் விமான கலசம் வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் உள்ளன. கருவறை சுவரிலுள்ள துாண்கள், பூதகணங்கள், மேற்கூரைகள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் மயில்வாகன முருகன் சன்னதி உள்ளது. இவரது சிலை பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதும். கோயிலுக்கு வெளியே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். 

வியாழக்கிழமையில் முருகனுக்கு பால், பஞ்சாமிர்த அபிேஷகம் செய்து தினைமாவு படைத்து வழிபட நினைத்தது நிறைவேறும். கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் இருப்பதால் வாசல் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஜன்னலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.

தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இக்கோயில், தமிழகத்தின் கலைச்சின்னமாக திகழ்கிறது. போக்குவரத்து, மின் இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து துார்வாசபுரம் சாலையில் 2 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, 
நேரம்: காலை 10:30 - 11:30 மணி
தொடர்புக்கு: 94427 62219, 04322 - 221 758