காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் சித்ரகுப்தர் மூலவராக தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். உயிர்களின் பாவ,புண்ணிய கணக்கு எழுதும் இவரை மாணவர்கள் வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர்.
தல வரலாறு: சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்த பிரம்மாவின் உடம்பில் இருந்து, கையில் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன், தெய்வீக வடிவில் ஒருவர் வெளிப்பட்டார். தவத்தின் பலனாக இந்த அதிசயம் நிகழ்ந்ததை அறிந்த பிரம்மா, ''ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், 'சித்ர குப்தர்' என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என பெயர் பெறுவர்” என்று அருள்புரிந்தார். இவர்கள் தற்போது 'கருணீக மரபினர்' எனப்படுகின்றனர். சித்ரகுப்தர் காளி தேவியை வழிபட்டு, எண்ணும், எழுத்தும் கற்றுக் கொண்டார். பிறகு உஜ்ஜயினி சென்று மகாகாளேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமை பெற்றார். ஐப்பசி மாதத்தில் வரும் எம துவிதியையன்று எமலோகத்தில் கணக்கராகப் பதவி ஏற்றார். இவருக்கு காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் கோயில் உள்ளது.
ராஜாதி ராஜன்: முன்னொரு காலத்தில், சவுதாஸ் என்ற மன்னன் சவுராஷ்டிர தேசத்தை ஆட்சி செய்தான். கொடுங்கோலனான அவன் மக்களைத் துன்புறுத்தினான். 'நானே ராஜாதிராஜன்' என்று ஆணவத்துடன் திரிந்தான். ஒருநாள், காட்டில் வேட்டையாடச் சென்ற போது தன் உடன் வந்தவர்களை விட்டு வழி தவறினான். அந்த நேரத்தில்,
'' ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ர குப்தாய தீமஹி
தந்நோ: லோக ப்ரசோதயாத்''
என்னும் காயத்ரி மந்திரம் ஒலித்தது. அந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு முனிவர்கள் யாகம் நடத்தக் கண்டான். ''என் ஆணையில்லாமல் யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொல்வேன்” என கத்தினான். முனிவர் ஒருவர், 'நீ யார்? ஏன் இடையூறு செய்கிறாய்?'' என்று கேட்டார். அதற்கு, “நான் ராஜாதி ராஜன் சவுதாஸ்'' என கர்ஜித்தான். அதற்கு அவர், ''உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரே ராஜாதி ராஜன். அவரை வழிபட்டு நன்மை பெறுங்கள்” என்றார். அதைக் கேட்ட சவுதாஸுக்கு ஞானம் பிறந்தது. மனம் திருந்தி நல்லாட்சி நடத்தி தொடங்கினான். சவுதாஸின் ஆயுள்காலம் முடியவே, எமதுாதர்கள் எமலோகம் அழைத்துச் சென்றனர். அங்கு சித்ரகுப்தர், ''பிரபோ...சவுதாஸ் என்னும் இம்மன்னன் செய்த பாவம் கணக்கில் அடங்காது. ஆனால், தற்போது மனம் திருந்தியதால் சொர்க்கம் செல்ல அனுமதிக்கலாம்” என்றார். அதன்படியே, சொர்க்கம் செல்ல அனுமதிக்கப்பட்டான்.
கல்வி யோகம்: நவக்கிரகங்களில் ஒருவரான கேதுபகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். இவரை வணங்குவதால் கேது தோஷம் நீங்கும். நல்ல புத்தி உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் ஏற்படும்.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலுள்ள நெல்லுக்காரத்தெரு
விசேஷ நாட்கள் : சித்ராபவுர்ணமி, எம துவிதியை
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 08:00 மணி
தொடர்புக்கு: 044-2723 0571, 97894 22852, 94436 44256
No comments:
Post a Comment