Monday, 28 May 2018

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

திருமணத்தடை நீங்கும் தென் திருப்பதி

காரணம் தெரியாமல் திருமணம் தள்ளி போகிறதா?எவ்வளவோ வரன் பார்த்தும் சரியான வரன் அமைய வில்லையா? அப்படியென்றால் நீங்கள் வரவேண்டியது துறையூர் பெருமாள் மலைக்கு தான்! இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள்மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு பெருமாள் குடதிசை (வடக்கு) பாதம் வைத்து குணதிசை (தெற்கு) சிரம் (தலை) வைத்து பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார். துறையூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு மலைபாதையில் பயணித்தால் பெருமாள் மலையின் உச்சியை அடையலாம். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலைமீது நடந்து சென்றால் 1500 படிக்கட்டுகளையும். 

திருப்பதியை போன்று 7 சிறு மலைக்குன்றுகளையும் கடந்து கோவிலை அடையலாம். திருப்பதியில் உள்ளது போன்று அலமேலுமங்கை கோயிலும் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. அதுமட்டுமல்ல திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்ற கிராமம் இருப்பது போன்று இந்த கோவிலுக்கு அருகிலும் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. எனவே இந்த கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கோவில் சோழ மன்னருள் ஒருவரான கரிகாற் சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டதாகும். இவர் தனது குருவின் திருமந்திர உபதேசம் பெற்று திருப்பதி வெங்க டாஜலபதி பெருமாளை சேவித்து இறைவனடி சேருவதற்காக தனது ஆட்சியின் எல்லைக்குட்பட்ட இந்த மலையில் இருந்த ஒரு இலந்தை மரத்தின் அடியில் இருந்து தவம் செய்தார். 

திருப்பதி பெருமாள் அவரது தவ வலிமையை கண்டு இந்த மன்னனின் வேண்டுகோளின் படி இந்த மலையில் அவன் முன்பு சங்ராயுத பாணியாக திருமண கோலத்தில் பிரசன்னமானார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருநாமத்தோடு திருமணகோலத்தில் பிரசன்னமானதால் கல்யாண பிரசன்ன வெங்கடாஜலபதி என்றும் ஸ்ரீனிவாசன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

பிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து 9 சனிக்கிழமைகளில் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாளைய திருமணத் தடை நீங்கும் விரைவில் திருமணம் நடைபெறும் அதோடு வேலை வாய்ப்புகளுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அரசாங்கம் அரசியலில் நிலைத்து இருக்க மேன்மை பெறலாம். செங்கோலுடன் இருக்கும் பெருமாளை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த கோவிலை எழுப்பிய மன்னர் பெருமாளுக்கு வலது புறமும் ஸ்ரீ அலமேலுமங்கை தாயாருக்கு இடது புறமும் பாலகனாக வீற்றிருக்கிறார்.

தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளிக்குமாறு, சொல் உன்னுடையதாகவும். செயல் என்னுடையதாகவும் இருக்க அந்த மன்னருக்கு பெருமாள் அருள் புரிந்ததால் மன்னரே இந்த ஸ்தலநாயகனாக தற்போது ஷேத்திர பாலகன் கருப்பண்ணார். வீர்பசுவாமி இலந்தடியான் போன்ற திருநாமங்களுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த ஸ்தல நாயகருக்கு திருப்பதி பெருமாள் பிரசன்னமானதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இங்கு வரும் பக்கதர்கள் செலுத்துகிறார்கள்.

புரட்டாசி வழிபாடு :- ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் விசேஷ அலங்காரத்துடன் இத்தலத்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவோணத்தன்று சிரவண உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள். கிரிவலம் வருவதால் எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெறு வதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment