மகாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்ச சன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கெளமோதகி), வாள் (நாந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இவைகளில் வாளும், சாரங்கமும் மறைந்திருந்து அருளும் ஆயுதங்களாகும். இந்த ஆயுதங்கள் ஒவ்வொன்றும் அவருக்குக் கிடைத்ததன் பின்னணியில் புராண வரலாறுகள் உள்ளன. இவைகளில் சங்கு மற்றும் சக்கரம் இரண்டும், அவர் ஈஸ்வரனிடம் இருந்து கேட்டுப் பெற்றவைகளாகும்.
சங்கின் பிறப்பு பற்றி தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக அவன் அசுர குலத்தில் சங்க சூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது. சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலாயுதத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்லப்பட்டுள்ளது.
சங்கில் பலவகைகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம்புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் 108 மற்றும் 1008 என்ற எண்ணிக்கையில் வைத்து செய்யப்படும் சங்கு பூஜை, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும். இடது கையால் பிடிக்கத் தகுந்த அமைப்புடன் இருக்கும் சங்குகளே வலம்புரி சங்குகளாகும். இவை புனிதமும் ஆற்றலும் நிறைந்தவை. லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். காதில் வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என சதா நேரமும் ஒலித்த வண்ணம் இருக்கும்.
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி சங்குக்கு மட்டுமே உண்டு. வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
சலாந்திரன் என்ற அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் உருவாக்கிய சுதர்சன சக்கரத்தின் சக்தியை அறிந்து, அது தன்னிடம் இருந்தால் எதிர்காலத்திற்குப் பயன்படும் என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இதையடுத்து அவர், ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, 1000 தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் மலர்களுக்கு ஒன்று குறைவாக இருக்க, தன்னுடைய கண் மலரையே பெயர்த் தெடுத்து ஈசனை அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சுதர்சன சக்கரம் கிடைத்தது.
அதன்பிறகு பாற்கடலில் இருந்து வெளிவந்த லட்சுமியின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்து கொண்ட மகாவிஷ்ணு, லட்சுமியோடு வெளிவந்த சங்கு மற்றும் துளசியையும் தனதாக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். சங்கில் இருந்து எழும் ‘ஓம்’ எனும் ஒலி, துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது என்பதால், அதனைத் தன் இடது கரத்தில் தரிக்க விரும்பியவர், ஈசனை வழிபட்ட அந்த சங்கை பெற்றார் என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோவில் தல வரலாறு சொல்கிறது.
சங்கசூடனால் கடலில் உருவான சங்குகள் தனது சந்ததியினருக்குச் சொந்தமானவை என்று உரிமை கொண்டாடினான் பாஞ்சன் என்ற அசுரன். இதனால் அவனுடன் போரிட்டு வென்றதால், அவரிடம் உள்ள சங்கிற்கு ‘பாஞ்சசன்யம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக மற்றொரு வரலாறும் உள்ளது.
தலைச்சங்காடு திருத்தலத்திற்கு, தலையுடையர் கோவில்பத்து, தலைச்சங்கானகம், சங்குவனம், சங்காரண்யம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தலைமையான சிவாலயத்தை கொண்டிருந்த காரணத்தாலும், திருமாலின் வேண்டுதலை ஏற்று சிவன் சங்கு வழங்கி அருள்புரிந்ததாலும் (தலபுராணம் சொல்வது), சங்குபூக்கள் பூத்துக் குலுங்கும் வனமாக இருந்தமையாலும் (கல்வெட்டுச் செய்தி), பூம்புகார் துறைமுகம் செழிப்புற்று விளங்கிய காலகட்டத்தில் கடலில் இருந்து எடுக்கப்படும் சங்குகள் விற்பனை செய்யப்படும் இடமாக இவ்வூர் இருந்தமையாலும் (வரலாறு) இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகிறது. இருப்பினும் அவை அத்தனையும் பொருந்துவதாகவே உள்ளது.
திருமாலுக்கு சங்கு வழங்கிய இறைவன் ‘சங்காரண்யேஸ்வரர்’, ‘சங்கவனேஸ்வரர்’, ‘சங்கருணாதேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. தலவிருட்சம் புரசு மரம். தீர்த்தம் சங்கு தீர்த்தம். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 108-வது திருத்தலம் இதுவாகும். மேலும் பஞ்சாரண்ய தலங்களான சுவேதாரண்யம் (திருவெண்காடு), வேதாரண்யம் (திருமறைக்காடு), வில்வாரண்யம் (திருச்சாய்க்காடு), வடவாரண்யம் (திருவாலங்காடு), சங்காரண்யம் (தலைச்சங்காடு) என்னும் ஐந்து தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.
கோச்செங்கட்கண் சோழனால் மூன்று பிரகாரங்களுடன் வடக்குநோக்கி கட்டப்பட்ட மாடக்கோவில் இது. ஆனால் தற்போது இவ்வாலயத்தில் இரண்டு பிரகாரங்கள் மட்டுமே உள்ளன. தேரோடிய பிரகாரம் மக்கள் வசிப்பிடமாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆலய வாசலின் முன்னால் தல தீர்த்தமான சங்குதீர்த்தம் இருக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இத்தீர்த்தத்தில் நீராடி நெய்தீபம் ஏற்றி இவ்வாலய இறைவனை வழிபடுவதுடன், அம்பாளுக்கு செய்யப்படும் சந்தனக்காப்பில் சிறிதளவு வாங்கி பிரசாதமாக கருதி உண்டும் வயிற்றில் பூசியும் வந்தால் குழந்தையின்மை குறை நீங்கும், தீராத வயிற்றி வலி, தோல் நோய் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆலய அமைப்பு :
கோபுரம் இல்லாத நுழைவு வாசல் மண்டபத்தின் இடதுபக்கத்தில் அதிகாரநந்தி, வலது பக்கத்தில் சுதை சிற்ப முனீஸ்வர் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், பலி பீடம், நந்தியம்பெருமான் அருள்பாலிக்கின்றனர். விநாயகரின் இருபக்கத்திலும் சங்கநிதி பதுமநிதி இருவரும் இடம்பெற்றுள்ளனர். பிரகாரத்தின் பின்பக்கத்தில் தென்கிழக்கில் விநாயகர், அவருக்கு அடுத்ததாக சீனுவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவர் இவ்வூர் பஜனை மடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் ஆவார்.
ஒருசாரர் சங்கு வேண்டி சிவனை வழிபட்ட பெருமாள் இவரே என்றும், மற்றொரு தரப்பினர் இவ்வாலயத்திற்கு தெற்கே அரைகிலோமீட்டர் துரத்திலுள்ளதும், நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றுமான தலைச்சங்கை நான்மதியபெருமாளே அவர் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.
சங்கு வேண்டி தவம் செய்த பெருமாள், ஆலயத்தினுள்ளே சிவனுக்கு வலதுபுறத்தில் உள் பிரகாரத்தில் சிறிய வடிவில் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். சீனுவாசப் பெருமாள் சன்னிதிக்கு அடுத்து சிங்காரசுப்ரமணியர் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். வடமேற்கில் கஜலட்சுமி சன்னிதியும், பின்னால் மதில்சுவரை ஒட்டி ஜேஷ்டாதேவியின் சன்னிதியும் உள்ளன. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் அருள்கிறார். அம்பாள் சன்னிதியை ஒட்டி ஆலயத்தின் தீர்த்தக்கிணறு இருக்கிறது.
அடுத்ததாக ஆலயத்தின் இறைவி சவுந்தரநாயகி கிழக்கு நோக்கி தனி சன்னிதியில் இருந்தவாறு அருள்பாலிக்கிறார். அம்பாள் சன்னிதியில் அவருக்கு வலதுபுறத்தில் புவனத்தைக் கட்டிக்காக்கும் புவனேஸ்வரி தாயாரும், சன்னிதிக்கு வெளியே ஆலய வாசலை ஒட்டி ஸ்ரீலிங்கம், பைரவர் மற்றும் சந்திரன் உள்ளனர்.
வெளிப்பிரகாரத்தில் இருந்து உள் பிரகாரத்துக்குச் செல்லும் வழி நேராக அமைக்கப்படாமல் மாடக்கோவிலுக்கே உரிய முறையில் பிரகாரத்தின் ஒருபகுதியில் அதாவது கிழக்குப் புறமாக உயரமான படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் கொடிமரத்தில் இருந்து வணங்குவோருக்கு இறைகாட்சி கிடைக்காது என்பதால், வழக்கமான வாசல் இடம்பெறும் இடத்தில் பிரதோஷநாயகர்-நாயகி கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரதோஷநாயகர்-நாயகி கற்சிலையாக காட்சியளிக்கும் திருக்கோவில் இது மட்டுமே ஆகும்.
அநேக ஆலயங்களில் தெற்குமுகம் பார்த்து அருளாசிதரும் ஆடல்வல்லப்பெருமான் இவ்வாலயத்தின் அலங்காரமண்டபத்தில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் அவரை வணங்கும் அடியார்களான நால்வர் திருமேனி இடம் பெற்றுள்ளது. மகாமண்டபத்தினுள் கருவறை மையத்திற்கு வடகிழக்கில் அகிலாண்டேஸ்வரரும், கிழக்கில் சங்கு வேண்டி தவம் புரிந்த திருமாலும், சண்டிகேஸ்வரரும், ராமர் மற்றும் சீதாதேவியும், தென்கிழக்கில் வலம்புரி விநாயகரும், தெற்கில் பாலசுப்பிரமணியரும், தென்மேற்கில் தனாகார்ஷண வாயுலிங்கேஸ்வரரும், வடமேற்கில் நீலகண்டேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறைச்சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வரர், சுரகேஸ்வரர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது பிரகாரத்தின் மையத்தில் அமைந்துள்ள கருவறையில் தண்டி, முண்டி இருவரும் காவல்புரிய, திருமாலுக்கு சங்கு வழங்கி அருள்பாலித்த சங்காரேண்யேஸ்வரர் மூன்றடி உயர சுயம்பு மூர்த்தியாக சங்கு போன்ற உருண்டையான வடிவில் விசாலமான கருவறையில் திருக்காட்சி தருகிறார். இவர் மீது எண்ணெய் அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் மயிர்கால்கள் இருப்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். இக்காட்சி காண்பவர்களை புல்லரிக்கச் செய்கிறது. எங்கும் காணக்கிடைக்காத இவ்வகை லிங்கத்தை ‘ரோமாஞ்சன லிங்கம்’ என்பர்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந் திருக்கும்.
புதுச்சேரி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீர் காழிக்கும், ஆக்கூருக்கும் இடையில் தலைச்சங்காடு அமைந்துள்ளது. சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்காலில் இருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. அருகாமை ரெயில் நிலையம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை.
No comments:
Post a Comment