ஜைனர்களின் புகழ்பெற்ற ஆலயமாக இருக்கிறது, கோமதேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. வித்யகிரி என்று அழைக்கப்படும் குன்றின் மீது இந்த பிரமாண்டமான கோமதேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக்கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும். அப்போது கோமதேஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதேஸ்வரரை வழிபடுகிறார்கள். சிறந்த ஆன்மிக தலமான இதன் புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. 2006-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்தக் கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாசனில் இருந்து 54 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் குனிகல், எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால், 2 மணி நேரம் 40 நிமிடத்தில் இக்கோவிலை சென்றடையலாம்.
No comments:
Post a Comment