கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடுமலைப்பேட்டை சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.
சென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.
திருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் கந்தக் கடவுள்.
திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் திருத்தலம். இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே தோற்றத்தில் அருள்கிறார்.
பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.
பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும். ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.
காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment